தமிழ்நாடு அரசு மாநிலமெங்கும் தொழில் கட்டமைப்பை மேம்படுத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில்,
செங்கல்பட்டு மாவட்டத்தில், தொழில் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கின்ற வகையில், செய்யூரில், சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
செங்கல்பட்டில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்த மு.க. ஸ்டாலின், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.அப்போது பேசுகையில், அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
செய்யூரில் உருவாகும் இந்த புதிய சிப்காட் தொழில்துறை பூங்கா தமிழக தொழில் வளர்ச்சிக்கு முக்கியமான ஒரு முன்னேற்றம் ஆகும். தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டு கழகம் (SIPCOT) தொழில்துறைக்கு உலகத் தரத்திலான வசதிகளை வழங்குவதில் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த தொழிற்பூங்கா, ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ், மற்றும் உற்பத்தி தொழில்கள் போன்ற பல்வேறு துறைகளுக்கு ஆதரவளிக்கும் விதமாக உருவாக்கப்படுகிறது.
வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி
இந்த புதிய தொழில்துறை பூங்காவின் வளர்ச்சி, ஆயிரக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இந்தியாவில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இந்த மாதிரியான திட்டங்கள், முதலீட்டாளர்கள் மத்தியில் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான எண்ணத்தை மேலும் ஊக்குவிக்கும்.
அந்த வகையில், உயர்தர பணியாளர்கள் மற்றும் மிகச்சிறந்த உள்கட்டமைப்புகள் கொண்ட தமிழகத்தில், தேசிய மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் முதலிடமாக தமிழ்நாட்டை தேர்வு செய்கிறார்கள். செய்யூரில் உருவாகும் தொழில்துறை பூங்கா, வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதோடு, அதனை சுற்றியுள்ள பகுதிகளின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும்.

தொழில் வளர்ச்சியில் தமிழகத்தின் கவனம்
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதலீட்டாளர்களுக்கு சாதகமான கொள்கைகள், அனுமதி செயல்முறைகளை எளிதாக்குதல், மற்றும் தொழில் மேம்பாட்டிற்கு ஊக்குவிப்புத் திட்டங்கள் போன்றவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தொழில் வளர்ச்சியை சமச்சீராக செயல்படுத்த, தொழில் வழித்தடங்கள் மற்றும் உற்பத்தி கிளஸ்டர்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
அதேசமயம், பணியாளர்களின் திறன் மேம்பாட்டில் அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. தொழில்துறை தேவைகளை பூர்த்தி செய்ய, கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி மையங்களுடன் இணைந்து வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தின் தொழில் சூழலை வலுப்படுத்தும் திட்டம்
சிறந்த சாலை வசதி, துறைமுகங்கள், மற்றும் தடையில்லா மின்சப்ளை ஆகியவை தமிழகத்தை மிகப்பெரிய தொழில்துறை மையமாக வளர்ச்சியடைய உதவுகின்றன. செங்கல்பட்டில் உருவாகும் புதிய சிப்காட் தொழிற்பூங்கா, தமிழகத்தின் தொழில் மேம்பாட்டில் மேலும் ஒரு முக்கிய மைல்கல் ஆக இருக்கும்.
அந்த வகையில் இந்த தொழிற்பூங்கா அறிவிப்பு, பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், மற்றும் தொழில்துறை மேம்பாட்டிற்கான தமிழக அரசின் உறுதிப்பாட்டையும், அதை நோக்கிய ஆக்கபூர்வமான செயல்பாட்டையும் வெளிப்படுத்துவதாக உள்ளது என்றே சொல்ல வேண்டும்!