நீதிமன்ற உத்தரவு, உட்கட்சி பூசல்… எடப்பாடிக்கு இரட்டை சிக்கல்… அதிமுக-வில் நடப்பது என்ன?

அதிமுகவில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அக்கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதை எதிர்த்தும், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்கக் கூடாது எனவும், உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை கட்சிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது எனவும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்து மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க தடை விதிக்க கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த தடையை நீக்க கோரி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத் மற்றும் புகழேந்தி, கே.சி.பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன் மற்றும் ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டனர். அதே சமயம், மனுக்களை விசாரிக்க அதிகாரம் உள்ளதா என்பது குறித்து திருப்தியடைந்த பிறகே விசாரணையை துவங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதிக்கக் கோரிய எடப்பாடி பழனிச்சாமியின் மனுவை தள்ளுபடி செய்து பிறப்பிக்கப்பட்டுள்ள உயர் நீதிமன்ற உத்தரவு, அவருக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
தலைதூக்கிய உட்கட்சி பூசல்
இதனிடையே, அதிமுக-வில் உட்கட்சி பூசலும் தலை தூக்கி உள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் அண்மையில், அத்திக்கடவு- அவிநாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவை புறக்கணித்தார். மேலும், டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமி, காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த நிகழ்விலும் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை.
இதனிடையே முன்னாள் அமைச்சரான கோகுல இந்திராவும் கட்சியில் தனக்கு அடிப்படை மரியாதை கூட வழங்குவதில்லை என சென்னை, அண்ணாநகரில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் குற்றம் சாட்டியதும் அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், செங்கோட்டையன் இன்று கோபிச் செட்டிபாளையத்தில் உள்ள அவரது வீட்டில் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் குவிந்தனர். அப்போது கட்சியில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அவர் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
இரட்டை சிக்கல்
இதனிடையே, செங்கோட்டையனை சமாதானப்படுத்தும் முயற்சிகளை எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியபோது, கட்சியில் தான் சீனியராக இருந்தும், கட்சியின் முக்கிய முடிவுகள் குறித்து தன்னுடன் கலந்தாலோசிக்கப்படுவதில்லை என செங்கோட்டையன் தனது மனக்குமுறல்களைக் கொட்டியதாக கூறப்படுகிறது.
இன்னொருபுறம் செங்கோட்டையனைப் போன்றே அதிருப்தியில் இருக்கும் இதர அதிமுக தலைவர்களும் எந்த நேரத்திலும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தலாம் என அக்கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, இரட்டை இலை சின்னம் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவும் எடப்பாடிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

இப்படி அடுத்தடுத்து ஏற்பட்டுள்ள இரட்டை சிக்கல்களிலிருந்து எடப்பாடி எப்படி மீண்டு வரப்போகிறார் என்பதை பொறுத்தே கட்சியில் அவருக்கும் அதிமுகவுக்குமான எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பது முடிவாகும்.