விலகும் அண்ணாமலை…தமிழக பாஜக-வுக்குப் புதிய தலைவர் யார்?

தமிழக பாஜக-வில் தலைமை மாற்றம் குறித்த பேச்சு தீவிரமடைந்துள்ளது. தற்போதைய மாநிலத் தலைவர் அண்ணாமலைக்குப் பதில் புதிய தலைவராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்த ஆலோசனை பட்டியலில் 4 பேர் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போதைய மாநிலத் தலைவர் அண்ணாமலை, 2021-ல் பதவியேற்ற பிறகு, தனது ஆக்ரோஷமான அரசியல் பாணியால் கவனம் பெற்றவர். ஆனால், அவரது தலைமையின் கீழ் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஒரு இடத்தையும் வெல்லவில்லை. இதனால், அவரை மாற்ற வேண்டும் என அப்போதே கட்சித் தலைமையிடம் தமிழக பாஜக-வின் ஒரு பிரிவு தலைவர்கள் வலியுறுத்தியதாக செய்திகள் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில், வருகிற தமிழ்ப் புத்தாண்டுக்கு (ஏப்ரல் 14 ) முன்னதாக அண்ணாமலைக்கு பதில் புதிய தலைவர் அறிவிக்கப்பட்டு விடுவார் என்றும் கூறப்படுகிறது.
மாற்றம் ஏன்?
2024 தேர்தல் தோல்வி, அண்ணாமலையின் தலைமையை கேள்விக்குள்ளாக்கியது. அதிமுகவுடனான கூட்டணியை முறித்ததால், அது வாக்குகளைப் பிரித்து திமுகவுக்கு சாதகமான நிலைமையை ஏற்படுத்தியது. மேலும், உள்கட்சி குழப்பம் குறித்தும் கடந்த ஜனவரியில், தமிழிசை மற்றும் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் டெல்லியில் தேசிய தலைமையிடம் அண்ணாமலை மீது புகார் அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. மேலும், தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் அமைவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.

சமீபத்தில், இது தொடர்பாக டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக – பாஜக கூட்டணிக்கு சில குறிப்பிட்ட நிபந்தனைகளை அமித் ஷாவிடம் முன்வைத்ததாக சொல்லப்பட்டது. குறிப்பாக “தமிழகத்தில் கூட்டணிக்கு அதிமுக தலைமையேற்கும். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் முக்கியத்துவம் குறைக்கப்பட வேண்டும். முடிந்தால் அவருக்குப் பதிலாக வேறு ஒரு இணக்கமான ஒருவரை நியமித்தால் நலம் ” என்று எடப்பாடி வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
அதனை அமித் ஷாவும் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்தே எடப்பாடியின் டெல்லி விசிட்டைத் தொடர்ந்து அண்ணாமலை டெல்லி வரவழைக்கப்பட்டார். அவரிடம் அமித் ஷா நிலைமையை விளக்கி, தமிழக பாஜக-வுக்கு புதிதாக ஒருவரை நியமிக்க முடிவு செய்திருப்பதாக கூறியதாகவும், அதனை அண்ணாமலையும் ஏற்றுக்கொண்டதாக பதவி விலக ஒப்புக்கொண்டதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த தலைவர் யார்..? பட்டியலில் 4 பேர்

இந்த நிலையில், தமிழக பாஜக-வுக்கான புதிய தலைவர் யார் என்பது குறித்த ஆலோசனை பட்டியலில் மத்திய இணையமைச்சர் எல். முருகன், தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகிய 4 பேர் உள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், நயினார் நாகேந்திரனுக்கே அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. “ஏப்ரல் 5-ல் நயினார் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்படலாம், ஏப்ரல் 6-ல் மோடி தமிழகம் வரும்போது அவருடன் பொதுக்கூட்டத்தில் கட்சித் தலைவராக அறிமுகமாவார்” என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நயினார் நாகேந்திரன் ஏற்கெனவே அதிமுக-வில் இருந்தவர் என்பதால், 2026 தேர்தலில் அதிமுகவினர் பாஜகவுடன் நல்ல இணக்கமுடன் பணியாற்ற வாய்ப்பு உள்ளதாக கட்சித் தலைமை கருதுகிறது.
நயினார் நாகேந்திரன், திருநெல்வேலியை சேர்ந்த மூத்த தலைவர். அவர் சட்டமன்ற உறுப்பினராகவும், கட்சியின் தலைமைப் பொறுப்புகளை கையாண்டவர். அவரது அனுபவம், அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு உதவலாம் என்று கட்சி நம்புகிறது.

தமிழகத்தில் பாஜகவுக்கு இன்னும் வலுவான அடித்தளம் இல்லை. அண்ணாமலை, கட்சியை பிரபலப்படுத்தினாலும், வெற்றியை பெற முடியவில்லை. இந்த நிலையில், தமிழக பாஜக-வுக்கான புதிய தலைவர், திமுக மற்றும் அதிமுகவை எதிர்கொள்ள, கூட்டணி உத்தியை பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அத்துடன் தமிழக பாஜகவின் எதிர்கால பாதையை தீர்மானிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அந்த வகையில், அண்ணாமலைக்கு பதிலாக நயினார் நாகேந்திரன் தலைவராவது, தமிழக பாஜகவுக்கு 2026-ஐ நோக்கிய பயணத்தில் முக்கிய திருப்பமாக இருக்கும்.