ரூ.2,000 பயண அட்டை: சென்னையில் ஏ.சி. பஸ்களிலும் பயணிக்கலாம்!

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் கீழ் 50 ஏ.சி. பஸ்கள் உள்பட 3,233 பஸ்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தினசரி இயக்கப்படுகின்றன. 5 இதில் ஏ.சி. பஸ்கள் தவிர்த்து – இதர பஸ்களில் அளவில்லா பயணம் மேற்கொள்ளும் வகையில் 1,0000 ரூபாய் மதிப்பிலான பயண அட்டைகள் ஏற்கனவே வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஏ.சி. பஸ் உள்ளிட்ட அனைத்து மாநகர பஸ்களிலும் அளவில்லா பயணம் மேற்கொள்ளும் வகையிலான பயண அட் டையை அறிமுகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் தொடர்ச்சியாக வந்தன.
இதனை கருத்தில்கொண்டு தற்போது சென்னையில் மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கும் குளிர்சாதன பேருந்துகள் உட்பட அனைத்து பேருந்துகளிலும் பயணம் செய்யும் வகையில் 2000 ரூபாய்க்கு மாதாந்திர சலுகைப் பயண அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மந்தைவெளி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவில், 2000 ரூபாய் கட்டண மாதாந்திர பயண அட்டையை அறிமுகம் செய்து வைத்து பயணிகளுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.
பின்னர் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், ” புதிதாக 2000 ரூபாய் கட்டண பாஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாதாந்திர பயண அட்டைகளுக்கு மிகப் பெரிய வரவேற்பு உள்ளது. தற்போது 50 ஏசி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த ஆண்டு இறுதிக்குள் 635 மின்சார பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. அதிலும் இந்த சேவை பயன்படும். பாஸ் பயன்படுத்தி ஒரு மாத காலம் வரை நாள் முழுவதும் கட்டணமின்றி பயணித்துக் கொள்ளலாம். கூடுதல் வசதிகளை பொது மக்களுக்கு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்கேன் மூலம் டிக்கெட் வழங்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.