தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், 2030-க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு மாற்றம் பெறுவதற்கும் தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகளை மேற்கொண்டுவருகிறது.
மாநிலத்தில் அனைவரையும் உள்ளடக்கிய சீரான, மற்றும் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திடும் வகையில், இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு அம்சமாக, கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது, பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதில் காலணிகள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள டீன் ஷுஸ் நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
அரியலூரில் காலணி பூங்கா
அந்த வகையில், அரியலூர் மாவட்டம் கொல்லாபுரம் பகுதியில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரியலூர், சிப்காட் ஜெயம்கொண்டம் தொழிற்பூங்காவில் டீன் ஷூஸ் (Dean Shoes) நிறுவனம் அமைக்கவுள்ள காலணிகள் உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். இந்த தொழில் பூங்காவானது, உடையார்பாளையம் தாலுகாவில், ஜெயம்கொண்டம்-விருத்தாசலம் சாலையில் அமைந்துள்ளது.
15,000 பேருக்கு வேலைவாய்ப்பு
தைவான் நாட்டைச் சேர்ந்த டீன் ஷூஸ் நிறுவனம் 1000 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கவுள்ள இந்த காலணிகள் உற்பத்தி தொழிற்சாலை மூலம் , 15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் தோல் அல்லாத காலணிகள் துறையில், தமிழ்நாட்டில் 75,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், சுமார் 6300 கோடி ரூபாய் முதலீடு இத்துறையில் ஈர்க்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பான்மையான வேலைவாய்ப்புகள் பெண்களுக்கானது எனத் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நடைபெற்ற அரசு விழாவில், ரூ.120 கோடி மதிப்பிலான 53 வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ரூ.88 கோடி மதிப்பில் 507 முடிவுற்ற திட்டப்பணிகளையும் துவக்கி வைத்தார்.