கூட்டணி ஆட்சி: மீண்டும் அடிபோடும் பாஜக … அதிர்ந்து நிற்கும் அதிமுக!

பாஜக உடன் கூட்டணி அமைத்தாலும் அதிமுக தனித்து தான் ஆட்சியமைக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் கூறி வருகிறார். இந்த நிலையில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜனின் “ இரட்டை இலையுடன் தாமரை ஆட்சியில் மலரும்” என்ற பேச்சு, அதிமுக வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.
பாஜகவின் கூட்டணி ஆட்சி கணக்கு
தமிழிசையின் உரையானது, “2026-ல் வெற்றி பெற்றால், எங்களுடன் ஆட்சியை பகிர்ந்து கொள்ள வேண்டும்” என்ற பாஜகவின் உத்தியை தெளிவாக உணர்த்துகிறது. கடந்த ஏப்ரல் 11 அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “எடப்பாடியின் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்போம்” என அறிவித்து, இந்த நோக்கத்தை முதலில் உறுதிப்படுத்தினார். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஏப்ரல் 16 அன்று, “அமித் ஷா கூட்டணி ஆட்சி பற்றி பேசவில்லை” என மறுத்து, அதிமுகவின் தனித்து ஆட்சி நிலைப்பாட்டை வலியுறுத்தினார்.
ஆனால் பாஜக தரப்போ, “2021 தேர்தலில் 4 இடங்களை வென்று, வாக்கு வங்கியை வளர்த்து வருகிறோம். ஆட்சியில் பங்கு கோருவது நியாயமானது” என வாதிடுகிறது. இதற்கு வலு சேர்க்கும் விதமாக தான் சென்னையில் இன்று பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “இலை மீது தாமரை குளத்தில் மலரும்; அதுபோல ஆட்சியில் இரட்டை இலையுடன் தாமரை மலரும். ஆட்சியில் இரட்டை இலையுடன் தாமரை மலரும்போதுதான் இலைபோட்டு சரியாக சாப்பிட முடியும்” எனப் பேசி உள்ளார்.

அதிமுகவின் அச்சம்
இந்த நிலையில், தமிழிசையின் பேச்சு, அதிமுக தொண்டர்களிடையே கவலையையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழிசையின் பேச்சு குறித்து பேசிய பெயர் வெளியிட விரும்பாத அதிமுகவின் மூத்த தலைவர் ஒருவர், “தமிழிசையின் பேச்சு தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி கூட்டணி ஆட்சியை ஏற்க மாட்டார். ஏனெனில், அது அதிமுகவின் அடையாளத்தை பலவீனப்படுத்தும்” என்கிறார்.
“பாஜகவுடனான கூட்டணி, சிறுபான்மை மற்றும் திராவிட வாக்கு வங்கியை பாதிக்கும்” என முன்னாள் அதிமுக எம்பி ஒருவர் எச்சரிக்கிறார்.
இந்த நிலையில் எக்ஸ் தளத்தில், பாஜக ஆதரவாளர்கள் “தாமரை மலரும்” என உற்சாகப்படுத்த, எதிர்ப்பாளர்கள் “2026: தமிழ்நாடு மக்கள் vs அதிமுக-பாஜக” என விமர்சித்து பதிவிட்டுள்ளனர்.

கூட்டணியின் முறிவும் மறு இணைப்பும்
அதிமுக-பாஜக கூட்டணியின் வரலாறு, முரண்கள் நிறைந்தது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் இணைந்து, திமுக கூட்டணியிடம் படுதோல்வி அடைந்தது. 2021 சட்டமன்றத் தேர்தலில் 75 இடங்களை மட்டுமே வென்றது. 2023-ல், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ஜெயலலிதா மற்றும் பெரியார் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகள், கூட்டணியை உடைத்தன. ஆனால், 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் தோல்வி, இரு கட்சிகளையும் மீண்டும் கூட்டணிக்குள் இணைத்தது. கடந்த மார்ச் மாதத்தில் நடந்த இபிஎஸ்-அமித் ஷா சந்திப்பு, இந்த மறு இணைப்பை உறுதிப்படுத்தியது.
இந்த நிலையில், திராவிட சித்தாந்தம் ஓங்கி நிற்கும் தமிழக அரசியல் களத்தில், தமிழிசையின் பேச்சு, அரசியல் களத்தில் தீப்பொறியை பற்றவைத்துள்ளது. இருதரப்புக்கும் இடையேயான இந்த முரண்பாடுகள், வாக்கு பரிமாற்றத்தையும், சிறுபான்மை ஆதரவையும் பாதிக்கலாம். 2026 தேர்தலுக்கு முன், இந்தக் கூட்டணி தனது உள் பதற்றங்களை சரிசெய்ய வேண்டும். ஆனால், அது ஆட்சிக்கு வழிவகுக்குமா என்பது மக்களின் கைகளில் உள்ளது.