சாதிவாரி கணக்கெடுப்பு … விஜய் எழுப்பும் கேள்வி… அதிகரிக்கும் அழுத்தம்!

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக அரசை பாமக நிறுவனர் ராமதாஸ் உட்பட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் தங்களிடம் இல்லை என்றும், அதை மத்திய அரசு தான் நடத்த வேண்டும் என்றும் தமிழக அரசு கூறி வருகிறது. அதே சமயம் மத்திய அரசுக்கும் பல்வேறு மாநிலங்களிலிருந்து இக்கோரிக்கை முன்வைக்கபட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு தரப்பில் அதற்கு ஆர்வம் காட்டப்படவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த நிலையில் பீகார், கர்நாடகா மற்றும் தெலங்கானா மாநில அரசுகள் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான ஆய்வை நடத்தி முடித்துள்ளன. இதனால், இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு நாளுக்கு நாள் அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. இருப்பினும், “இது தொடர்பாக தமிழக அரசை வலியுறுத்துவதற்குப் பதிலாக மத்திய அரசை ராமதாஸ் உள்ளிட்டவர்கள் வலியுறுத்தலாமே..?” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் திமுகவினரும் கேள்வி எழுப்புகின்றனர்.
விஜய் எழுப்பும் கேள்வி
ஆனால் இது தட்டிக்கழிக்கும் போக்கு என குற்றம் சாட்டப்படும் நிலையில், இந்த விவகாரத்தில் தவெக தலைவர் விஜய்யும் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

“தந்தை பெரியாரையும் சமூக நீதியையும் உயர்த்தி பிடிக்கும் தமிழக ஆட்சியாளர்களுக்கு சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதில் என்ன தயக்கம்?” என்று கேட்டுள்ள விஜய், “சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதில் மத்திய மற்றும் தமிழக ஆட்சியாளர்கள் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கின்றார்கள்” என்று அவர் குற்றம் சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” இந்த விவகாரத்தில், மாநில அரசுகளும் தங்களது மாநிலத்தில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்துவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் வழியிருக்கிறது. எனவே தான், பீகார் மாநில அரசும், கர்நாடக மாநில அரசும் ஏற்கெனவே சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான ஆய்வை நடத்தி முடித்து, புள்ளிவிவரங்களைக் கையில் வைத்துள்ளன. மேலும், தற்போது தெலங்கானா மாநில அரசும் வெறும் ஐம்பதே நாட்களில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான ஆய்வை (Caste Survey) நடத்தி முடித்திருக்கிறது. அது மட்டுமின்றி, ஒருபடி மேலே சென்று. அந்த ஆய்வு அறிக்கை மீது சட்டசபையின் சிறப்பு அமர்வுக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்கவும் தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் சில திட்டங்களை மற்ற மாநில அரசுகள் பின்பற்றுகின்றன என்று தமிழக ஆட்சியாளர்கள் பெருமை பேசுகின்றனர். ஆனால், சமூக நீதிக்கு அடித்தளம் அமைக்கும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான ஆய்வை நடத்தி முடித்த மற்ற மாநிலங்களைப் பின்பற்றத் தயங்குவது ஏன் என்ற கேள்விக்கு இதுவரை விடையில்லை.
தெலங்கானா மாநில அரசுக்கு மட்டும் அது சாத்தியமானது எப்படி? அங்கு சட்டசபையின் சிறப்புக் கூட்டம் கூட்டி சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வு அறிக்கையைச் சமர்ப்பித்து, விவாதம் நடத்துவதும் எப்படி? மற்ற மாநிலங்கள் போல் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான ஆய்வைக்கூட தமிழகத்தில் நடத்தவில்லையே ஏன்?

எனவே உண்மையான சம நீதி, சமத்துவ நீதி, சமூக நீதியை வழங்கும் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு முன்னோட்டமாக, அதற்கான ஆய்வை மேற்கொள்ளாமல் இனியும் தாமதித்தால் தற்போதைய ஆட்சியாளர்களின் பொய் வேடம் தானாகவே கலையும் நாள் வெகுதொலைவில் இல்லை” என்று கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் பல்வேறு கட்சிகள் தரப்பில் இருந்தும் அழுத்தங்கள் அதிகரிப்பதால் தமிழக அரசும் விரைவில் ஒரு முடிவெடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.