அதிமுக: சிலிர்த்தெழும் செங்கோட்டையன்… கோபப்படும் கோகுல இந்திரா… பின்னணி என்ன?

கோவையில் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று பாராட்டு விழாநடைபெற்றது. அதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
ஆனால், இந்த விழாவில் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அந்த விழாவில் பங்கேற்கவில்லை. இது அதிமுக வட்டாரத்தில் மட்டுமல்லாது, தமிழக அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கோட்டையனைப் பொறுத்தவரை அவர் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும் சீனியர். இன்னும் சொல்லப்போனால் எடப்பாடியின் ஆரம்ப கால அரசியல் வளர்ச்சியில் செங்கோட்டையனுக்கு முக்கிய பங்கு உண்டு என்ற பேச்சும் அக்கட்சி வட்டாரத்தில் உண்டு.
செங்கோட்டையன் புறக்கணிப்பு பின்னணி
மேலும், ஜெயலலிதா மறைவைத் தொடந்து ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சரான பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட குழப்பத்தின்போது, கூவத்தூரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதலில் செங்கோட்டையனை தான் முதலமைச்சராக நியமிக்க சசிகலா முடிவு செய்ததாக கூறப்பட்டது. ஆனால், சில நிதி விவகாரங்களால் அந்த வாய்ப்பு எடப்பாடி பழனிசாமிக்குப் போனதாக அப்போது செய்திகள் வெளியாகி இருந்தது.
இத்தகைய சூழ்நிலையில் எடப்பாடி முதலமைச்சராகி, அதிமுக-வையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தாலும், செங்கோட்டையனைப் பொறுத்தவரையில் அவர் எடப்பாடியை தனது அரசியல் ஜூனியராகவே பார்க்கிறார்.
இத்தகைய சூழ்நிலையில், 2019 நாடாளுமன்ற தேர்தல் தொடங்கி 2024 நாடாளுமன்ற தேர்தல் வரை அதிமுக தொடர் தோல்வி அடைந்து வருவது அக்கட்சி சீனியர்கள் மத்தியில் சோர்வை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் தேர்தலின்போது வெற்றிக்கு சரவர உழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆளான கட்சியின் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க எடப்பாடி தயங்கி வருவதாகவும் கட்சியினரிடையே அதிருப்தி நிலவுகிறது.

இந்த சூழ்நிலையில் தான், எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் கலந்துகொண்டபோதிலும், செங்கோட்டையன் புறக்கணித்தது பேசுபொருளானது. அத்திக்கடவு- அவிநாசி திட்டத்துக்கு அடித்தளமாக இருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது படங்கள் மேடையில் இடம்பெறாததால் விழாவில் கலந்து கொள்ளவில்லை என செங்கோட்டையன் தனது அதிருப்தியை தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமல்லாது, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமி, காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த நிகழ்விலும் செங்கோட்டையன் கலந்துகொள்ளவில்லை. இதுவும் அக்கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோகுல இந்திராவும் போர்க்கொடி
இதனிடையே முன்னாள் அமைச்சரான கோகுல இந்திராவும் கட்சியில் தனக்கு அடிப்படை மரியாதை கூட வழங்குவதில்லை என சென்னை, அண்ணாநகரில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் குற்றம் சாட்டி உள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ” நான் யாரிடமும் குரூப்பிசமும் செய்வது இல்லை. எங்களைப் பார்த்தால். எங்களிடம் பேசினால். எங்கள் பெயர் நோட்டீசில் போட்டால் பதவி பறிபோய்விடும் என்ற நிலைமைகள் மாற வேண்டும்” எனப் பேசி இருப்பது கட்சிக்குள் நிலவும் உள்கட்சி மோதலைக் காட்டுவதாக உள்ளது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

ஜெயக்குமார் சொல்லும் விளக்கம்
இந்த நிலையில் செங்கோட்டையன் குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அத்திக்கடவு – அவிநாசி திட்டம் தொடர்பாக எடப்பாடிக்கு நடந்த பாராட்டு விழாவை விவசாயிகள் கூட்டமைப்புதான் ஏற்பாடு செய்தது. அரசியல் கலப்பு இருக்கக் கூடாது என்பதால் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை அவர்கள் வைக்கவில்லை. இதை அதிமுக ஏற்பாடு செய்யவில்லை. விழாவை அதிமுக நடத்தி இருந்தால் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை வைத்திருப்போம். பாராட்டு விழா நடத்திய கூட்டமைப்பில் அனைத்துக் கட்சி விவசாயிகளும் உள்ளனர். அதற்கு அரசியல் வண்ணம் கொடுக்க விரும்பவில்லை. அத்திக்கடவு திட்டம் நிறைவேறியதற்கு ஜெயலலிதாவும், எடப்பாடியும்தான் காரணம்” என்று கூறியுள்ளார்.
எப்படி ‘டீல்’ செய்யப்போகிறார் எடப்பாடி?
மொத்தத்தில், ” செங்கோட்டையனின் புறக்கணிப்பு என்பது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களை வைக்காததற்காக மட்டுமே இருக்காது. எடப்பாடி மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கான ஒரு உத்தியாக தான் இருக்கும்” என்கிறார்கள் அக்கட்சியின் சீனியர் புள்ளிகள்.

கோகுல இந்திரா விவகாரமும் உட்கட்சி மோதலின் இன்னொரு வடிவம் தான் என்பதால், வரும் நாட்களில் இந்த பிரச்னைகளை எடப்பாடி எப்படி ‘டீல்’ செய்யப்போகிறார் என்பதைப் பொறுத்தே 2026 தேர்தலுக்கு அதிமுக-வை தயார்படுத்த முடியும் என்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள்.
பார்க்காலாம் என்ன நடக்கப்போகிறது என்று?!