மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தலில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தைத் திறந்து வைத்தார். பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்ததோடு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது நத்தம் இணையவழிப் பட்டா மாறுதல் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இது குறித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கிராமப்புற மக்கள் தங்களின் நத்தம் வீட்டுமனைக்கு பட்டா வாங்குவதில் சிரமங்களைச் சந்திக்கின்றனர். அதை எளிமையாக்கத்தான் இந்தப் புரட்சிகரமான திட்டம். தமிழ்நாடு வருவாய்த்துறை வரலாற்றிலேயே கிராமப்புற நத்தம் பட்டாவை கணினி மூலம் வழங்குவது இதுதான் முதல் முறை. ‘காணி நிலம் வேண்டும்’ என மகாகவி பாரதியார் பாடினார். அதை கணினி மூலம் உறுதி செய்யும் திட்டம் இது. முதல் கட்டமாக, 75 லட்சத்து 33 ஆயிரத்து 102 பட்டாதாரர்கள் இணையவழி சேவை மூலமாக பயன் பெறப் போகிறார்கள் என்பதை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்” என்று கூறினார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு நூலகம் கட்டப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பை செயல்படுத்த, நூலகம் அமைக்க பார்க்அவென்யூ பகுதி தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. அந்தப் பகுதியில் 5 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு சிறப்பான நூலகம் விரைவில் கட்டி முடிக்கப்படும்.
150 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மயிலாடு துறை நகராட்சிக்கு 10 கோடி ரூபாய் மதிப்பில் புதிய நகராட்சிக் கட்டிடம் கட்டப்படும் என முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர்,
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், ” சீர்காழி வட்டம், பெருந்தோட்டம் கிராமத்தில் செல்லனாற்றின் குறுக்கிலும், சென்னம்பட்டனம் கிராமத்தில் முல்லையாற்றின் குறுக்கிலும், தரங்கம்பாடி வட்டம், சந்திரப்பாடி கிராமத்தில் நண்டலாற்றின் குறுக்கிலும் உப்புநீர் புகுவதைத் தடுக்கும் வகையில், கடைமடை நீர் ஒழுங்கிகைள் 44 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்” என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.