காலநிலை மாற்றம் : பள்ளிகளில் ‘சூழல் மன்றங்கள்’… தமிழக அரசின் புதிய முயற்சி!

காலநிலை மாற்றம்தான் இன்றைக்கு உலக நாடுகளும், மானுட சமுதாயமும் எதிர்கொண்டிருக்கக்கூடிய மிகப்பெரிய சவாலாக உள்ளது. கடந்தாண்டு துபாயில் ஏற்பட்ட வெள்ளம்,சீனா, பிரேசில், ஜெர்மனி, ஸ்பெயின் – ஆகிய நாடுகளில் ஏற்பட்ட வெள்ளம், அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ்-இல் ஏற்பட்ட காட்டுத் தீ, வெப்ப மண்டல நாடுகளில் ஏற்பட்ட வெப்ப அலை பாதிப்புகள் போன்றவற்றை இதற்கு உதாரணமாக சுட்டிக்காட்டலாம்.
அதேபோல், அண்டை மாநிலமான கேரளத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வயநாடு நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளும் மறக்கக்கூடியதல்ல. அதேபோன்று கடந்த டிசம்பரில் திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இவற்றுக்கெல்லாம் பருவநிலையில் ஏற்பட்ட மாற்றங்களே முக்கிய காரணமாக சுட்டிக்காட்டப்படுகின்றன.
இந்த நிலையில், வருங்காலத்தில் காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய விளைவுகளையும், பேரிடர்களையும் எதிர் கொள்ளவேண்டும் என்றால், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுவது அவசியமானது. அதாவது, முதலில் பிரச்னையின் தீவிரத்தை மக்களிடையே விளக்க வேண்டும். காலநிலை மாற்றம் என்றால் என்ன? அதன் விளைவுகள் என்ன? அதை எப்படி எதிர்கொள்வது? அதற்கேற்றபடி, நம்மை எப்படி தகவமைத்துக்கொள்வது என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அந்த வகையில், தமிழக அரசு தரப்பில் இதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், பசுமைத் தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு ஈரநில இயக்கம், தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் ஆகிய நான்கு சிறப்பு இயக்கங்கள் மூலமாக இதற்கான முன்னெடுப்புகளை நம்முடைய தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாகதான், ஆண்டுதோறும் காலநிலை உச்சி மாநாடுகளை நடத்தி வருகிறது.
அனைத்து பள்ளிகளிலும் ‘சூழல் மன்றங்கள்’

அந்த வகையில், சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சார்பில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டின் எல்லா பள்ளிகளிலும் ‘சூழல் மன்றங்கள்’ ஏற்படுத்தப்படும் என அறிவித்தார்
“காலநிலை மாற்றத்தை கல்வித் துறை மூலமாகவே புகட்ட நம்முடைய அரசு திட்டமிட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கான கனவுகள் எல்லாவற்றிற்கும் கல்விதான் அடித்தளமாக இருக்கிறது! அதனால்தான், நம்முடைய அரசு, காலநிலைக் கல்வியறிவை ஒரு இயக்கமாகவே முன்னெடுக்க முடிவு செய்திருக்கிறது.
காலநிலைக் கல்வியறிவுக்கு என்று ஒரு கொள்கையை தமிழ்நாடு அரசு விரைவில் வகுத்து அறிவிக்க இருக்கிறோம். எல்லோருக்கும் அவசியமான காலநிலை விழிப்புணர்வை மாணவர்கள் மூலமே அனைத்துத் தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்க இருக்கிறோம். பல்வேறு துறை அரசு அலுவலர்களுக்கும் காலநிலை மாற்றத் தடுப்பு மற்றும் தழுவல்களுக்கான திறன் வளர் பயிற்சிகள் வழங்கப்படும். காலநிலை மாற்றத்தால், பாதிப்படையக் கூடிய வேளாண்மை, நீர்வளம் ஆகிய துறைகளுக்கு சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படும்.பசுமைக் குடில்கள் மூலமாக, வாயுக்களின் உமிழ்களைக் குறைப்பதற்கான வழிமுறைகள் காணப்படும் ” என அவர் மேலும் தெரிவித்தார்.