சிகரெட் புகைப்பது என்பது உடல் நலத்தைப் பாதிக்கும் தீய பழக்கம் என்பதை தெரிந்தே தான் பலரும் அதனைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். வாங்கும் சிகரெட் பாக்கெட் மீது எழுதப்பட்டிருக்கும் எச்சரிக்கை வாசகம் முதல் தியேட்டர்களில் திரைப்படம் தொடங்குவதற்கு முன்னர் காட்டப்படும் விளம்பர படங்கள் வரை, அவற்றில் சொல்லப்படுவதை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் கடந்து சென்றுவிடுகிறார்கள். இன்னொருபுறம் பெற்றோர்கள், மனைவி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் போன்றவர்கள் சொல்லும் அறிவுறுத்தல்கள் அல்லது அவர்களது கவலைகளையுமே கண்டுகொள்ளாமல் புகைத்து தள்ளிக்கொண்டிருக்கிறார்கள்.
இப்படி புகைப்பவர்களில் நாளொன்றுக்கு பாக்கெட் கணக்கில் ஊதித் தள்ளுபவர்கள், டீ குடிக்கும்போது மட்டும் தான், சாப்பிட்ட பின்னர் மட்டும் தான், டென்சனாக இருக்கும்போது மட்டும் தான், மது அருந்துபோதும் மட்டும் தான் என்ற ரீதியில் நாளொன்றுக்கு 10 முதல் 20 சிகரெட்டுகளைப் புகைப்பவர்கள் என வித விதமான வகையைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் என்னவிதமான காரணங்களைச் சொல்லி புகைத்தாலும், அவ்வாறு புகைக்கும் ஒவ்வொரு சிகரெட்டுக்கும் அவர்கள் தங்களது ஆயுளில் சராசரியாக 19.5 நிமிடங்களை இழப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதுவே பெண்களுக்கு அவர்கள் புகைக்கும் ஒவ்வொரு சிகரெட்டின் மூலம் அவர்களது ஆயுளில் 22 நிமிடங்களை இழப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. லண்டன் யுனிவர்சிட்டி காலேஜ் ( University College London) நடத்திய ஆய்வில், இந்த விவரங்கள் தெரியவந்துள்ளது.
இன்றே விட்டால் ஆயுள் எவ்வளவு அதிகரிக்கும் ?
ஆனால் இதில் ஒரு நல்ல செய்தியும் இருக்கிறது. அது என்னவென்றால், ஒருவர் இப்போது இந்த தருணத்திலேயே புகைபிடிப்பதை நிறுத்தினால் கூட, இழந்ததை மீண்டும் பெற முடியும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் மருத்துவர்கள். “வாழ்நாள் முழுவதும் புகைபிடித்தவர்கள்கூட இழந்த தங்களது நுரையீரல் செயல்பாடு மற்றும் வாழ்க்கை தரத்தை மீண்டும் பெறலாம்” என்கிறார்கள்.

இது குறித்து பேசும் நுரையீரல் மருத்துவ நிபுணர்கள், ” புகை பிடிப்பதை நிறுத்தியதும் நோயாளிகளின் நுரையீரல் செயல்பாடு மேம்படும். மூச்சுத் திணறல் குறையும். மீண்டும் மீண்டும் ஏற்படும் நுரையீரல் தொற்றுகள் மற்றும் மருத்துவமனையில் சேரும் வாய்ப்பு குறையும். புகை பிடிக்கும்போது நுரையீரல் செயல்திறன் 60 சதவீதம் ஆக இருந்தால், புகைப்பதை நிறுத்திய பிறகு 70 சதவீதம் ஆக உயரும்.
ஒரு நாளைக்கு 10 சிகரெட் பிடிக்கும் ஒருவர் இன்று நிறுத்தினால், ஒரு வாரத்தில் ஒரு முழு நாளை இழப்பதைத் தடுக்கலாம்.
ஒரு மாதம் நிறுத்தினால், ஒரு வாரம் கூடுதலாக வாழலாம்.
ஒரு வருடம் நிறுத்தினால், 50 நாட்கள் கூடுதலாக வாழலாம்” என நம்பிக்கை அளிக்கிறார்கள்.
புகைபிடிப்பதை நிறுத்தியவர்கள் எளிதாக மூச்சுவிடுகிறார்கள். நுரையீரல் தொற்றுகள் குறைவதோடு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயமும் நீங்குகிறது.
இன்னும் தாமதமாகிவிடவில்லை. புகை பிடிப்பவர்கள் அப்பழக்கத்தை இன்றே நிறுத்தி, தங்களது ஆயுளை இழப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளாலாம்!