தரவரிசை: சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு 3 வது இடம்!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் 1,299 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்டி, நாட்டிலேயே மூன்றாவது அதிக வருவாய் ஈட்டும் ரயில் நிலையமாக உருவெடுத்துள்ளது.
ரயில் நிலையங்களை வகைப்படுத்துவது தொடர்பான ரயில்வே வாரியத்தின் (Railway Board) உத்தரவின்படி, ஐந்து வருடங்களுக்கும் ஒரு முறை ஒவ்வொரு ரயில் நிலையங்களின் வருவாய் மற்றும் அவை கையாளும் பயணிகளின் எண்ணிக்கை அடிப்படையில் அவை வகைப்படுத்தப்படுகின்றன.
அந்த வகையில், 2023-24 ஆம் நிதியாண்டில், 1,299.31 கோடி ரூபாயைசென்ட்ரல் ரயில் நிலையம் வருவாயாக ஈட்டியுள்ளது. இதில், முன்பதிவு செய்யப்படாத பயணிகளிடமிருந்து ஈட்டப்பட்ட வருவாய் ரூ. 131.73 கோடி.
மூன்று NSG-I (புறநகர் அல்லாத தரப்பிரிவு) நிலையங்களில் ஒன்றான சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, கடந்த ஆண்டில் 3.059 கோடி பயணிகள் பயணித்துள்ளனர். இதில் 1.53 கோடி பேர் முன்பதிவு செய்யப்படாத பயணிகள்.
இதில் ரூ. 1,692.39 கோடி வருவாய் ஈட்டிய ஹவுரா ரயில் நிலையம் (கிழக்கு ரயில்வே) இரண்டாவது இடத்தையும், ரூ. 3,337.66 கோடியுடன் புதுடெல்லி ரயில் நிலையம் (வடக்கு ரயில்வே) தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ள நிலையில், சென்ட்ரல் ரயில் நிலையம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
தெற்கு ரயில்வேயில், சென்னை எழும்பூர் ரயில் நிலையம் (NSG-I பிரிவு ) பயணிகளின் மூலம் ரூ.600.28 கோடி அதிகபட்ச வருவாயுடன் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. தெற்கு ரயில்வே மண்டலத்தில் தாம்பரம் முனையம் மட்டுமே மற்ற NSG-I வகை ரயில் நிலையம் என்றாலும், அது மட்டுமே 246.77 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. சேலம் கோட்டத்தில் உள்ள NSG-II வகை ரயில் நிலையமான கோயம்புத்தூர் ரயில் நிலையம், பயணிகள் மூலம் ரூ.345.32 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து 1.95 கோடி பேர் பயணித்த நிலையில், தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து 3.27 கோடி பயணிகள் பயணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அனைத்து மண்டல ரயில்வேயில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 8,809 ரயில் நிலையங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ரயில்வே வாரியத்தின் உத்தரவின்படி, பயணிகள் வருவாய் (PRS + UTS) மற்றும் 2023-24 ஆம் ஆண்டில் ரயில் நிலையங்களில் கையாளப்படும் வெளிப் பயணிகளின் அடிப்படையில் நாட்டில் உள்ள சுமார் 28 நிலையங்கள் NSG-I பிரிவு என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் தெற்கு ரயில்வே 20 NSG-II, 75 புறநகர் பிரிவு மற்றும் 120 நிறுத்த வகை நிலையங்கள் உட்பட 727 ரயில் நிலையங்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.