‘பைசன் காளமாடன்’: படப்பிடிப்பை முடித்த மாரி செல்வராஜ்… அடுத்த படம் யாருடன்?

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் மற்றும் வாழை ஆகிய படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், அடுத்ததாக துருவ் விக்ரம் நடிப்பில் ‘பைசன் காளமாடன்’ என்ற படத்தினை தொடங்கினார்.இந்த படத்தின் கதை கபடி விளையாட்டை அடிப்படையாக கொண்டது.
வழக்கம்போல் மாரி செல்வராஜுக்குப் பிடித்தமான திருநெல்வேலி பகுதிகளிலேயே இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. அடுத்ததாக சென்னையில் கபடி போட்டி நடைபெறுவது போன்று அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது. தற்போது, அத்துடன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவுற்றதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இது குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “அத்தனை நாள்களின் அயராத உழைப்பு, அயராத முயற்சிகள் மற்றும் நிலையான ஆதரவு அனைத்தும் எல்லையற்ற உணர்ச்சிகளாக ஒன்றிணைந்துள்ளன” எனக் குறிப்பிட்டிருந்தார்.

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, கலையரசன், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் எழில் அரசு. இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா.
‘பைசன் காளமாடன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து டப்பிங், பின்னணி இசை உள்ளிட்ட இறுதிகட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த படம் கோடை ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.
தனுஷுடன் அடுத்த படம்?

அடுத்ததாக தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் படத்தினை மாரி செல்வராஜ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ‘பைசன் காளமாடன்’ பட வெளியான பின்னர் அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது. அதே சமயம் கதை, திரைக்கதை எழுதும் பணியை மாரிசெல்வராஜ் விரைவில் தொடங்கிவிடுவார் எனத் தெரிகிறது.