ஏர் இந்தியாவுடன் இணைந்த விஸ்தாரா… அமலுக்கு வரும் மாற்றங்கள்!
டாடா வசம் உள்ள ஏர் இந்தியா விமான நிறுவனத்துடன் விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் இணைந்துள்ளது. இதையடுத்து விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானங்கள் இன்று முதல், ‘ஏர் இந்தியா’ விமானமாக வானில் பறக்கத் தொடங்கியுள்ளது.
இந்த இணைப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து ஏர் இந்தியா நிறுவனம் இப்போது 90 க்கும் மேற்பட்ட இடங்களுக்கு 5,600 வாராந்திர விமானங்களை இயக்க உள்ளது. 70 விமானங்களைக் கொண்ட விஸ்தாரா, தினமும் சுமார் 350 விமானங்களை இயக்கியது. 2022 நவம்பர் மாதம் இணைப்பு அறிவிப்பு வெளியானதில் இருந்து, விஸ்தாரா மற்றும் ஏர் இந்தியாவின் அமைப்பு முறைகள், பணியாளர்கள் மற்றும் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் நடந்து வந்தன.
இன்றைய இணைப்பிற்குப் பிறகு, ஏர் இந்தியா 208 விமானங்களைக் கொண்டதாக விரிவடைகிறது. 103 உள்நாட்டு மற்றும் 71 சர்வதேச வழித்தடங்களில் இதன் சேவை விரிவடையும். மேலும் 49 உள்நாட்டு மற்றும் 42 சர்வதேச விமான நிலையங்களை உள்ளடக்கியதாகவும் இருக்கும். இது, இந்திய விமானத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாக பார்க்கப்படுகிறது.
அமலுக்கு வரும் மாற்றங்கள்…
சென்னை விமான நிலையத்தில் இருந்து, டெல்லி, மும்பை ஆகிய இரண்டு பெருநகரங்களுக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், விமான சேவைகளை இயக்கி வந்தது. இன்று காலை முதல், அந்த விமான சேவைகள் அனைத்தும் ஏர் இந்தியா விமானங்களாக இயங்கத் தொடங்கியுள்ளன. மேலும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்திற்கான குறியீடு ( Code) UK என்று இருந்தது. அது இன்று காலையில் இருந்து, AI என்று மாற்றப்பட்டுள்ளது. அதோடு விமானத்தின் எண்கள் 3 இலக்கத்தில் (டிஜிட்டல்) இருந்து, 4 இலக்கத்தில் (டிஜிட்டல்) மாற்றப்பட்டுள்ளது.
உதாரணமாக சென்னையில் இருந்து காலை 6.45 மணிக்கு, மும்பை செல்லும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இதுவரையில் UK 828 என்ற எண்ணுடன் இயங்கி வந்தது. இன்று முதல் அந்த விமானம் AI 2828 என்ற எண்ணாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதே நேரம் புறப்படும் நேரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. விமான எண்கள் மாற்றம் குறித்து, முன்பதிவு செய்து இருந்த பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது விமானங்களில் விஸ்தாரா என்ற பெயரே உள்ள நிலையில், அதுவும் நாளடைவில் ‘ஏர் இந்தியா’ என்று மாறிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், இந்த இணைப்பினால், பயணிகளுக்கு விமான அனுபவத்தில் எந்த மாற்றமும் இருக்காது. ஏர் இந்தியா புதிய விமானக் குறியீடுகளின் கீழ் இருந்தாலும், அதே உலகத் தரம் வாய்ந்த சேவை தொடரும் என்று அந்த நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்துள்ளது. விஸ்தாரா பெயர் சிறிது காலம் நீடிக்கும் என்றும் ஏர் இந்தியா மேலும் தெரிவித்துள்ளது.
இந்த இணைப்பைத் தொடர்ந்து, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், ஏர் இந்தியா நிறுவனத்தின் 25.1 சதவீத பங்குகளை வாங்குகிறது. அதாவது ஏர் இந்தியா நிறுவனத்தில் ரூ.3,194.5 கோடி கூடுதல் முதலீடு செய்யும். இருப்பினும், விமானிகளுக்கான ஓய்வு வயது வரம்புகள் மாறுபடுகின்றன. ஏர் இந்தியா விமானிகளுக்கான ஓய்வு வயது 58 ஆகவும், விஸ்தாராவுக்கு 60 வயதாகவும் உள்ள நிலையில், ஓய்வு வயது வரம்புகள் மற்றும் இணைப்பிற்குப் பிந்தைய விமானிகளின் சீனியாரிட்டி பற்றிய கவலைகள் விமானிகள் இடையே ஏற்பட்டுள்ளன.
கடந்த கால மாற்றங்கள்…
1932 ல் ஜே.ஆர்.டி டாடாவால் டாடா ஏர்லைன்ஸ் என்ற பெயரில் விமான நிறுவனம் நிறுவப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, இது 1953 ல் இந்திய அரசால் தேசியமயமாக்கப்பட்ட டாடா ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா என மறுபெயரிடப்பட்டது.2000-01 ல், ஏர் இந்தியாவைத் தனியார் மயமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் 2022 ஏர் இந்தியா, டாடா குழுமம் வசமானது குறிப்பிடத்தக்கது.