பட்ஜெட்டில் வரிக் குறைப்பு: நகைக் கடைகளில் அதிகரிக்கும் கூட்டம்… இப்போது தங்கம் வாங்கலாமா?

த்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. அதேபோன்று பிளாட்டினம் மீதான இறக்குமதி வரியும் 15. 4 சதவீதத்தில் இருந்து 6.4 சதவீதமாக குறைக்கப்பட்டது.

இந்த வரிக் குறைப்பு அறிவிப்பு வெளியானதுமே, தங்கத்தின் மீதான விலை நேற்று அதிரடியாக பவுனுக்கு ரூ.2,200 குறைந்து ரூ.52,400-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.275 குறைந்து ரூ. 6,550-க்கு விற்கப்பட்டது.

நகைக் கடைகளில் அதிகரிக்கும் கூட்டம்

இந்த நிலையில், தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு மேலும் ரூ.480 குறைந்து, ரூ.51,920-க்கு விற்கப்படுகிறது. இறக்குமதி வரி குறைக்கப்பட்ட 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,680 குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.335 குறைந்துள்ளது. இதனையடுத்து தங்க நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. வெள்ளி மீதான இறக்குமதி வரியும் 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ளி விலையும் 2 நாட்களில் கிராமுக்கு 4 ரூபாய் குறைந்துள்ளது. வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ.4 ஆயிரம் குறைந்துள்ளது. இதனால் வெள்ளி நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் விற்பனையும் அதிகரித்துள்ளது.

விலை குறைப்பால், இன்று காலை முதலே கடைகளில் வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கத் தொடங்கியதாகவும், வழக்கமானதைக் காட்டிலும் 10 சதவீதம் வரை அதிகரித்துக் காணப்பட்டதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ள நகைக்கடையினர், வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தற்போது ஆடி மாதம் என்பதால், திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள் அவ்வளவாக நடைபெறாது என்றாலும், அடுத்து ஆகஸ்ட்டில் ஆவணி மாதம் பிறந்து விடும் என்பதால் சுபகாரியங்களுக்குத் திட்டமிட்டுள்ளோர், விலை குறைவை கருத்தில் கொண்டு இப்போதிருந்தே நகைகள் வாங்க வரத் தொடங்கி உள்ளனர். மேலும், நகைக்கடைகளில் ஆடி மாத சிறப்புத் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளதால், கூட்டம் அதிகரிக்க அதுவும் ஒரு காரணம் என நகைக் கடைக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்போது தங்கம் வாங்கலாமா?

இந்த நிலையில், முதலீட்டு அடிப்படையில் தங்கம் வாங்க நினைப்பவர்கள் இந்த விலைக் குறைப்பை பயன்படுத்தி, அதில் முதலீடு செய்யலாமா வேண்டாமா என்பது குறித்து முதலீட்டு ஆலோசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விலை வீழ்ச்சி ஒருபுறம் இருந்தபோதிலும், தொடர்ந்து மக்களிடையே ஆர்வமும் தேவையும் இருந்தால் அது தங்கத்தின் தேவையை அதிகரிக்க வைக்கும். அவ்வாறு தேவை அதிகரிக்கும்போது தங்கத்தின் இறக்குமதி அதிகரித்தால், அது பண வீக்கத்துக்கு வழிவகுத்து ரூபாயின் மதிப்பு குறையும். இதனால், முதலீட்டாளர்களின் இலாபம் குறையும் என்பதால், தங்கத்தின் மீதான முதலீடு அதனை ஈடுகட்டும் என முதலீட்டு ஆலோசகர்கள் கூறுகின்றனர்.

மேலும், முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் வழக்கமாக இடம்பெறும் பங்குகள் மற்றும் முதலீட்டுப் பத்திரங்களுடன் தங்கத்தின் மீதும் முதலீடுகளைப் பிரித்து முதலீடு செய்தால், அது சந்தை ஏற்றத்தாழ்வுகளைச் சரி செய்து முதலீட்டாளர்களுக்கு கணிசமான இலாபத்தை தரும். அதே சமயம், முதலீட்டாளர்கள் அல்லது சிறு சேமிப்பாளர்கள் தங்களது சேமிப்புத் தொகை அல்லது முதலீட்டுத் தொகை அனைத்தையும் தங்கத்தில் மட்டுமே முதலீடு செய்வது என்பது புத்திசாலித்தனமானது அல்ல என்பது நிதி ஆலோசகர்களின் கருத்தாக உள்ளது.

மேலும் தங்கத்தின் விலை, ஏற்றம் இறக்கம் கொண்டது என்பதால், அந்த விலை ஏற்ற இறக்கங்களைத் தங்களால் தாங்கிக்கொள்ள முடியுமா என்பதைத் தீர்மானித்துக்கொண்டு, அதில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், தங்கத்தில் முதலீடு செய்யும் போது சேமிப்புச் செலவுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற செலவுகள் (நகைகளுக்கான கட்டணம் போன்றவை) முதலீட்டாளர்களின் ஒட்டுமொத்த வருமானத்தைப் பாதிக்கலாம். எனவே, தங்கத்தை மற்ற முதலீட்டுத் திட்டங்களுடன் ஒப்பிடுங்கள். அவற்றின் ரிஸ்க்-ரிட்டர்ன் ( Risk & return ) எப்படி இருக்கும் என்பதையும், உங்கள் நிதி இலக்குகளுடன் எவ்வாறு ஒத்துப்போகின்றன என்பதையும் மதிப்பிட்டு, தங்கத்தின் மீது முதலீடு செய்யலாமா என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்பதும் ஆலோசர்களின் அறிவுறுத்தலாக உள்ளது.

அத்துடன் நீங்கள் தங்கத்தை ஒரு குறுகிய கால முதலீடாகப் பார்க்கிறீர்களா அல்லது நீண்ட கால முதலீடாகப் பார்க்கிறீர்களா என்பதை முடிவு செய்யுங்கள். நீண்ட கால முதலீடே இலாபம் தரும் என்பதால், அதன் அடிப்படையில் முதலீட்டைத் தீர்மானியுங்கள் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Simply the best the fender telecaster !. Ardèche en vigilance rouge aux crues : les images d’annonay et de l’autoroute a47 inondées. Generalized anxiety disorder (gad) signs.