ராஜினாமாவில் அண்ணாமலை உறுதி… நயினார் நாகேந்திரனை நியமிப்பதில் என்ன சிக்கல்?
நாடாளுமன்ற தேர்தல் தோல்வியால் கட்சிக்குள்ளேயே ஏற்பட்டுள்ள நெருக்கடி மற்றும் சர்வதேச அரசியல் குறித்து படிக்க மூன்று மாதங்கள் லண்டன் செல்ல இருப்பது உள்ளிட்ட காரணங்களால், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை கட்சி மேலிடத்திடம் கொடுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், தமிழக பாஜக-வுக்கு எந்த நேரமும் புதிய தலைவர் நியமிக்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர், தமிழ்நாட்டில் அடிக்கடி பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து எதிர்க்கட்சி முதல் கூட்டணிக் கட்சி வரை அனைவரையும் விமர்சித்து அதிரடியாக பேசிவந்தார் அண்ணாமலை. ‘நாங்கள் தான் உண்மையான எதிர்க்கட்சி’ என்றும் அவர் கூறிவந்தார்.
ஆனால், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் அண்ணாமலை அடிக்கடி செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்த்து வந்தார்.பரபரப்பை கிளப்பும் வகையிலான பேச்சுக்களும் குறைந்துவிட்டன. ‘தேர்தல் தோல்விக்கு, கூட்டணி தொடர்பாக அண்ணாமலை எடுத்த தவறான முடிவு தான்’ என்று தமிழக பாஜக தலைவர்களே வெளிப்படையாக தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.இது தொடர்பாக, தமிழிசை சவுந்தரராஜனுக்கும் அண்ணாமலைக்கும் இடையேயான வார்த்தை போர் வெளிப்படையாகவே வெடித்து, சர்ச்சையானது. பின்னர், உள்துறை அமைச்சர் அமித்ஷா தலையிட்டதைத் தொடர்ந்து மோதல் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில், தனக்கு எதிராக கட்சிக்குள்ளேயே எழுந்த எதிர்ப்பு மற்றும் தம் மீதான மோடி, அமித் ஷா, ஜே.பி. நட்டா உள்ளிட்ட மேலிடத்தலைவர்களின் கோபம் போன்றவற்றினால் அண்ணாமலை மனதளவில் சோர்வடைந்ததாக கூறப்படுகிறது.மேலும், அவர் சர்வதேச அரசியல் குறித்து படிக்க மூன்று மாதங்கள் லண்டன் செல்லவும் திட்டமிட்டுள்ளார்.
ராஜினாமா கடிதம் வழங்கிய அண்ணாமலை
இத்தகைய காரணங்களால், அவர் அண்மையில் டெல்லி சென்று, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து, தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கடிதம் அளித்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த மாதம் இறுதியில் லண்டனுக்கு படிப்பதற்காக செல்ல அவர் திட்டமிட்டு இருப்பதையும் கூறி, தனக்கு தீவிர அரசியலிலிருந்து 3 மாதங்கள் விடுப்பு தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கு ஜே.பி.நட்டா, மோடி, அமித்ஷாவிடம் பேசி விட்டு முடிவை சொல்வதாக அறிவித்தார். இதற்கிடையில் அண்ணாமலை, பாஜக அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷை சந்தித்து பேசினார். இது தொடர்பாக பி.எல்.சந்தோஷ், “அண்ணாமலைக்கு மாநிலங்களவை எம்.பி பதவி வழங்கலாம். தேசிய அளவில் ஏதாவது ஒரு பொறுப்பு வழங்கி, எந்த மாநிலத்திற்காகாவது பொறுப்பாளராக நியமிக்கலாம். ஒரு தேர்தல் தோல்வியால் அவரை இழந்து விட வேண்டாம். அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம்” என்று ஜே.பி.நட்டாவிடம் பேசியதாக கூறப்படுகிறது.
அதற்கு நட்டா, ” பிரதமர் மோடி, அமித்ஷாவிடம் பேசி முடிவு செய்வோம் என்றும் அப்போது தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், எந்த முடிவும் இதுவரை எட்டப்படவில்லை. அதே சமயம், அண்ணாமலை தனது லண்டன் பயணத்துக்கான ஏற்பாடுகளில் தீவிரமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அண்ணாமலையின் ராஜினாமா ஏற்கப்பட்டு, அவருக்குப் பதிலாக புதிய தலைவர் குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய தலைவர் நயினார் நாகேந்திரனா?
அப்படி பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விடுவிக்கப்பட்டால், அடுத்து புதிய தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.அநேகமாக தலைவர் பதவிக்கு இந்த முறை தென்மாவட்டத்தில் இருந்து தலைவரை தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்மாவட்டத்தில் உள்ள பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் ஏற்கனவே தலைவர்களாக இருந்து விட்டனர்.
அவர்கள் மீண்டும் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பில்லை. அதே நேரத்தில் சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை தலைவராக நியமிக்கலாமா என்ற பேச்சு அடிப்பட்டு வருகிறது. அவருக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் முழு ஆதரவு கொடுத்துள்ளார். அதே சமயம், தேர்தல் நேரத்தில் 4 கோடி ரூபாய் சிக்கிய விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் பெயர் அடிபடுவதால், அதுமட்டும் அவருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.எப்படி இருந்தாலும், இன்னும் ஓரிரு நாளில் தமிழக பாஜக-வுக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுவிடுவார் என்றே தெரிகிறது.