2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி, தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் அடைந்த தோல்வியால், கடந்த சில வாரங்களாக ரசிகர்கள் தோனி மற்றும் அணியின் மீது அதிருப்தி காட்டினர். கேப்டன் ருதுராஜ் கெய்க்வாடின் இழப்பு அணியின் மன உறுதியைப் பாதித்தது. பயிற்சியாளர்கள் ஸ்டீபன் ஃபிளெமிங் மற்றும் மைக்கேல் ஹசி ஆகியோரின் பிடிவாதமான அணுகுமுறை விமர்சனத்துக்கு உள்ளானது. ஆனால், ஏப்ரல் 14 அன்று, சிஎஸ்கே தனது உண்மையான ஆற்றலை வெளிப்படுத்தியது என்றே கருதப்படுகிறது.
திங்களன்று லக்னோவின் ஏகானா மைதானத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை (எல்எஸ்ஜி) எதிர்கொண்டு, ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் முக்கியமான வெற்றியைப் பெற்று, தனது தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது சிஎஸ்கே.
முதல் பந்து முதலே சிஎஸ்கே-யின் பந்துவீச்சு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் (எல்எஸ்ஜி) அதிரடி முன்னணி வீரர்களை கட்டுப்படுத்தும் விதமாக இருந்தது. ரசின் ரவீந்திரா மற்றும் ஷைக் ரஷீத் ஆகியோரின் பவர்பிளே பேட்டிங், ஆர்ப்பாட்டமில்லாமல், திறமையாக அமைந்தது.
அணியின் மன உறுதியை வலுப்படுத்தும் விதமாக அமைந்த இந்த வெற்றிக்கான பின்னணி, போட்டியில் சிஎஸ்கே கடைப்பிடித்த புதிய உத்தி என்ன என்பதை இங்கே பார்க்கலாம்…
தோனியின் புதிய சாதனை
இந்த போட்டியில் ஒரு கேட்ச், ஒரு ரன்-அவுட், ஸ்டெம்பிங் செய்து 11 பந்துகளில் அதிரடியாக 26 ரன்கள் சேர்த்த கேப்டன் மகிகேந்திர சிங் தோனி ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ரவீந்திர ஜடேஜா வீசிய ஆட்டத்தின் 14 ஆவது ஓவரில் லக்னோ வீரர் ஆயுஷ் படோனி இறங்கி அடிக்க முற்பட, பந்து அவரை ஏமாற்றி விக்கெட் கீப்பர் தோனியிடம் தஞ்சம் அடைந்தது. அவர் சற்றும் தாமதிக்காமல் மின்னல் வேகத்தில் ஸ்டெம்பிங் செய்து படோனியை பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் பீல்டிங்கில் 200 ஆவது வீரரை ஆட்டமிழக்கச் செய்தவர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார்.

புதிய அணுகுமுறை
மைக்கேல் கிளார்க், தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர்களுடன் பேசுகையில், “புதிய வீரர்களை விட, அணுகுமுறையில் செய்யப்பட்ட மாற்றமே இந்த வெற்றிக்கு காரணம். அணியின் உடல் மொழி முற்றிலும் மாறுபட்டிருந்தது. திரிபாதியின் அந்த பின்னோக்கி ஓடி பிடித்த கேட்ச், தொலைக்காட்சியில் எளிதாகத் தோன்றினாலும், மிகவும் சவாலானது. சிஎஸ்கே-யின் ஒட்டுமொத்த நோக்கமும் இந்த முறை வேறு விதமாக இருந்தது. பவர்பிளேயில் பேட்டிங், நடு ஓவர்களில் சுழற்பந்துக்கு எதிரான ஆட்டம் என எல்லாமே எல்எஸ்ஜி-யை விட சிறப்பாக இருந்தது. தோனியின் தலைமையும், அணிக்கு எப்போதும் உறுதியான பலத்தை அளிக்கிறது” என்றார்.
வெற்றி மீதான ஆர்வம்
முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா, “சிஎஸ்கே-யில் இன்று ஒற்றுமையான நோக்கமும் வெற்றிக்கான தாகமும் இருந்தது. தோல்வி பயத்தை விட வெற்றி மீதான ஆர்வம் அதிகமாக இருந்ததால் இந்த வெற்றி கிடைத்தது” என்று கூறினார். “ஐபிஎல் போட்டியைப் பொறுத்தவரை, அது ஒரு உள்நோக்கத்தை மையமாகக் கொண்ட போட்டியாகவே மாறியுள்ளது. ஆட்டத்தின் தொடக்கம், நடுவில் அல்லது முடிவு எல்லாவற்றிலும் வீரர்களின் நோக்கம் உற்று கவனிக்கப்படுகிறது. கடந்த ஐந்து ஆட்டங்களில் ஆக்ரோஷமின்மை காரணமாக சிஎஸ்கே விமர்சிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆட்டத்தில் அவர்கள் சரியான அணுகுமுறையைக் கண்டறிந்தனர்” என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள்.
பிளேஆஃப்க்கு வழி உள்ளதா?
சிஎஸ்கே ஏழு போட்டிகளில் நான்கு புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் உள்ள நிலையில், அந்த அணி இப்போது வெற்றிக்கான ஃபார்முலாவைக் கண்டறிந்துள்ளது. ஆனால், பிளேஆஃப் சாத்தியமா என்ற கேள்வியும் எழுகிறது. தோனியின் தலைமையில், ஐபிஎல்-ஐ கைப்பற்றிய அனுபவம் அவர்களுக்கு உள்ளது. இனி, அணி வெற்றிக்கான முழு உள்நோக்கத்துடன் முன்னேற வேண்டும். ரசிகர்களின் எதிர்பார்ப்பு, தோனியின் மேஜிக்கால் மீண்டும் ஒரு அற்புதமான வெற்றியைப் பார்க்கலாம் என்பதே. இந்த அணுகுமுறை தொடர்ந்தால், சிஎஸ்கே-யின் பயணம் மீண்டும் தனது வெற்றி பாதையில் தொடரலாம்.
தோனியின் தலைமை, அணியின் தன்னம்பிக்கையை மீட்டெடுத்துள்ளது. இந்த உத்வேகத்துடன், அவர்களது பிளேஆஃப் கனவு நனவாகுமா என்பதற்கு அடுத்த ஆட்டங்களே பதில் அளிக்கும்.