அதிமுக – பாஜக கூட்டணி: உட்கட்சி எதிர்ப்பை அடக்கினாரா எடப்பாடி?

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளது. இந்த கூட்டணி முடிவுக்கு கட்சிக்குள் கலவையான எதிர்வினைகளை ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில், மே 2 வெள்ளிக்கிழமை அன்று சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில், இபிஎஸ் இந்தக் கூட்டணியை உறுதிப்படுத்தி, நிர்வாகிகளுக்கு முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தார். இந்தக் கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் 8 தீர்மானங்கள் திமுகவை கண்டித்து நிறைவேற்றப்பட்டு இருந்தன.
செயற்குழு கூட்டத்தில் எடப்பாடி ஆற்றிய உரையில், “2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்துவதே நமது ஒரே குறிக்கோள். இதற்காக பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. நிர்வாகிகள் பாஜக கூட்டணி குறித்து பொதுவெளியில் விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும். 234 தொகுதிகளிலும் அதிமுகவே போட்டியிடுவது போல் தேர்தல் பணிகளைத் தொடங்குங்கள்,” என்று உத்தரவிட்டார்.
பாஜகவுடனான கூட்டணியால் கட்சிக்குள் எழுந்துள்ள அதிருப்தியை அடக்கும் நோக்கத்திலும், கட்சி ஒற்றுமையை உறுதிப்படுத்தும் நோக்கத்திலுமே எடப்பாடி இந்த உத்தரவை பிறப்பித்ததாக தெரிகிறது.
நிர்வாகிகள் சொல்வது என்ன?

அதிமுக மூத்த தலைவர்களான ஜெயக்குமார், சி.வி. சண்முகம் உள்ளிட்டோர், 2021 தேர்தல் தோல்விக்கு பாஜகவின் பிரச்சார முறைகளே காரணம் என வெளிப்படையாக விமர்சித்திருந்தனர். கோவையைச் சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர், “2023-ல் பாஜகவுடன் கூட்டணி முறிந்தபோது, எங்கள் தொண்டர்கள் திராவிட அடையாளத்தை மீட்டெடுத்ததாக மகிழ்ந்தனர். இந்த திடீர் முடிவு கிராமப்புற வாக்காளர்களை புண்படுத்தும்,” என மனம் திறந்தார்.
மதுரையைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஒருவர், “பாஜக, அதிமுகவின் வாக்கு வங்கியை கைப்பற்ற முயல்கிறது. இபிஎஸ் இதை உணர்ந்தாலும், டெல்லி அழுத்தங்களுக்கு பணிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்,” என்றார்.
இது குறித்துப் பேசிய சென்னையைச் சேர்ந்த அதிமுக மூத்த தலைவர் ஒருவர், ” எடப்பாடி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான மத்திய அமைப்புகளின் விசாரணைகள் இபிஎஸ்-க்கு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன. மத்திய அமைப்புகளின் அழுத்தம் இல்லையென்றால் இந்தக் கூட்டணி உருவாகி இருக்காது. இது அதிமுகவின் பாரம்பரியத்திற்கு எதிரானது,” என வேதனை தெரிவித்தார்.
இன்னொரு பக்கம் செங்கோட்டையன் இப்போது அமைதியாக இருந்தாலும், உட்கட்சி பதற்றம் தொடர்கிறது.
எடப்பாடி தலைமைக்கு வலு சேர்த்த தீர்மானம்

செயற்குழு கூட்டத்தில் இபிஎஸ் ஆற்றிய உரையில், “திமுகவின் மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர, பாஜகவுடன் தொடங்கிய கூட்டணி முதல் படியாகும். மற்ற கட்சிகளுடன் இணைந்து மெகா கூட்டணி உருவாக்கப்படும்,” என உறுதியாகக் கூறினார். 14-வது தீர்மானத்தில், “பாஜகவுடன் வெற்றிகரமான கூட்டணி அமைக்கப்பட்டு, திமுகவை வீழ்த்துவோம்,” எனவும், 15-வது தீர்மானத்தில், “2026-ல் இபிஎஸ்-ஐ முதலமைச்சராக்குவோம்,” எனவும் கூறப்பட்டிருப்பது அவரது தலைமையை மேலும் வலுப்படுத்தி இருப்பதாக பார்க்கப்படுகிறது.
மேலும், பாஜக கூட்டணி குறித்த விமர்சனங்களை நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும் என இபிஎஸ் உத்தரவிட்டது, இரு கட்சிகளிடையே அவ்வப்போது ஏற்படும் வார்த்தை மோதல்களைத் தடுக்கும் முயற்சியாக இருக்கலாம். ஆனால், அதிமுக-பாஜகவின் கருத்தியல் முரண்பாடுகள் மற்றும் உட்கட்சி அதிருப்தி, இந்தக் கூட்டணியின் எதிர்காலத்திற்கு சவாலாக உள்ளன.
திமுகவை எதிர்க்க ‘மெகா கூட்டணி’ உருவாக்க இபிஎஸ் முயல்கிறார், ஆனால் கட்சி ஒற்றுமையை பேணுவது அவருக்கு பெரும் பணியாக இருக்கும். இந்தக் கூட்டணி வெற்றியைத் தருமா என்பதை 2026 தேர்தல் பதிலளிக்கும்!