அதிமுக-வுக்கு இளம் ரத்தம் பாய்ச்ச ஆர்வம் காட்டும் எடப்பாடி… எடுபடுகிறதா முயற்சி?

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக பல்வேறு சோதனைகளையும் சவால்களையும் எதிர்கொண்டுள்ளது. அதில் மிக முக்கியமானது கட்சிக்கான தலைமை தொடர்பானது. இப்போதைக்கு அதிமுக பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் கீழ் அதிமுக செயல்பட்டு வருகிறது என்றாலும், அவரது தலைமைக்கான அச்சுறுத்தல் தொடரத்தான் செய்கின்றன.
கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையனிடமிருந்து சமீப நாட்களாக எழுப்பும் கலகக்குரல், முன்னாள் அமைச்சர் வேலுமணி பாஜக-வுடன் காட்டும் நெருக்கம் போன்றவை எடப்பாடியை கவலை அடையச் செய்துள்ளன. இன்னொரு பக்கம் பல்வேறு மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் கோஷ்டிபூசலும் வெடித்துக் கிளம்புகின்றன. முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜிக்கும் மஃபா பாண்டியராஜனுக்கும் இடையே அண்மையில் விருதுநகர் மாவட்டத்தில் வெடித்த மோதலை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
இந்த சூழ்நிலைகளுக்கு இடையே தான், 2026 தேர்தலை எதிர்கொள்வதற்கு கட்சியை தயார்படுத்தும் விதமாக கடந்த 2 தினங்களுக்கு முன்னர் அதிமுக அமைப்பு ரீதியாக உள்ள 82 மாவட்ட நிர்வாகிகளுடன் அவர் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். அப்போது “தனிப்பட்ட பிரச்சனையை மனதில் வைத்துக்கொண்டு தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டக்கூடாது” என அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்தார்.
முன்னதாக மாபா. பாண்டியராஜனுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் ராஜேந்திரபாலாஜி பேசிய நிகழ்வு அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி இருவரையும் போனில் அழைத்து கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்தே மாபா. பாண்டியராஜனும் ராஜேந்திரபாலாஜியும் அடுத்தடுத்து சென்னை வந்து எடப்பாடியை நேரில் சந்தித்தாக தெரிகிறது.
இந்த நிலையில் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனையைத் தொடர்ந்து, கட்சிக்குள் இளம் ரத்தத்தைப் பாய்ச்சும் வகையில் அதிமுக-வில் இளைஞர்கள், இளம்பெண்களை அதிக அளவில் சேர்க்க அதிமுக திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சீமானின் நாம் தமிழர் கட்சியைத் தொடர்ந்து தற்போது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இளைஞர்கள் பலர் ஆர்வமுடன் சேர்ந்து வருகின்றனர். இன்னொரு பக்கம் திமுக இளைஞர் அணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சராகவும் இருப்பதால், பல்வேறு திட்டங்கள் மூலம் இளைஞர்களை தனது கட்சிக்கு வெற்றிகரமாக ஈர்த்து வருகிறார். இதில், அதிமுக பின் தங்கிவிட்டதாக கூறும் அக்கட்சியின் சீனியர்கள், ” ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் இளம் வாக்காளர்களை அதிமுக பக்கம் ஈர்ப்பதில் கட்சி தனது மதிப்புமிக்க நேரத்தை இழந்துவிட்டது” என்று வருத்தமுடன் குறிப்பிடுகின்றனர்.
அதிமுக-வுக்கு இளம் ரத்தம்
இது குறித்து எடப்பாடியின் கவனத்துக்கும் இப்பிரச்னை கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்தே அவர், அண்மையில் நடந்த கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவுக்குள் இளம் ரத்தம் பாய்வதற்கான நடவடிக்கையைத் தீவிரப்படுத்துமாறு அறிவுறுத்தியதாக தெரிகிறது.
கட்சியின் மூத்த தலைவர்களும் மாவட்டச் செயலாளர்களும், அடிப்படை நிலை குழுக்கள் மற்றும் பிற அமைப்பு பிரிவுகளில் இளைஞர்களை முக்கிய பொறுப்புகளுக்கு முன்னிறுத்துவதற்கான செயலில் ஈடுபட வேண்டும் என எடப்பாடி கேட்டுக்கொண்டார்.
இளம் தலைமுறை வாக்காளர்களை ஈர்ப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகவே, சமீபத்தில் ‘இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணியை’ (Ilam Thalaimurai Vilayattu Veerargal Ani) அதிமுக அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் பிரபல மற்றும் வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களை கட்சியில் சேர்த்துக் கொள்ள அக்கட்சி முனைந்துள்ளது.
மாநிலத்தின் மொத்த வாக்காளர்களில் 39% க்கு மேல் இளைய வாக்காளர் உள்ளனர். இந்த நிலையில், இளைய வாக்காளர்களிடையே பெரும் ஆதிக்கத்தை ஏற்படுத்த முயலும் திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தை எதிர்கொள்ளும் நோக்குடனேயே அதிமுக-வில் இந்த புதிய ‘இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி’ உருவாக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

ஆர்வம் காட்டாத நிர்வாகிகள்
ஆனால், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் மட்டத்தில் கட்சிக்குள் இளைய வாக்காளர்களைக் கொண்டு வரும் நடவடிக்கைகள் மந்த கதியிலேயே காணப்படுவதாகவும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மற்றும் கடம்பூர் ராஜு போன்ற சில மாவட்ட நிர்வாகிகள் மட்டுமே இதை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருவதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
என்ன செய்யப்போகிறார் எடப்பாடி..?