ரேஷன் கடைகளில் இனி பாமாயிலுக்குப் பதில் தேங்காய் எண்ணெய்… மக்கள் கருத்தைக் கேட்கும் தமிழக அரசு!
பாமாயிலைப் பயன்படுத்துவது குறித்து மக்களில் பலருக்கு ஒருவித தயக்கம் இருந்து வருகிறது. இதனால், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அரசுக்கு விடுக்கப்பட்டு வந்தது. அதே சமயம், தென்னை சாகுபடிகளில் ஈடுபடும் விவசாயிகளும், குறிப்பாக கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த தென்னை விவசாயிகள், “ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்கினால், அது தங்களுக்கு உதவியாக இருக்கும்” என வலியுறுத்தி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, விவசாயிகளின் இந்த கோரிக்கைக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் குரல் எழுப்பி வந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரின்போது, “ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்கப்பட வேண்டும்” என பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் அதிமுக, பாமக உறுப்பினர்கள் வலியுறுத்தி இருந்தனர்.
மேலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், சமீபத்திய நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது பொள்ளாச்சியில் பேசுகையில், “கொப்பரை தேங்காய்க்கு உரிய விலை கிடைக்க நடடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதி அளித்திருந்தார்.
பொதுமக்கள் கருத்துக் கேட்பு
இந்த நிலையில் இதற்கான முதல்கட்ட நடவடிக்கையாக, ரேஷன் கடைகளில் பாமாயிலுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெயை விற்பது குறித்து பொதுமக்களின் கருத்தை அறியும் வகையில் தமிழக அரசு தரப்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கான படிவங்கள், ரேஷன் கடைகளில் வைக்கப்பட்டுள்ளன.இந்த மாத இறுதிக்குள் பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டு, விண்ணப்பங்களைத் தொகுத்து மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் சமையலுக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால், எத்தனை சதவீதம் பேருக்கு இது பயனளிக்கும் என்பதை அறிவதற்கும் கருத்து கேட்பு பயன்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாவட்டங்களில் இருந்து கருத்துகள் பெறப்பட்ட பின்னர், பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என, உணவு வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்னை விவசாயிகள் வரவேற்பு
இந்த நிலையில், அரசின் இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள தென்னை விவசாயிகள், இந்த நடவடிக்கை செயல்பாட்டுக்கு வந்தால் அது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும், கொப்பரைக்கு உரிய நியாயமான விலையை நிர்ணயித்து, இடைத்தரகர்கள் இன்றி அரசே தங்களிடமிருந்து நேரடியாக கொப்பரையைக் கொள்முதல் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நல்ல கொழுப்பை அதிகரிக்கும் தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயில் சாச்சுரேட்டட் கொழுப்பு மிக அதிகம் (82%), மோனோ அன்சாச்சுரேட்டட் மிகக் குறைவு (6%), பாலி அன்சாச்சுரேட்டட் இன்னும் குறைவு (2%). லாரிக் அமிலம் அதிகளவில் உள்ளது, இது HDL எனப்படும் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். உயர்- வெப்ப சமையலுக்கு இந்த எண்ணெய் உகந்ததாக இருக்கும்.
அதே வேளை, தேங்காய் எண்ணெயில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்புகளால், அதை அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.