ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் கட்டண உயர்வு… BSNL-க்குத் தாவும் வாடிக்கையாளர்கள்… சிம் கார்டை மாற்றுவது எப்படி?
தனியார் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ, ஏர்டெல், வோடாஃபோன்- ஐடியா ஆகிய மூன்றும், தங்களது கட்டணங்களை அதிரடியாக அண்மையில் உயர்த்தின. இதனால், வாடிக்கையாளர்களின் பார்வை தற்போது பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் ( BSNL)-ஐ நோக்கித் திரும்பி உள்ளது.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றதிலிருந்தே ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ நிறுவனம் உட்பட, தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், ஜியோ நிறுவனத்தின் விளம்பரங்களில் அனுமதியின்றி பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டதும் சர்ச்சையை கிளப்பியது.
இன்னொருபுறம், தனியார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவைகளை வழங்கி வரும் நிலையில், அரசு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்-லுக்கு 4 ஜி சேவைக்கான அனுமதி வழங்காமல், அரசு நீண்ட காலம் இழுத்தடித்ததும் கடுமையான விமர்சனங்களை எழுப்பியது. “தொலைத் தொடர்பு துறையில், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கோலோச்ச வேண்டும் என்பதற்காகவே பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை முடக்கும் விதமாக அரசின் நடவடிக்கைகள் உள்ளன” என்று அந்த நிறுவனத்தின் ஊழியர் சங்கங்கள் குற்றம் சாட்டி இருந்தன.
இது தொடர்பான போராட்டங்களையும் அவர்கள் முன்னெடுத்த நிலையில்தான், ஒரு வழியாக நாட்டின் அனைத்து கிராமங்களிலும், 26,316 கோடி ரூபாய் மதிப்பில், ‘4ஜி’ சேவை வழங்க, 2022 ஜூலை 22 ல் தேதி அனுமதி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதற்கான உட்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், ஒருவழியாக இந்த ஆண்டுதான் பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களுக்கு 4 ஜி சேவை கிடைத்தது.
கட்டண உயர்வும் எதிர்ப்பும்
இந்த நிலையில்தான், ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய மூன்று பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ஒரே நேரத்தில் தங்கள் டேட்டா திட்டங்களின் விலையை இந்த மாதம் உயர்த்தின. ஆனால் BSNL நிறுவனம் கட்டணத்தை உயர்த்தவில்லை. இதைத் தொடர்ந்து , வாடிக்கையாளர்கள் தங்களது X சமூக வலைதளங்களில் கட்டண உயர்வுக்கு எதிராக கருத்துகளைப் பதிவிட்டனர். ‘JioBoycott’ என்ற ஹேஷ்டேக் X தளத்தில் ட்ரெண்டானது. மேலும், ‘BSNL-க்கு மாறுவோம்’ என அழைப்பு விடுத்தும் அவர்கள் தங்களது கருத்துகளைப் பதிவிட்டனர்.
பி.எஸ்.என்.எல்-க்குத் தாவும் வாடிக்கையாளர்கள்
தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் கட்டணங்கள் எப்போதும் குறைவாகவே இருக்கிறது. ஆனால், சில இடங்களில் நெட் ஒர்க் கிடைப்பதில் ஏற்பட்ட பிரச்னைகள், 4ஜி சேவை கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் ‘அரசு நிறுவனங்கள் என்றாலே மோசம்’ எனப் பொதுப் புத்தியில் விதைக்கப்பட்ட கருத்து போன்றவற்றால், வாடிக்கையாளர்களிடையே பி.எஸ்.என்.எல் சேவைக்கு மாறுவதில் சில தயக்கங்கள் இருந்து வந்தன. ஆனால், தனியார் நிறுவனங்கள் அண்மையில் செய்த கட்டண உயர்வு, இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை பி.எஸ்.என்.எல்-க்கு தாவ வைத்துள்ளது.
ஜியோவில் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் ரூ.299 விலையில் கிடைக்கிறது. இந்த திட்டத்தில், நாளொன்றுக்கு 100 இலவச எஸ்.எம்.எஸ், அன்லிமிடெட் அழைப்பு களுடன் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா வீதம் 42 ஜிபி டேட்டா கிடைக்கிறது. அதே போல, ஏர் டெல் நிறுவனத்தின் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்துக்கும் ரூ. 299 ஆக விலை நிர்ணயம் இருக்கிறது. இந்த திட்டத்தில், 1 ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு மொத்தமாக 28 ஜிபி டேட்டாவும், அன்லிமிடெட் அழைப்புகள், நாளொன்றுக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் வழங்குகிறது. வோடஃபோன்-ஐடியா நிறுவனமும் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை ரூ.299 விலைக்கு வழங்கும் நிலையில், இந்த திட்டத்தில் 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு, 100 இலவச எஸ்எம்எஸ் வழங்குகிறது.
ஆனால் பி.எஸ்.என்.எல் நிறுவனம், வெறும் ரூ.199 விலைக்கு 40 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை வழங்குகிறது. தினமும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும் நிலையில், ஒரு மாதத்திற்கு 80 ஜிபி டேட்டாவை பயன்படுத்தும் வகையில் பிரம்மாண்ட சலுகை கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோக அன்லிமிடெட் அழைப்புகள், 100 எஸ்எம்எஸ் இலவச சலுகைகளும் கிடைப்பதால், ஜியோ, ஏர்டெல், வோடபோன்- ஐடியா வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை நோக்கி தாவத் தொடங்கி உள்ளனர். கடந்த 5 நாட்களில் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன்- ஐடியா சிம்களை வைத்திருக்கும் 80 லட்சம் வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல் சேவைக்கு மாறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோடிக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வலியுறுத்தல்
இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் இணைந்த பாரதிய மஸ்தூர் சங்கம் (BMS), தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சமீபத்திய மொபைல் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. அத்துடன், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் உள்நாட்டு தொழில்நுட்பம் வளரும் வரை, உலகளாவிய உபகரணங்களைப் பயன்படுத்தி, 4ஜி, 5ஜி சேவை உட்பட அதன் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியது உடனடி அவசியம் என்றும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளது.
BSNL சேவைக்கு மாறுவது எப்படி?
இந்த நிலையில், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின்சேவைகளை வைத்து இருக்கும் வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல் சேவைக்கு மாற விரும்பினால், முதலில் யுனிக் போர்ட்டிங் கோட் (Unique Porting Code) கோரிக்கை கொடுக்க வேண்டும். இதைச் செய்ய உங்களது மொபைலில் இருந்து 1900 என்ற எண்ணுக்கு போர்ட் (Port) என டைப் செய்து, பிறகு ஸ்பேஸ் விட்டு, உங்களின் 10 இலக்க மொபைல் எண்ணை டைப் செய்து அனுப்ப வேண்டும்.
இதைச் செய்த பிறகு 15 நாட்களுக்கு யுபிசி போர்ட் அவுட் செல்லுபடியாகும். இந்த நாட்களுக்குள் அருகில் இருக்கும் பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி, விண்ணப்ப படிவத்தை எழுதி கொடுத்து, சிம் கார்டை மாற்றிக் கொள்ளலாம். இதற்காக எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது.