நீதிபதிகள் நியமனத்தில் சமீப காலமாகவே குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கே அதிகம் வாய்ப்பு அளிக்கப்படுவதாகவும், சமூக நீதி பின்பற்றப்படுவதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக மத்தியில் ஆளும் பாஜக-வுக்கு ஆதரவான கொள்கை கொண்டவர்களே நீதிபதிகளாக பரிந்துரைக்கப்படுவதாகவும் புகார் கூறப்படுகிறது. அதிலும் நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் கொலிஜியத்தின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருப்பதில்லை என்றும் பல்வேறு வழக்கறிஞர்கள் மற்றும் முன்னாள் நீதிபதிகள் புகார் கூறுகின்றனர்.
இந்திய நீதித்துறை உயரடுக்கு பிரிவினர், ஆண், உயர் சாதி இந்துக்களால் ஆதிக்கம் செலுத்தப்படுவதாகவும், குறிப்பாக உச்ச நீதிமன்றத்தில் பரம்பரை பரம்பரையாக நீதிபதிகளின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களே ஆதிக்கம் செலுத்துவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சமீபத்தில் ஓய்வுபெற்ற முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மீது இந்த குற்றச்சாட்டு கூறப்பட்டதுண்டு. ஆனால் அவர் அதை மறுத்துள்ளார்.
நீதிபதிகள் நியமனத்தில் நடப்பது என்ன..?
இந்த நிலையில், நீதிபதிகள் நியமனம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதிகள் கே. சந்துரு மற்றும் ஹரி பரந்தாமன் ஆகியோர் இன்று பரபரப்பான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர்கள், ” உயர் நீதிமன்றங்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம் குறித்து அரசியல் அமைப்பில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. ஒரு சில குழுக்களில் இருந்து மட்டும் நீதிபதிகள் பிரதிநிதித்துவம் வராமல் பட்டியலின, பழங்குடியின, சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் பிரதிநிதித்துவம் வர வேண்டும்.

நாட்டில் உள்ள மாநிலங்களில் உள்ள நீதிபதிகளில் 79 சதவீதம் பேர், மக்கள்தொகையில் 10 சதவீதம் மட்டும் இருக்கும் உயர் சாதியை சேர்ந்தவர்கள். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 34 பேரில் 34 சதவீதம் பேர் குறிப்பிட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். அவர்கள் வர வேண்டாம் என கூறவில்லை. மற்ற வகுப்பினருக்கும் வாய்ப்பு தர வேண்டும்.
நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் கொலிஜியத்தின் ஆவணங்கள் யாருடைய பார்வைக்கும் கிடைப்பதில்லை. ரகசியமாக வைக்கப்படுகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது 10 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த ஆண்டு 25 முதல் 30 நீதிபதிகள் நியமனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. அதில் சமூகநீதியை பின்பற்றி அனைத்து சாதியினரும் நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டும்.
நீதிபதி விக்டோரியா கௌரி பாஜக பின்புலம் கொண்டவர். அவருக்கு நீதிபதிக்கான தகுதி இல்லை என வழக்கறிஞர்கள் புகார்கள் அனுப்பினர்.
ஆனால் ஏற்கனவே பரிந்துரை செய்துவிட்டோம் என கூறிவிட்டனர். ஆனால் நீலகண்டனை நீதிபதியாக நியமிக்கவில்லை. ஏனெனில் அவர் திமுகவை சேர்ந்தவர். இனியாவது சமூகநீதியை கடைபிடிக்க வேண்டும். ஒரு சிறிய குழுவுக்கு அதிமுக்கியத்துவம் வழங்குவதை தவிர்க்க வேண்டும்.
பெண்கள், அனைத்து சமூக மக்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். கொலிஜியம் பரிந்துரை செய்தும் நீதிபதிகளாக நியமனம் செய்யாமல் உள்ள ஜான் சத்யன், அமீத், நீலகண்டன் ஆகியோரை நீதிபதிகளாக நியமனம் செய்ய வேண்டும். 75 ஆண்டுகளில் மக்கள்தொகையில் அதிகமாக உள்ள ஓபிசி, பட்டியலின, பழங்குடியின, பெண்கள் மற்றும் சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர்களுக்கு உயர்நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றத்தில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை.
ஒரு குறிப்பிட்ட சித்தாந்தம் கொண்ட சங்கிகள் மட்டுமே நீதிபதிகளாக நியமிக்கப்படுகின்றனர். பல சமூகங்களை சேர்ந்தவர்கள் இதுவரை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக இருந்ததே இல்லை. 2018 ஆண்டு முதல் 2023 வரை நடைபெற்ற நீதிபதி நியமனங்களில் 601 பேரில் 457 பேர் உயர் வகுப்பை சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டில் இருந்து sc வகுப்பை சேர்ந்த ஒருவர் தான் உச்சநீதிமன்ற நீதிபதியாக சென்றுள்ளார். கேரளாவில் இருந்து உச்ச நீதிமன்றம் சென்ற 18 பேரில் ஒருவர் கூட பிற்படுத்தபட்டவர்கள் இல்லை.
மத்திய அரசுக்கு இணக்கமாக இருப்பவர்கள் மட்டுமே நீதிபதிகளாக நியமிக்கப்படுகின்றனர். நீதிபதிகளை கொலிஜியம் நியமிப்பதில்லை. கொலிஜியம் பெயரை பயன்படுத்தி மத்திய அரசு தான் நீதிபதிகளை நியமிக்கிறது. வருமானவரி துறை, அமலாக்க துறை போன்று நீதித்துறையும் மத்திய அரசு கையில் எடுத்துக் கொள்கிறது. நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பின்பற்றி பன்முகத் தன்மையை கடைபிடிக்கப்பட வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டனர்.