‘மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் புதிய உச்சத்தை தொட்ட தமிழ்நாடு!’

இந்திய நகரங்களில் வாழக்கூடிய சூழல்களை உருவாக்குவது குறித்த இந்திய தொழில் கூட்டமைப்பின் மாநாடு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்தியாவின் வளர்ச்சியில், தமிழ்நாடு முக்கியப் பங்கு வகிப்பதாகவும், இந்தியாவிலேயே, இரண்டாவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு விளங்குவதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவின் உற்பத்தித் துறை மொத்த மதிப்புக் கூட்டலில், தமிழ்நாடு 12.11 விழுக்காடு பங்களிப்பைக் கொண்டிருப்பதாகவும், கடந்த 3 ஆண்டுகளில், தமிழ்நாடு 8 விழுக்காட்டுக்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சியைக் கண்டிருப்பதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டின் வளர்ச்சி தனித்தன்மை வாய்ந்தது. இந்த வளர்ச்சியை மேலும் மேம்படுத்தும் வகையில், 2030-ஆம் ஆண்டுக்குள், தமிழ்நாட்டை 1 டிரில்லியன் பொருளாதார மாநிலமாக உயர்த்திட – ஒரு உயரிய இலக்கு நிர்ணயித்து, அந்தப் பாதையில் பயணித்து வருகிறோம்.
இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகள், தமிழ்நாட்டில் தான் இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் சீரான மற்றும் பரவலான வளர்ச்சியை கொண்டுவர நாங்கள் எடுத்து வரும் முயற்சிகள் பலன் அளித்து வருகிறது.

மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் புதிய உச்சம்
கோயம்புத்தூர், திருச்சி, ஓசூர், மதுரை, சேலம், தூத்துக்குடி போன்ற நகரங்களும் பொருளாதார சக்திகளாக உருவெடுத்திருக்கிறது. இந்தியாவின் மொத்த மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் 37.1 விழுக்காட்டோடு தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. அதுவும் கடந்த 11 மாதங்களில் 12.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள மின்னணு பொருட்களை ஏற்றுமதிசெய்து புதிய உச்சத்தை தொட்டிருக்கிறோம்.
உலகின் முன்னணி நிறுவனங்களான, ஃபாக்ஸ்கான், வின்ஃபாஸ்ட், செம்ப்கார்ப், கார்னிங் தங்கள் உற்பத்தித் திட்டங்களை தமிழ்நாட்டில் தொடங்க முன்வந்திருப்பதே, இதற்கு ஒரு சான்று!
அதுமட்டுமல்ல, நிலைத்தன்மை நடவடிக்கைகள் மேற்கொள்வதில், தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. சென்னையை சுற்றியிருக்கும் தொழிற்சாலைகளுக்கு, TTRO முறையில், தண்ணீர் வழங்கப்படுகிறது. மேலும் பசுமை திட்டங்களை ஊக்குவிக்க, தமிழ்நாடு தொழில் கொள்கை 2021-ன்படி பசுமை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தொழில் துறைக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, பல்வேறு திட்டங்களை, இந்தாண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருக்கிறோம்.
136 நகரங்களுக்கு Master Plan
சென்னையை ஒரு உலக தரத்திலான நகரமாக உருவாக்க, மூன்றாவது முழுமைத் திட்டத்தை (3rd Master Plan) தயாரித்துக்கொண்டு வருகிறோம்.
மாநில அரசு சார்பாக கோயம்புத்தூர், மதுரை, ஓசூர், சேலம், திருப்பூர், திருச்சிராப்பள்ளி, வேலூர், திருநெல்வேலி உள்ளிட்ட 136 நகரங்களுக்கு முழுமைத் திட்டங்களை (Master Plan) உருவாக்கிக்கொண்டு இருக்கிறோம். இதன் மூலம் நகர விரிவாக்கங்கள் நடைபெறும்போது மக்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் மேம்படும்.

பசுமை இயக்கத்திற்கு முன்னோடியாக தமிழ்நாடு செயல்படுகிறது. நம்முடைய மின்வாகனக் கொள்கை மாநிலத்தை E.V. உற்பத்தியின் மையமாக மாற்றி இருக்கிறது. ஓலா, வின்ஃபாஸ்ட், டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள், தங்களின் திட்டங்களை நம்முடைய மாநிலத்தில் நிறுவியிருக்கிறார்கள். மேலும், பசுமை ஹைட்ரஜன் திட்டங்களிலும் முக்கிய முதலீடுகள் செய்யப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடக் கூடாது. மற்ற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்திக்கொண்டு இருக்கும் நம்முடைய தமிழ்நாட்டுக்கு உங்களோடு தொடர்பில் இருக்கும் முதலீட்டாளர்களை நீங்கள் அழைத்துக்கொண்டு வர வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.