முதலீடு, வேலைவாய்ப்புகளுடன் சென்னை திரும்பிய ஸ்டாலின்!
தமிழ்நாட்டை வருகிற 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர், அதாவது ரூ. 82 லட்சம் கோடி மதிப்புள்ள பொருளாதார மாநிலமாக உயர்த்த வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். அதை அடையும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதியன்று அமெரிக்கா சென்றார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அங்கு உலகப் புகழ் பெற்ற 25 முன்னணி நிறுவனங்களோடு பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் 19 நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. Google, Microsoft, Apple உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்களும், தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வந்துள்ளன.
உலகின் புகழ்பெற்ற நிறுவனங்களை ‘ஃபார்ச்சூன் 500’ என்று வகைப்படுத்துவார்கள். அதாவது உலகில் உள்ள 500 மிகப்பெரிய நிறுவனங்களின் தர வரிசைப்பட்டியல் அது. அதில் இருக்கும் 19 நிறுவனங்களிடம் இருந்து முதலீடுகளை ஈர்த்து, இன்று காலை சென்னை விமான நிலையம் வந்திறங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்.
முதலமைச்சரின் 17 நாட்கள் அமெரிக்க பயணத்தின்போது சான்பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோ நகரில் நடத்தப்பட்ட சந்திப்புகளின் பலனாக, 7,616 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 11,516 நபர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில் முதலமைச்சரின் சாதனை அமைந்துள்ளது.
சென்னையில் மீண்டும் ஃபோர்டு தொழிற்சாலை
இதனிடையே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது அமெரிக்க பயணத்தின்போது, சிகாகோவில், ஃபோர்டு நிறுவனத்தின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழ்நாட்டில் உற்பத்தியை மீண்டும் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக, ஃபோர்டு நிறுவனம் தமிழ்நாட்டில் மீண்டும் தனது உற்பத்தியை தொடங்குவதற்கு முன்வந்துள்ளது. சென்னை மறைமலை நகரில் உள்ள ஃபோர்டு நிறுவனத்தின் ஆலையை மீண்டும் பயன்படுத்த விரும்புகிறோம். இதற்கான விருப்பக் கடிதத்தை தமிழ்நாடு அரசிடம் அளித்துள்ளோம் என ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மறைமலை நகரிலுள்ள ஃபோர்டு நிறுவன ஆலை மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் போது அடுத்த மூன்று ஆண்டுகளில் 2,500 முதல் 3,000 பேருக்கு கூடுதலாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.