சென்னை – செங்கல்பட்டு ஏ.சி புறநகர் மின்சார ரயில் சேவை தொடக்கம்… கட்டணம் எவ்வளவு?

கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில், சென்னை – செங்கல்பட்டு இடையே புறநகர் ரயில் பயணிகளுக்கு வசதியான மற்றும் சிரமமற்ற பயண அனுபவத்தை வழங்கும் வகையில், குளிர்சாதன EMU (Electric Multiple Unit) ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையிலான வழித்தடத்தில் இயக்கப்படும் இந்த புதிய சேவை, ஏப்ரல் 19 சனிக்கிழமை காலை தொடங்கப்பட்டது. இந்த சேவை பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதன் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை பயணிக்க ரூ 85-ம், செங்கல்பட்டு வரை பயணிக்க ரூ 105-ம் செலுத்த வேண்டும்.
10 கி.மீ வரை ரூ.35, 11-15 கி.மீக்கு ரூ. 40, 16-25 கி.மீக்கு ரூ.60, 26-40 கி.மீக்கு ரூ.85, 41-45 கி.மீக்கு ரூ.90, 46-50 கி.மீக்கு ரூ.95, 51-55 கி.மீக்கு ரூ.100, 56-60 கி.மீக்கு ரூ.105.
சென்னை புறநகர் ரயில்வேயின் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு மார்க்கம் அதிக பயணிகள் நடமாட்டம் உள்ள பகுதியாகும். கோடை கால வெயிலில் இந்த சேவை பயணிகளுக்கு பெரும் ஆறுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய குளிர்சாதன EMU ரயில் நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. தானியங்கி கதவுகள், பயணிகளுக்கான தகவல் அமைப்பு, கண்காணிப்பு கேமரா வசதிகள் மற்றும் பயணிகள் உள்ளே செல்வதற்கும் வெளியே வருவதற்கும் உள்ள இடங்கள் தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
ரயில் நேர அட்டவணை

முதல் குளிர்சாதன EMU ரயில் சென்னை கடற்கரையிலிருந்து காலை 7.05 மணிக்கு புறப்பட்டு, தாம்பரத்தை 7.42 மணிக்கும், செங்கல்பட்டை 8.35 மணிக்கும் சென்றடைகிறது. மறுமார்க்கமாக, செங்கல்பட்டிலிருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரையை 10 மணிக்கு வந்தடைகிறது. மாலையில், சென்னை கடற்கரையிலிருந்து 3.45 மணிக்கு புறப்பட்டு, செங்கல்பட்டை 5.25 மணிக்கு அடைகிறது. மறுமார்க்கமாக செங்கல்பட்டிலிருந்து 5.45 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரையை இரவு 7.15 மணிக்கு சென்றடைகிறது.
தாம்பரம்-சென்னை கடற்கரை-தாம்பரம் குளிர்சாதன EMU சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. இது தாம்பரத்திலிருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரையை 6.45 மணிக்கு அடைகிறது. மாலையில், சென்னை கடற்கரையிலிருந்து 7.35 மணிக்கு புறப்பட்டு, தாம்பரத்தை 8.35 மணிக்கு சென்றடைகிறது. இரு மார்க்கத்திலும் இந்த சேவைகள் இயக்கப்படுகின்றன.
பயணிகளின் கோரிக்கை
பல பயணிகள் இந்த புதிய சேவையை வரவேற்றுள்ளனர். இருப்பினும், சேவையின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், கட்டணத்தைக் குறைக்கவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
சென்னை புறநகர் ரயில் பயணிகளுக்கு இது ஒரு பெரிய முன்னேற்றமாக இருந்தாலும், சேவையின் எண்ணிக்கை மற்றும் கட்டணம் குறித்த தங்களது கோரிக்கைகளை தெற்கு ரயில்வே பரிசீலிக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.