Amazing Tamilnadu – Tamil News Updates

“நீங்கள் நலமா?” – விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

முதல்வரின் முகவரி துறையின் கீழ், பயனாளிகளைத் தொடர்பு கொண்டு அரசின் நலத்திட்டங்கள் குறித்த கருத்துக்களைக் கேட்டறியும் “நீங்கள் நலமா” என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். பின்னர், பயனாளிகளிடம் நேரடியாகத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

“கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில்” பயன்பெற்ற சிவகங்கை மாவட்டம், நெற்குப்பையைச் சேர்ந்த தனலட்சுமியிடம் முதலமைச்சர் தொலைபேசியில் பேசினார். அப்போது தனலட்சுமி, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் வழங்கப்படும் தொகை தனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்று கூறி, நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து, “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில்” பயன்பெற்று வரும் திருவள்ளூர், சோரஞ்சேரி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வரும் சிறுவன் பவனேஷின் தந்தை பிரபுவிடம் முதலமைச்சர் பேசினார். அப்போது பிரபு, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாக இருக்கிறது என்றும், பள்ளிக்குச் செல்வதில் தனது மகன் மிகுந்த ஆர்வம் காட்டுவதோடு, மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்தார். மகனுக்கு காலை உணவு தயார் செய்ய வேண்டியதில்லை என்பதால், தனது மனைவியும் தற்போது பணிக்கு செல்கிறார் என்று பிரபு கூறினார்.

அதே போல் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ், UPSC போட்டித் தேர்விற்கான நேர்முக தேர்வு பயிற்சி பெற்று வரும் தாம்பரத்தைச் சேர்ந்த கதிரவனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் பேசினார். அப்போது கதிரவன், 2019ஆம் ஆண்டு BE Civil Engineering முடித்து, குடிமைப்பணி தேர்வுக்காக படித்து வருவதாகவும், தற்போது UPSC (Main Exam) முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்று, அடுத்ததாக நேர்முகத் தேர்விற்குப் பயிற்சி பெற்று வருவதாகவும் தெரிவித்தார். “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் உதவித்தொகை பெற்று வருவதால் கவலையின்றி படித்து வருவதாகவும், இத்திட்டத்தினை கிராமப்புற மாணவர்களும் அறிந்து, அதிகளவில் பயன்பெற வேண்டும் என்பது தனது விருப்பம் என்றும் முதலமைச்சரிடம் கதிரவன் கூறினார்.

புதுமைப் பெண்” திட்டத்தின் கீழ் பயன்பெற்ற செங்கல்பட்டு மாவட்டம், கடப்பாக்கத்தைச் சேர்ந்த மாணவி நஸ்ரினிடம் முதலமைச்சர் பேசினார்.

அப்போது மாணவி நஸ்ரின், தற்போது தான் ராஜேஸ்வரி கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரியில் BA (ஆங்கிலம்) இரண்டாம் ஆண்டு பட்டப் படிப்பு படித்து வருவதாகவும், புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் கிடைக்கும் தொகையை கொண்டு தனது படிப்பிற்கு தேவையான செலவுகளை செய்வதாகவும் தெரிவித்தார்.

பணிபுரியும் மகளிருக்கான விடுதி திட்டமான “தோழி” திட்டத்தின் கீழ் அடையார் தோழி விடுதியில் தங்கி பயன்பெற்று வரும் சீர்காழியைச் சேர்ந்த ஸ்வாதி முரளியிடம் முதலமைச்சர் பேசினார். அப்போது ஸ்வாதி முரளி, தங்கும் விடுதி ஆரோக்கியமானதாகவும், சுகாதாரமாகவும் இருப்பதாகவும், விடுதி பாதுகாவலர் கனிவோடு அனைவரையும் நடத்துவதாகவும் தெரிவித்தார். தனியார் மகளிர் விடுதியைவிட மிகக் குறைந்த கட்டணத்தில், அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், மிகவும் பாதுகாப்பாக உணர்வதாகவும் ஸ்வாதி கூறினார்.

திருத்தணியைச் சேர்ந்த ஜெ.கே.குமாரின் மகள் காணாமல் போனார். இது குறித்து குமார் முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் தெரிவித்திருந்தார். காவல்துறையினர் மகளைக் கண்டுபிடித்து குமாரிடம் ஒப்படைத்தனர்.
குமாரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது குமார், காணாமல் போன தனது மகள் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு சிறுவர் இல்லத்தில், பின்னர் தன்னிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டார் என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவிகளுக்காக அரசு அறிவித்து செயல்படுத்தி வரும் திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்தி, மகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று குமாரிடம் கேட்டுக் கொண்டார்.

Exit mobile version