சென்னை செயின் பறிப்பு சம்பவமும் போலீஸ் என்கவுன்டரும்… நடந்தது என்ன?

சென்னையில் செவ்வாய்க்கிழமை அன்று காலையில் ஒரு மணி நேரத்தில் நடந்த தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள், தலைநகரை அதிர்ச்சியில் ஆழ்த்தின. முதிய பெண்கள் மற்றும் நடைப்பயிற்சியில் ஈடுபட்டவர்களை குறி வைத்து, மூன்று கொள்ளையர்கள் சுமார் 26 சவரன் தங்க நகைகளை பறித்தனர்.
இதைத் தொடர்ந்து, சென்னை காவல்துறையால் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில், ஒரு கொள்ளையன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்; மற்றவர்களின் தப்பிக்கும் முயற்சி முறியடிக்கப்பட்டது.
இந்த நிலையில் நடந்தது என்ன, கொள்ளையர்களின் தப்பிக்கும் முயற்சி முறியடிக்கப்பட்டது எப்படி, என்கவுன்டர் ஏன், கொள்ளையர்களின் பின்னணி உள்ளிட்டவை குறித்து விரிவாக தெரிவித்துள்ள சென்னை காவல்துறை, செயின் பறிப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட மூவரின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.
நடந்தது என்ன?
” செவ்வாய்க்கிழமை காலை சுமார் 6 மணிக்கு இரு சக்கரவாகனத்தில் இரண்டு நபர்கள் சைதாப்பேட்டையில் செயின் பறிப்பில் ஈடுபட்டனர். மேலும் 5 இடங்களில் தொடர்ச்சியாக செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றதை ஒட்டி சென்னை பெருநகர காவல் ஆணையர் அறிவறுத்தலின் பேரில் சென்னை முழுவதும் 56 இடங்களில் தீவிர வாகன சோதனைகள் நடைபெற்றன.

இதுகுறித்து சிசிடிவி கேமராப் பதிவுகளை ஆய்வு செய்ததில் இருந்தும், விசாரணையிலும் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு நபர்களும் வெளிமாநிலத்தைதச் சேர்ந்த நபர்கள் என தெரிய வந்ததால் உடனே விமானநிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் விமான நிலைய காவல் ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டதில், ஆவசரமாக கடைசி நேரத்தில் ஐதராபாத் செல்லும் விமானத்துக்கு இரண்டு நபர்கள் டிக்கெட் கேட்டதாகவும், அதில் ஒரு நபர் டிக்கெட் வாங்கி சென்றதாகவும் மற்றொரு நபரின் அடையாள அட்டை சரியாக இல்லாத காரணத்தினால் டிக்கெட் வழங்கவில்லை என்றும் கிடைத்த தகவலின் பேரில் ஐதராபாத் விமானம் புறப்பட தயார் நிலையில் இருந்த போது உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் விமான கட்டுபாட்டு அறைக்கு உரியமுறையில் தகவல் அறிவித்து விமானம் நிறுத்தப்பட்டது.
உடனே விமான நிலைய காவல் ஆய்வாளர், ஏற்கெனவே அடையாளம் காணப்பட்ட குற்றவாளியை கைது செய்து விமானத்துக்கு வெளியே இறக்கி கொண்டுவந்தார். பின்னர் மற்றொரு நபர் ஏர் இந்தியா விமானம் மூலம் மும்பை செல்வதற்கு தயாராக இருந்த போது சென்னை விமான நிலையத்திற்குள் வைத்து கைது செய்யப்பட்டார். அவர்களை விசாரணை செய்ததில் இக்குற்றத்தில் ஈடுபட்ட மூன்றாவது நபர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பினாக்கி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் ஐதராபாத்துக்கு செல்வது தெரியவந்தது.

உடனடியாக மத்திய ரயில்வே பாதுகாப்பு படைக்கு இதுகுறித்து சரியான தகவல் கொடுக்கப்பட்டு ஆந்திர மாநிலத்துக்குட்பட்ட ஓங்கோல் ரயில் நிலையத்தில் வைத்து மத்திய ரயில்வே பாதுகாப்ப படையினரால் கைது செய்யப்பட்டார். இந்த விசாரணையில் இக்குற்ற சம்பவத்தில் ஈடுபடுத்தப்பட்ட வாகனங்கள், அபகரிக்கப்பட்ட தங்க நகைகள் சம்பந்தமாகவும், வடமாநில குற்றவாளிகள் ஏற்கெனவே செய்து இருக்கும் குற்றங்களை குறித்தும் தொடா் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில், ஜாபர் குலாம் உசேன் இரானி, மஜாதுஷ்மேசம் இரானி ஆகிய இருவரும் சென்னை விமானநிலையத்திலும் சல்மான் உசேன் இரானி என்பவர் ஓங்கோல் ரயில் நிலையத்திலும் கைதுசெய்யப்பட்டனர்.
இவர்களை மேலும் விசாரணை செய்ததில் மேற்கண்ட இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். இந்த குற்ற சம்பவத்தில் அபகரிக்கப்பட்ட நகைகள் மற்றும் இக்குற்றச் சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தை மீட்பதற்காக தரமணி ரயில்வே நிலையத்துக்கு அருகே இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் அழைத்து சென்றபோது குற்றவாளி ஜாபர் குலாம் உசேன் இரானி என்பவர் குற்றத்துக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்திலிருந்து ஏற்கெனவே அவர்கள் அங்கு மறைத்து வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை எடுத்து காவல் அதிகாரிகளை நோக்கி சுட்டார்.
காவல் அதிகாரிகள் சுட வேண்டாம் என்று பலமுறை எச்சரித்த போதும் மீண்டும் சுட்டார். வேறுவழியின்றி தற்காப்புக்காக சுட்டதில் மேற்படி நபர் காயம் அடைந்தார். உடனே காயம் அடைந்த நபரை சிகிச்சைக்காக அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவர் பரிசோதித்த போது ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இறந்த நபரின் உடலானது ராயப்பேட்டை அரசு மருத்துவமணையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்ளையர்களின் பின்னணி
மூவரும் வட இந்தியாவைச் சேர்ந்த ‘இரானி கும்பல்’ எனக் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. ஜாஃபர், மகாராஷ்டிராவைச் சேர்ந்தவன், 2020 முதல் அங்கு 50-க்கும் மேற்பட்ட செயின் பறிப்பு வழக்குகளில் தேடப்பட்டவன். “இவர்கள் ஒரு திட்டமிட்ட முறையில் செயல்படுகின்றனர்—விமானத்தில் வருவது, புலம்பெயர் இடங்களில் குற்றம் செய்வது, பின் ரயில் அல்லது விமானம் மூலம் தப்புவது” என்ற உத்தியிலேயே செயல்பட்டு வந்துள்ளனர். மும்பை, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இவர்கள் மீது பல வழக்குகள் உள்ளன. சென்னையில் இவர்கள் திருடிய இரு சக்கர வாகனத்தை பயன்படுத்தி, ஒரு மணி நேரத்தில் எட்டு கொள்ளைகளை செய்தது அவர்களின் துணிச்சலை காட்டுகிறது.
பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
இந்த சம்பவம், சென்னையில் புலம்பெயர் குற்றவாளிகளின் செயல்பாடுகள் மற்றும் விமான, ரயில் போக்குவரத்தை பயன்படுத்தி தப்பிக்கும் முறைகளை வெளிப்படுத்தியுள்ளது. அதே சமயம் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள், காலை நேரங்களில் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சென்னை காவல்துறையின் விரைவான நடவடிக்கை பாராட்டப்பட்டாலும், பாதுகாப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட வேண்டிய அவசியத்தை இச்சம்பவம் உணர்த்துகிறது.