சென்னை விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில்… வழித்தடம் விவரம்!

சென்னை மாநகர போக்குவரத்தில் முக்கிய பங்களிக்கும் மெட்ரோ ரயில் சேவை கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி தொடங்கப்பட்டது. தினமும் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் சென்னை மெட்ரோ ரயிலை பயன்படுத்தி வருகின்றனர்.
மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டம் 45.046 கி.மீ தூரத்திற்கு உள்ளடக்கிய, இரண்டு வழித்தடங்களைக் கொண்டுள்ளது. அதாவது, வழித்தடம் 1 ஆனது வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையும் (23.085 கி. மீ) வழித்தடம் 2 ஆனது சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும் (21.961 கி.மீ) இணைக்கப்பட்டுள்ளது. பின்னர் சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை சுமார் 9.05 கி.மீ. தூரத்திற்கு விரிவாக்கம் செய்யப்பட்டு, அங்கிருந்து விமான நிலையம் வரை சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே சென்னையிலிருந்து தென்மாவட்டங்கள் உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்கு மாற்றப்பட்டதில் இருந்து பயணிகள் சற்று சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதனால், கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவை ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது.
இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 1-ல் விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ ரயிலை சாலை மேம்பாலத்துடன் இணைத்து நீடிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை, தமிழ்நாடு அரசின் திட்டம், சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.கோபாலிடம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் சமர்ப்பித்துள்ளார்.
வழித்தடம் விவரம்
அந்த திட்ட அறிக்கையில், ” மெட்ரோ வழித்தடத்தை வெளிவட்டச் சாலை (Outer Ring Road) உடன் இணைப்பதற்காக தாம்பரம் அருகே இடைநிலை சாய்வுப் பாதைகள் அமைக்கவும், இந்த மேம்பாலச் சாலை நேரடியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் செல்வது போன்றும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வழித்தடம் பின்னர் செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்படும்.
விமான நிலையத்தில் இருந்து பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர் மற்றும் வண்டலூர் வழியாகச் சென்று கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை அமைக்கப்படவுள்ளது. இந்த வழித்தடத்தின் மொத்த நீளம்: 15.46 கி.மீ. இந்த வழித்தடத்தில் அமைக்கப்படவுள்ள மெட்ரோ நிலையங்களின் எண்ணிக்கை: 13. இந்த திட்டத்திற்கு ஆகும் செலவு ரூ. 9,335 கோடி ஆகும் ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.