‘… அதுவரை அண்ணா தான் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருப்பார்!’
பேரறிஞர் அண்ணாவின் 56 ஆவது நினைவு நாள் இன்று. இதனையொட்டிய சிறப்பு கட்டுரை…
அது 1967 ஆம் ஆண்டு…. நாட்டின் நான்காவது நாடாளுமன்ற தேர்தலுடன் மாநில சட்டசபைகளுக்கும் சேர்த்தே தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தல் தான் நாட்டில் ஒரு அரசியல் பூகம்பத்தையே ஏற்படுத்தியது. தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. தேர்தல் முடிவுகள் வெளியானபோது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு மாபெரும் அதிர்ச்சி. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டாலும், அதன் பெரும்பான்மை பலம் மிகக் குறைவாகவே இருந்தது. அதைவிட பெரிய அதிர்ச்சி தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது.
அந்த தேர்தலில் தோல்வி அடைந்த காங்கிரஸ் கட்சியால் இன்னும் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க இயலவில்லை. இந்த வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்தியவர் ‘ தமிழக மக்களால் ‘அண்ணா’ என இன்றளவும் அன்புடன் அழைக்கப்படும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ( திமுக) நிறுவனரான சி.என். அண்ணாதுரை.
ஆட்சியின் தொடக்கமே அதிரடி
தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் சூழல் உருவான நிலையில், கட்சியினரின் வேண்டுகோளுக்கிணங்க தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்த அண்ணா, 1967 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி மிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். முதலமைச்சரும் மற்ற அமைச்சர்களும் கடவுளின் பெயரால் உறுதிமொழி ஏற்றுக்கொள்வதுதான் அதுநாள்வரை நடைமுறையில் இருந்தது. அந்த நடைமுறையை மாற்றியமைத்த அண்ணாவும் அவரது அமைச்சர்களும் ‘உளமாற’ உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
தேர்தல் களத்தில், பெரியாரின் கடும் எதிர்ப்பையும் மீறி அண்ணா வெற்றிப் பெற்றிருந்தாலும், அவரது தலைமையில் பதவியேற்ற அரசு, பெரியாரின் கொள்கைகளை நிறைவேற்றும் அரசாகவே தனது பணிகளைத் தொடங்கியது.
வடமொழி ஒழிப்பு
1967 ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ம் நாள், சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ‘தமிழக அரசு – தலைமைச் செயலகம்’ என்ற பெயர்ப் பலகை வைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் முத்திரையான கோபுரச் சின்னத்தில் இருந்த ‘கவர்மெண்ட் ஆஃப் மெட்ராஸ்’ என்ற ஆங்கில வாக்கியம் நீக்கப்பட்டு, ‘தமிழக அரசு’ என்ற மாற்றம் செய்யப்பட்டது. மேலும், அரசு முத்திரையில் இடம் பெற்றிருந்த ‘சத்யமேவே ஜெயதே’ என்ற வடமொழி வாக்கியம் நீக்கப்பட்டு, ‘வாய்மையே வெல்லும்’ என்று தமிழில் எழுதப்பட்டது.
மங்களம் பாடப்பட்ட ‘மணிப்பிரவாள நடை’
நீதிக்கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் தமிழும் சமஸ்கிருதமும் சரிக்குச் சரி கலந்து பேசும் ‘மணிப்பிரவாள நடை’ வழக்கத்தில் இருந்தது. அண்ணா, தன்னுடைய பேச்சாலும் எழுத்தாலும் தனித் தமிழைப் பரப்பியதுடன் தனது தம்பிகளான கழகத்தினரையும் அப்பணியை முதன்மைப் பணியாக மேற்கொள்ளச் செய்தார். இதன் விளைவாக மணிப்பிரவாள நடை, மறையத் தொடங்கியது. அக்ராசனர் – தலைவராகவும், காரியதரிசி – செயலராகவும், பொக்கிஷதார் – பொருளாளராகவும், பிரசங்கம் – சொற்பொழிவாகவும், உபன்யாசம் – உரையாகவும், மகாஜனம் – பொதுமக்களாகவும், ராஜ்ஜியம் – அரசாகவும், நமஸ்காரம் – வணக்கமாகவும், கிருஹப் பிரவேச மஹோற்சவ விஞ்ஞாபனம் – புதுமனைப் புகுவிழா அழைப்பிதழாகவும், கல்யாண பத்திரிகை – திருமண அழைப்பிதழாகவும், ஸ்ரீ – திருவாகவும், ஸ்ரீமதி – திருமதியாகவும் மாற்றம் பெற்றுத் தமிழ் எங்கும் மணக்கத் தொடங்கியது.
அண்ணா முதலமைச்சரானதும் ஸத்யமேவ ஜயதே – வாய்மையே வெல்லும் எனவும், மதராஸ் கவர்மெண்ட் – தமிழக அரசு எனவும், செக்ரடேரியட் – தலைமைச் செயலகம் எனவும், சென்னை மாகாணம் – தமிழ்நாடு மாநிலம் எனவும், அசெம்பிளி – சட்டமன்றம் எனவும், ஸ்பீக்கர் – பேரவைத் தலைவர் எனவும், மந்திரி – அமைச்சர் எனவும், கனம் – மாண்புமிகு எனவும், கமிஷனர் – ஆணையர் எனவும், கலெக்டர் – மாவட்ட ஆட்சியர், நமஸ்காரம் – வணக்கம் எனவும் மாற்றம் கண்டன.
‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றம்
முதலமைச்சர்1967 ஜூலை 18-ம் நாள், அதுநாள்வரை மெட்ராஸ் ஸ்டேட் என்றும் சென்னை மாகாணம்’ என்றும் அழைக்கப்பட்டு வந்த நமது மாநிலத்தை, ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றம் செய்வதாகச் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்தத் தீர்மானத்துக்கு இந்திய அரசியல் சட்டத்தின் மூலம் மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டது.
சுயமரியாதைத் திருமணச் சட்டம்
தந்தை பெரியார் தொடங்கி வைத்த சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்டப்படி அங்கீகாரம் இல்லாமல் இருந்த நிலையில், அதைச் சட்டப்பூர்வமாக்கினார் பேரறிஞர் அண்ணா. ‘சென்னை மாகாணத்தைத் தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றித் தீர்மானம் நிறைவேற்றிய அதே நாளில், இந்து திருமண (தமிழ்நாடு திருத்த) சட்டமுன்வரைவைக் கொண்டுவந்து அதனைச் சட்டமாகவும் நிறைவேற்றினார்.
இருமொழிக் கொள்கை
“இந்தி பேசாத மக்கள்மீது அம்மொழி திணிக்கப்படமாட்டாது” என்று நேரு அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்ற நடுவண் அரசு தயக்கம் காட்டி வந்ததால் 1967 நவம்பர் மாதம் முதல் தமிழ்நாட்டில் மாணவர்கள் மீண்டும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடங்கியிருந்தனர். அப்போது முதலமைச்சராக இருந்த அண்ணா, மாணவர் தலைவர்களை அழைத்துப் பேசி அவர்கள் விருப்பப்படியே 1968 சனவரி 23-ம் நாள் தமிழ்நாடு சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டித் ”தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை” என்று அறிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளில் மட்டும் கற்பிக்கப்படும் என்று இருமொழிக் கொள்கையை அறிவித்து நடைமுறைப்படுத்தினார். தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் கட்சி உட்பட, அனைத்துக் கட்சிகளும் இதை ஏற்றுக்கொண்டன.
அண்ணா தான் தமிழ்நாட்டை ஆள்கிறார்!
அண்ணா ஆட்சியில் இருந்தது இரண்டு வருடங்கள் தான். ஆனால், தந்தை பெரியார் மேடைகளில் முழங்கிக் கொண்டிருந்த சமூக நீதி, சமத்துவ, மாநில சுயாட்சி கொள்கைகளுக்கு செயல்வடிவம் கொடுத்து அவற்றை நடைமுறைப்படுப்பத்தி காட்டி, அவருக்குப் பின் வந்த ஆட்சியாளர்களும் அதை இன்றளவும் தொடரச் செய்து கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் அண்ணா சட்டசபையில் முழங்கியபோது அவர் சொன்ன வார்த்தை இது…
“வேறொருவர் இங்கு ( சட்டசபையில்) வந்து உட்கார்ந்து, அண்ணாதுரை கொண்டுவந்த இவற்றை எல்லாம் மாற்ற வேண்டும் என்று கருதினாலே, உடனே மக்கள் வெகுண்டெழுவார்கள் என்ற அச்சமும் கூடவே வரும்.
அந்த அச்சம் இருக்கிற வரையில் , அண்ணாதுரை தான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள். அந்த அச்சம் எவ்வளவு காலத்துக்கு இருக்கிறதோ, அவ்வளவு காலத்துக்கும் ஆட்சியில் யார் இருந்தாலும் இல்லா விட்டாலும் அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்வதாகப் பொருள்”
ஆம்… அண்ணா தான் தமிழ்நாட்டை இன்றும் ஆண்டு கொண்டிருக்கிறார்!