“தொகுதி மறுசீரமைப்பு ஒரு அரசியல் ஆயுதம்… தெற்கின் குரலை அடக்கும் சதி!” – முழங்கிய தலைவர்கள்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பு எதிர்ப்பு கூட்டத்தில், பல மாநில தலைவர்கள் ஒன்றிணைந்து, மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிராக குரல் எழுப்பினர்.
கூட்டாட்சி, பிரதிநிதித்துவம், மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் இந்நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய கேரளா, தெலங்கானா, பஞ்சாப், கர்நாடகா தலைவர்களின் பேச்சுகள் மையமாக அமைந்தன. அவர்களது பேச்சின் முக்கிய அம்சங்கள் இங்கே…
பினராயி விஜயன்: “தொகுதி மறுசீரமைப்பு ஒரு அரசியல் ஆயுதம்”
பினராயி விஜயன் தனது உரையில், தொகுதி மறுசீரமைப்பை “தென்மாநிலங்களுக்கு எதிரான வாள்” என கடுமையாக விமர்சித்தார். “மக்கள்தொகை அடிப்படையிலான இந்த திட்டம், வடமாநிலங்களுக்கு சாதகமாகவும், தென்மாநிலங்களுக்கு பாதகமாகவும் அமைகிறது. இது பாஜகவின் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, மாநிலங்களின் கருத்து கேட்காமல் திணிக்கப்படுகிறது. 1973 முதல் கேரளா மக்கள்தொகையை கட்டுப்படுத்தி, சமூக முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால், இதற்கு பதிலாக தண்டனையை சந்திக்கிறோம்,” என ஆதங்கத்துடன் கூறினார்.
“தென்மாநிலங்களின் பங்களிப்பை மறுக்கும் இந்த அநீதியை எதிர்க்க, ஒருங்கிணைந்து போராடுவோம்” என அவர் அழைப்பு விடுத்தார்.
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி: “தெற்கின் குரலை அடக்கும் சதி”
“பாஜக தென்மாநிலங்களைப் பழிவாங்குகிறது” என ரேவந்த் ரெட்டி, தனது பேச்சில் குற்றம்சாட்டினார். “1976 முதல் தெற்கு மாநிலங்கள் குடும்பக் கட்டுப்பாட்டை சிறப்பாக செயல்படுத்தின. வடமாநிலங்கள் தோல்வியடைந்த போதும், இப்போது தெற்கின் பிரதிநிதித்துவம் குறைக்கப்படுகிறது. தற்போது தென்மாநிலங்களின் 24% பிரதிநிதித்துவம், நியாயப்படி 33% ஆக உயர வேண்டும். ஆனால், இது அரசியல் அதிகார இடைவெளியை பெரிதாக்கும் சதி,” என விளக்கினார்.
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்: “வடமாநிலங்களுக்கு சாதகமான திட்டம்”
பகவந்த் மான், “தொகுதி மறுசீரமைப்பு ஹிந்தி பேசும் வடமாநிலங்களுக்கு மட்டுமே பயன் தரும்” என தனது உரையில் குறிப்பிட்டார். “மக்கள்தொகை அடிப்படையிலான இந்த மாற்றம், பஞ்சாப் போன்ற மாநிலங்களின் மொழி மற்றும் சிறுபான்மையினர் உரிமைகளை பறிக்கும். பிரதிநிதித்துவம் குறைந்தால், நமது குரல் பலவீனமாகும். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது,” என அவர் எச்சரித்தார்.
“கூட்டாட்சி என்பது மத்திய அரசின் பரிசு அல்ல, மாநிலங்களின் அடிப்படை உரிமை. பஞ்சாப் தனித்துவமான பண்பாடு மற்றும் சிக்கல்களை கொண்ட மாநிலம். இந்த மறுசீரமைப்பு நமது பிரச்சினைகளை புறக்கணிக்க வைக்கும். இதை எதிர்க்க ஒரு பொது முன்னணி அவசியம். மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் எந்த முயற்சியையும் தடுப்போம்,” என உறுதியளித்தார். பஞ்சாபின் விவசாய சவால்களையும் அவர் முன்வைத்தார்.

கர்நாடகா துணை முதல்வர் :”மாநில உரிமைகளை நிலைநாட்டுவோம்”
கர்நாடகா துணை முதல்வர் டி.கே. சிவகுமார், “இது கட்சி அரசியலை தாண்டிய பிரச்னை” என தனது பேச்சை தொடங்கினார். “தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கூட்டாட்சியை பாதுகாக்க ஒரு புரட்சிகர பாதையை திறந்துள்ளார். தெற்கு மாநிலங்கள் பொருளாதாரம், கல்வி, சமூகநீதியில் முன்னோடிகள். ஆனால், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் குறைந்தால், நமது பங்களிப்பு புறக்கணிக்கப்படும்,” என விமர்சித்தார்.
“1971 மக்கள்தொகையை அடிப்படையாக வைத்தே மறுசீரமைப்பு இருக்க வேண்டும் என்பதை கர்நாடக சட்டமன்றம் ஏற்கனவே தீர்மானித்துள்ளது. இது வடக்கு-தெற்கு மோதல் அல்ல; இந்தியாவின் ஒற்றுமையை காக்கும் முயற்சி. பாஜகவின் மிரட்டல்கள் என்னை பயமுறுத்தாது. ஸ்டாலினுடன் இணைந்து, மாநில உரிமைகளை நிலைநாட்டி வெற்றி பெறுவோம்,” என தைரியமாக அறிவித்தார்.
BRS செயல் தலைவர் கே.டி. ராமா ராவ்: “கூட்டாட்சி மாநிலங்களின் உரிமை”
பாரத ராஷ்டிர சமிதி செயல் தலைவர் கே.டி. ராமா ராவ் தனது உரையில், மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு தென்மாநிலங்களுக்கு எதிரான அநீதியை வலியுறுத்தினார். “கூட்டாட்சி என்பது மத்திய அரசு வழங்கும் பரிசு அல்ல; அது மாநிலங்களின் அடிப்படை உரிமை. ஒன்றிய அரசு ‘பிக் பாஸ்’ போல செயல்படக் கூடாது. இந்த மறுசீரமைப்பு, தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை பறிக்கும் சதி. இதை அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தால், வரலாறு நம்மை மன்னிக்காது,” என எச்சரித்தார்.