Amazing Tamilnadu – Tamil News Updates

பிரதமருக்கு முதலமைச்சர் வைத்த செக்!

யிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தலில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தைத் திறந்து வைத்தார். பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்ததோடு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய திட்டங்கள் குறித்துப் பட்டியலிட்ட அவர் “இப்படி ஒவ்வொரு நாளும் மக்கள் பயன்பெறும் வகையில் பார்த்துப் பார்த்து திட்டங்களை உருவாக்கிக் கொண்டு வருகிறோம்.

நிதி நெருக்கடி அதிகமாக இருந்த போதிலும், எந்த மக்கள் நலப் பணிகளையும் திட்டங்களையும் நாம் நிறுத்தவில்லை. ஏனெனில், மக்கள் தொண்டு ஒன்றுதான் நம் ஆட்சியின் நோக்கம்” என்று கூறினார்.

அடுத்ததாக, பிரதமர் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருவது குறித்துப் பேசிய முதலமைச்சர், “தேர்தல் நேரத்தில் மட்டும் முகத்தைக் காட்டுபவர்கள் நாங்கள் அல்ல.அப்படி வருபவர்கள் யார் என்று நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியவேண்டும் என்ற அவசியமில்லை. தேர்தல் தேதி அறிவிக்க இருக்கிறார்கள்.

மேலும் அடிக்கடி பாரதப் பிரதமர் தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருக்கிறார். வரட்டும், நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. தமிழ்நாட்டிற்கு நன்மை செய்து விட்டு, நாம் வைக்கும் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி விட்டு வரட்டும். ஆனால் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணமும் ஓட்டு மட்டும் போதும் என்று வருகிறார்கள். சமீபத்தில் இரண்டு மிகப்பெரிய இயற்கைப் பேரிடர்களை எதிர்கொண்டோம். அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய 37 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி கேட்டோம்.

அதைக் கொடுத்து விட்டு தமிழ்நாட்டிற்கு பிரதமர் வருகிறாரா? ஒரு ரூபாய் கூட ஒரு சல்லிக் காசு கூட இன்னும் கொடுக்கவில்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு நிதி உதவி செய்ய மாட்டார்களாம். ஆனால் தங்களின் பதவி நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ள, ஆதரவு கேட்டு வருகிறார்களாம். தமிழ்நாட்டு மக்கள் இவர்களைப் பார்த்து ஏமாற மாட்டார்கள்” என்று காட்டமாக கூறினார்.

Exit mobile version