அதிமுக ஓட்டு வங்கியில் சரிவு: இபிஎஸ் சொன்ன காரணம் சரியா?
அதிமுக-வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகிகள் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சு, அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கட்சிகள் நிர்வாகிகள் மத்தியில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “கட்சியில் இருந்த 55 வயதை தாண்டிய எம்ஜிஆர் காலத்து விசுவாசிகள் கணிசமானோர் இறந்துவிட்டனர். இதன் காரணமாக அதிமுக தனக்கான வாக்கு வங்கியில் 10 முதல் 15 சதவீதத்தை இழந்துவிட்டது. கடந்த கால தேர்தல் தோல்விக்கு இதுதான் காரணம்.
அதிமுக இழந்த வாக்குகளை நாம் மீட்டெடுக்க வேண்டும். அதற்கு ஏற்ப பணியாற்றுங்கள். குறிப்பாக இளைஞர்கள் வாக்குகள் அதிகம் உள்ளன. அவர்கள் மத்தியிலும், முதல் தலைமுறை வாக்காளர்களிடமும் கட்சியின் செயல்பாடுகளை எடுத்துச் சொல்லுங்கள்” எனப் பேசியதாக தகவல் வெளியானது.
“கணக்கு தெரியாமல் உளறுகிறார்” – பெங்களூரு புகழேந்தி
“எடப்பாடி பழனிசாமி கூறியதில் உண்மை உள்ளதா?” என அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த பெங்களூரு புகழேந்தியிடம் பேசினோம்.
“கட்சியை வழிநடத்துகிறவர் வல்லவராகவும் நல்லவராகவும் இருக்க வேண்டும் என்பார்கள். இரண்டுக்கும் தகுதியற்றவராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் அதிமுக-வில் ஓ.பன்னீர்செல்வம் இருந்தார். அப்போது, 20 இடங்களில் போட்டியிட்டு 19.39 சதவீத வாக்குகளை அதிமுக பெற்றது. அக்கட்சிக்கு மட்டும் 83 லட்சம் வாக்குகள் கிடைத்தன.
அடுத்து 2024 மக்களவை தேர்தலில் 34 தொகுதிகளில் நின்று 88 லட்சத்து 80,801 வாக்குகளை அதிமுக பெற்றது. இதன்மூலம் 1 சதவீத வாக்குகளை அதிகம் பெற்றதாக எடப்பாடி பழனிசாமி கூறினார். அப்படியானால் அதிமுக-வின் அடிப்படை வாக்குகளை பாஜக-வும் பாமகவும் வாங்கிவிட்டதா? வாக்குகள் குறைய காரணம், அவர்கள் இறந்து போய்விட்டதாக எடப்பாடி கூறுகிறார்.
15 சதவீதம் வாக்காளர்கள் இறந்துவிட்டால் 2024 தேர்தலில் 86 லட்சம் வாக்குகளை அதிமுக எப்படி பெற்றது? எந்தக் கணக்கின் அடிப்படையில் பேசுகிறார் எனத் தெரியாமல் குழம்பிப் போய் இருக்கிறார்.
அவர்கள் எல்லாம் ஓட்டுப் போட்டு சில ஆண்டுகளிலேயே இறந்து போய்விட்டார்களா? கணக்கு புரியாமல் எடப்பாடி பழனிசாமி உளறுவதாகவே பார்க்கிறேன். அதிமுக-வின் அடிப்படை வாக்குவங்கி பறிபோவது தொடர்கதையாகிவிட்டது” என்கிறார்.
“தவறான தகவல்” – கல்யாண சுந்தரம்
எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து ஊடகங்களில் பேசிய அதிமுக செய்தித் தொடர்பாளர் கல்யாணசுந்தரம், “அதிமுக வாக்குகள் குறைந்ததாக தலைமைக் கழகத்தில் இருந்து அறிக்கை ஏதேனும் வந்துள்ளதா? கட்சியின் பிரதிநிதியாக இருக்கிறேன். இறந்தவர்கள் பற்றியெல்லாம் பேசியதாக கூறுவது தவறான தகவல். எடப்பாடி பழனிசாமி அவ்வாறு பேசவில்லை.
கட்சியின் மீது சிலருக்கு உள்ள வன்மத்தை பெரிதாக்கும் வகையில் பேசுகின்றனர். அவர் பேசியதாக அதிகாரபூர்வமாக எந்த தகவலும் இல்லை” என்கிறார்.