அமரன்: பட்டையைக் கிளப்பும் வசூல்!
தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று அமரன், பிரதர், ப்ளடி பெக்கர் ஆகிய 3 திரைப்படங்கள் வெளியாயின. இதில், அமரன் திரைப்படம் உலகளவில் வசூலில் பட்டையைக் கிளப்பி உள்ளது தெரியவந்துள்ளது.
கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ திரைப்படம், . மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், தீபாவளி ரிலீஸ் படங்களில் ‘அமரன்’ திரைப்படம் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இத்திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே தமிழகத்தில் வசூல் சாதனை படைத்துள்ளது. அமரன் திரைப்படம் உலகளவில் முதல் நாளில் ரூ.42.3 கோடியை வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வர்மாக அறிவித்துள்ளது. சிவகார்த்திகேயன் படத்திற்கு முதல்நாளில் இவ்வளவு வசூல் கிடைப்பது இதுவே முதல்முறை எனவும் கூறப்படுகிறது.
பாக்ஸ் ஆபிஸ் வட்டார தகவலின்படி, தமிழ்நாட்டில் இப்படம் முதல் நாளில் ரூ.16.5 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியன் 2 திரைப்படம் முதல் நாளில் 13 கோடி ரூபாயை வசூலித்துள்ள நிலையில், அந்த சாதனையை அமரன் திரைப்படம் முறியடித்துள்ளது.
ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் 4.65 கோடி, கர்நாடகாவில் 1.90 கோடி, கேரளாவில் 1.26 கோடி, இந்தி மொழி மற்றும் இந்தியாவின் இதர பகுதிகளில் 0.70 கோடி வசூலித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இத்திரைப்படம், வரும் நாட்களில் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு மாநிலங்களில் தீபாவளிக்கு வெளியாகும் படங்களுக்கு, முதல் நாளில் பெரிய ஓப்பனிங் இருக்காது என கூறப்படும் நிலையில், அமரன் படம் பார்வையாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வசூல் ரீதியாகவும் அசத்தியுள்ளது. அதேபோன்று சிவகார்த்திகேயன் படம் கேரளாவில் முதன் முறையாக 1 கோடி ரூபாயைத் தாண்டி வசூலித்துள்ளது இதுவே முதன் முறையாகும்.
முதல் நாளிலேயே நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளதன் மூலம் சிவகார்த்திகேயன் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம்பிடித்துவிட்டார் என்றே கோடம்பாக்க வட்டாரங்கள் கூறுகின்றன. அதாவது விஜய், அஜித் போன்றவர்களின் Big League போட்டிக்குள் நுழைந்துவிட்டார் என்றே சொல்லப்படுகிறது.