இந்தியாவின் பல்வேறு பகுதிகளும் தொடர்ந்து நகரமயமாக்கப்பட்டு வருவதால், லட்சக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பு, வாழ்க்கை முறை மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கை தரத்துக்காக தங்களுக்கான நகரங்களை தேர்வு செய்து வருகின்றனர்.
அந்த வகையில், நகர்ப்புற வாழ்க்கையின் வளர்ந்து வரும் நிலப்பரப்பில், வாடகை, உணவு செலவுகள், பயண வசதி, உள்கட்டமைப்பு மற்றும் காற்றின் தரம் போன்ற காரணிகள் அடிப்படையில், ஆறு முக்கிய நகரங்களை தரவரிசைப்படுத்தியுள்ளது ரியல் எஸ்டேட் தளமான நோபுரோக்கர் நிறுவனம்.
மும்பை, பெங்களூரு, புனே, சென்னை, ஹைதராபாத் மற்றும் டெல்லி உள்ளிட்ட ஆறு முக்கிய நகரங்களை தரவரிசைப்படுத்தியுள்ளது. இதன் அடிப்படையில், சென்னை மாநகரத்துக்கு ஐந்தாவது இடம் கிடைத்துள்ளது. முதல் இடத்தை புனேவும், ஹைதராபாத்தும் பகிர்ந்துகொண்டுள்ளன. இதைத் தொடர்ந்து, இரண்டாம் இடத்தில் பெங்களூருவும், மூன்றாம் இடத்தில் மும்பையும், நான்காம் இடத்தில் புதுடெல்லியும் உள்ளன.
வாடகையைப் பொறுத்தவரை சென்னையில் மிதமாகவே உள்ளது. பிற நகரங்களுடன் ஒப்பிடுகையில் சென்னையின் வாடகை, பட்ஜெட்டிற்கு ஏற்றதாக உள்ளது. மேலும், தென்னிந்திய உணவு வகைகளுக்கு பெயர் பெற்ற சென்னையில், உள்ளூர் உணவகங்களில் உணவு விலைகள் மலிவாக உள்ளன. சர்வதேச மற்றும் சிறந்த உணவு வகைகள் சற்று அதிக விலையில் கிடைக்கின்றன.

போக்குவரத்தைப் பொறுத்தவரையில், சென்னைக்கு அது சவாலாகவே உள்ளது. பொதுபோக்குவரத்து விருப்பங்கள் குறைவாகவே உள்ளன. அதுமட்டுமின்றி, போக்குவரத்து நெரிசல் சென்னைக்கு ஒரு குறிப்பிடத்தக்க பிரச்னையாகவே உள்ளது. மாசுபாட்டை பொறுத்தவரை மிதமாக உள்ளது. வெப்பநிலையைப் பொறுத்த வரை, கோடைகாலம் கடுமையானது. பெரும்பாலும், 40 டிகிரி செல்சியசை விட அதிகமாக இருக்கும். இத்தகைய தகுதிகளின் அடிப்படையில், முக்கிய ஆறு நகரங்களின் வரிசையில் சென்னை ஐந்தாவது இடத்தை பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.