ஏடிஎம்-மில் பணம் எடுக்கும் கட்டணம் உயருகிறது… எவ்வளவு அதிகரிக்கும்?

வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கு வைத்துள்ள வங்கி ஏடிஎம் மையங்களில், தற்போதுள்ள விதிமுறைப்படி 5 முறை இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம். அதற்கு மேல் பணம் எடுப்பதற்கு பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதேபோல் இதர வங்கி ஏடிஎம்-களில் இருந்து 3 முறை இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம். அதன்பிறகு ஒவ்வொரு பண பரிவர்த்தனைக்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ.21 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
கட்டண உயர்வு எவ்வளவு?
இந்த நிலையில், இலவச வாய்ப்புக்குப் பின்னர் ஏடிஎம்-மிலிருந்து பணம் எடுத்தால், அதற்கான பரிவர்த்தனை கட்டணத்தை ஒவ்வொரு முறைக்கும் ரூ.22 ஆக அதிகரிக்க இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India – NPCI) பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரையை அமல்படுத்துவது குறித்து ரிசர்வ் வங்கி தற்போது ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ரொக்க பரிவர்த்தனைக்கான ஏடிஎம் பரிமாற்றக் கட்டணத்தை, தற்போதைய கட்டணமான ரூ. 17 லிருந்து 19 ரூபாயாக அதிகரிக்கவும், ரொக்கம் அல்லாத பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தை 6 ரூபாயில் இருந்து 7 ரூபாயாக அதிகரிக்கவும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் பரிந்துரைத்துள்ளது.
விரைவில் அமல்?

இந்த பரிந்துரையை அமல்படுத்துவ குறித்து ரிசர்வ் வங்கி தரப்பில் இன்னும் அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் பரிந்துரை ஏற்கப்பட்டு, கட்டண உயர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, மெட்ரோ மற்றும் மெட்ரோ அல்லாத பகுதிகளுக்கான கட்டணங்களை அதிகரிக்கும் தேசிய கொடுப்பனவு கழகத்தின் இந்த பரிவர்த்தனை கட்டண உயர்வை வங்கிகள் அமல்படுத்தினால், வங்கி அல்லாத ஏடிஎம் ஆபரேட்டர்களும் அமல்படுத்த திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
ஏடிஎம் பரிமாற்றக் கட்டணம் என்பது ஏடிஎம் சேவைகளைப் பயன்படுத்த ஒரு வங்கி மற்றொரு வங்கிக்கு செலுத்தும் கட்டணமாகும். இந்தக் கட்டணம் எடுக்கப்படும் பண பரிவர்த்தனையின் மதிப்பில் ஒரு சதவீதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.