பராசக்தி: சிவாஜிக்கு கொடுக்கப்பட்ட அந்த முதல் சம்பளம்!

ன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97 ஆவது பிறந்தநாள். சிறப்பான நடிப்பாலும் கணீர் குரலாலும் உணர்வுபூர்வ தமிழ் உச்சரிப்பாலும் ரசிகர்களைக் கட்டிப் போட்டவர். இன்றளவும் நடிப்பு என்றால் அது சிவாஜி மட்டும் தான்.

‘பராசக்தி’ குணசேகரன் தொடங்கி, வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதி, ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சி என தான் நடித்த கதாபாத்திரங்கள் மூலம் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பெருமை சேர்த்தவர். அரசியலில் நுழைந்து போதிய உயரங்களை எட்டாவிட்டாலும் நடிப்புத் திறமையால் தமிழ்நாட்டு மக்களின் இல்லங்களில் இன்றளவும் சிவாஜி குடியிருந்து வருகிறார்.

அது சரி… வி.சி. கணேசமூர்த்தியாக இருந்தவர், எப்படி சிவாஜி கணேசன் ஆனார்?

சிவாஜி உடனான நேரடி அனுபவங்களை கல்கி, குமுதம் ரிப்போர்ட்டர் ஆகிய இதழ்களில் ஆசிரியராக பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் செ.இளங்கோவன் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

திரையுலகிற்கு வருவதற்கு முன்பு, தனது ஏழாவது வயதிலிருந்தே நாடகங்களில்தான் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு வி.சி. கணேசன் என்றுதான் பெயர்.

‘சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்’ என்ற நாடகத்தில் மன்னர் சிவாஜியாக நடித்த இவருடைய நடிப்பைக் கண்டு வியந்த தந்தை பெரியார்தான் ‘சிவாஜி கணேசன்’ என்று பட்டம் சூட்டிப் பாராட்டினார். அன்றிலிருந்துதான் வி.சி.கணேசன், ‘சிவாஜி கணேசன்’ என்று அழைக்கப்பட்டார்.

‘பராசக்தி’யில் நடித்தபோது சிவாஜிக்குக் கொடுக்கப்பட்டது மாதச் சம்பளம்தான். 250 ரூபாய். முதல் படமான பராசக்தியிலேயே அவருக்கு ஏகப்பட்ட தடங்கல்கள். கிடைத்த வாய்ப்பு நழுவிப் போய்விடுமோ என்கிற பயம் இருந்தது.

மூத்த பத்திரிகையாளர் செ.இளங்கோவன்

இப்படிப்பட்ட சிவாஜியை பேட்டி காண முடிவு செய்தோம்.

அது 1986 என்றுதான் நினைவு. நான் ‘கல்கி’யில் வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் ஒவ்வொரு வாரமும் அட்டைப் படம் தேர்ந்தெடுப்பதே பெரும்பாடு.

எல்லா பத்திரிகைகளிலும் பெரும்பாலும் நடிகைகளின் படங்களைத்தான் அட்டையில் பிரசுரிப்பார்கள். அதற்கான அட்டைப்பட விளக்கமாக அட்டையில்…இன்ன நடிகை என்று போட்டுவிட்டால் போதும் பிரச்னை தீர்ந்துவிடும்.

அப்படி கல்கி ஆசிரியர் கி. இராஜேந்திரனும் நானும் படங்களைத் தேடிக் கொண்டிருந்தபோதுதான் சிவாஜி படம் கிடைத்தது. மற்ற படங்களைவிட இது மிகவும் தரமானதாக இருந்ததால், ‘சார், சிவாஜியை அட்டையில் போடலாமா?’ என்று என்னிடம் கேட்டார்.

‘போடலாம் சார்…’

‘சரி… அட்டைப்பட விளக்கமாக என்ன எழுதுவீர்கள்?’

‘சிவாஜியிடம் பேட்டி வாங்கிப் போடலாம்”

‘அவர் தராவிட்டால்…’

‘பேட்டி வாங்கிப் போடலாம் என்றுதான் நினைத்திருந்தோம். அவர் தரவில்லை; அதனால் போடவில்லை…என்று போட்டுவிட்டால் போச்சு…’

‘அப்படியெல்லாம் போடமுடியாது. ஒருவர் நமக்கு பேட்டி தருவதும் தராததும் அவர் இஷ்டம். தராததாலேயே அவரை நக்கலடிக்கும் உரிமை நமக்குக் கிடையாது…’ என்று பத்திரிகை தர்மம் தவறிவிடக்கூடாது என்பதில் மிகவும் கறாராக இருந்தார் இராஜேந்திரன்.

‘எப்படியும் பேட்டி வாங்கிடலாம் சார்…’ என்று நம்பிக்கையோடு சொன்னேன்.

‘எதற்கும் மாற்றாக இன்னொரு படம் தயார் செய்து கொள்ளலாமா?’

‘கண்டிப்பா வாங்கிடலாம் சார். அது என் பொறுப்பு…’ என்று சொல்லி விட்டுத்தான் பேட்டி பற்றி யோசிக்கவே ஆரம்பித்தேன்.

சிவாஜி இதுவரை யாருக்குமே தனி பேட்டி கொடுத்ததாகத் தெரியவில்லை. என்ன காரணம்? அவருக்கு விருப்பமில்லையா? அல்லது யாருமே அவரை அணுகவில்லையா?

நீண்ட யோசனைக்குப் பிறகு, அன்றைய காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும் அகில உலக சிவாஜி ரசிகர் மன்றத் தலைவருமான ராஜசேகருக்கு போன் செய்தேன்.

‘அதற்கென்ன… நாளைக்குக் காலையில் பத்து மணிக்கு அண்ணன் வீட்டுக்கு வந்திடுங்க… நான் அங்கதான் இருப்பேன்…பாத்துடலாம்…’ என்றார்.

மறுநாள் சென்றேன். ராஜசேகர் வாசலிலேயே காத்திருந்து அழைத்துச் சென்றார்.

சோஃபாவில் அமர்ந்திருந்த சிவாஜி, என்னைக் கண்டதும் எழுந்து, ‘வாங்கய்யா…வணக்கம்…உட்காருங்கய்யா’ என்றார்.

அப்போது அங்கு வந்த அவருடைய குடும்ப டாக்டர், சிவாஜிக்கு ரத்த அழுத்தப் பரிசோதனை செய்தார்.

‘எல்லாம் நார்மலா இருக்கா டாக்டர்?’

‘நார்மல்தான்…’

‘சரி டாக்டர். ஐயா கல்கியிலிருந்து வந்திருக்காங்க…’ என்று என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

டாக்டர் என்னைப் பார்த்து, ‘ஓகே. யு கேரி ஆன்’ என்று சொல்லிச் சென்றார்.

டாக்டர் சென்றதும், ‘கமலா… ஐயாவுக்கு காபி கொண்டு வா!’ என்றார் சிவாஜி.

அவர் மகன் வயதே உள்ள என்னை, இத்தனை ‘ஐயா’ போட்டுப் பேசியது என்னுள் மிகுந்த கூச்சத்தை ஏற்படுத்தியது. உண்மையைச் சொன்னால், அதில் ஒரு நாடகத் தன்மை இருப்பது போலவும் பட்டது.

இந்த நேரத்தில் காபி வந்தது. கொண்டு வந்து கொடுத்தவர், திருமதி கமலா சிவாஜி கணேசன். அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். வழக்கமாக வீட்டிலிருக்கும் யாராவது வேலைக்காரப் பெண்தான் காபி கொண்டுவந்து கொடுப்பார்….அதனால், ‘உங்களுக்குச் சிரமம் கொடுத்துவிட்டேன்…’என்று திருமதி கமலாவிடம் சொன்னேன்.

‘ஐயா… வீட்டுக்கு வரும் விருந்தாளிங்களை வீட்டுப் பெண்கள் உபசரிப்பதுதானே முறை… அதுதானே நம்ம பண்பாடு…அப்படித்தானே நாம வளர்ந்திருக்கோம்…’ என்று சிவாஜி சொன்னபோது, அவர் எதையும் நாடக பாணியில் பேசவில்லை. மனதின் ஆழத்திலிருந்துதான் பேசுகிறார் என்பது புரிந்தது.

காபி குடித்து முடிந்ததும் ‘கேளுங்கய்யா…’ என்று அவரே ஆரம்பித்தார்.

‘நம் தமிழ் சினிமாவையே பராசக்திக்கு முன்னும் பின்னும் என்றுகூடப் பார்க்கலாம். உங்கள் முதல் படமே அப்படியொரு படமாக அமைந்தது பற்றி ….’

‘அற்புதமான வசனங்களுக்காக முதலில் கலைஞருக்கு நன்றி சொல்ல வேண்டும். அதில் நான்தான் நடிக்க வேண்டுமென்பதில் பிடிவாதமாக இருந்த பி.ஏ. பெருமாள் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

நான் அப்போது ஒல்லியாக இருந்ததால், என் உருவத் தோற்றத்தில் ஏ.வி.எம். செட்டியாருக்குத் திருப்தியேயில்லை. வேறொரு நடிகரைப் போடலாம் என்றுதான் சொன்னார். பெருமாள்தான் பிடிவாதம் பிடித்து என்னை நடிக்க வைத்தார். செட்டியாருக்காக நான் முதலில் நடித்த சில காட்சிகளை மறுபடியும் எடுத்தார்கள்.

‘படம் வெளியான பிறகுதான் கலைஞரின் அற்புதமான வசனத்தை நான் அற்புதமாகப் பேசினேன் என்று அனைவரும் பாராட்டினார்கள். ஆனால் நான் நடிக்கும்போது என்ன சொன்னார்கள் தெரியுமா?’

இவன் ‘மீனுவாயன்…’இவன் பேசுவதே மீன் பேசுவதுபோல்தான் இருக்கிறது…’ என்றுதான் கிண்டல் செய்தார்கள். என்றாலும் பிடிவாதமாக என்னையே நடிக்க வைத்த பி.ஏ. பெருமாள் அவர்களுக்கு நான் வாழ்நாள் முழுக்க நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்….’

‘நீங்கள் மிகச்சிறந்த மகா நடிகர் என்பதை யாருமே மறுக்கவில்லை. ஆனாலும் நீங்கள் சினிமாவிலும் நாடகத்தில் நடிப்பது போலவேதான் நடிக்கிறீர்கள். சினிமா வேறு, நாடகம் வேறு என்பதை இன்னும் நீங்கள் புரிந்து கொள்ளவில்லை…’ என்கிற விமர்சனமும் இருக்கிறதே?’

ஏ.வி. மெய்யப்ப செட்டியார்

‘ஐயா…நாடகம் என்பது ஏழு வயதிலிருந்தே என் ரத்தத்தில் ஊறிப்போனது. இன்றைக்கு நான் என்ன நடிச்சாலும் அதற்கான அஸ்திவாரம் நாடகத்துல போட்டதுதானே…எப்படிப் பேசணும்… அதற்கு உடல் அசைவுகள் எப்படி இருக்கணும்…என்பதையெல்லாம் சொல்லிக் கொடுத்த என் நாடக வாத்தியார் படையாச்சி (சின்ன பொன்னுசாமி படையாச்சி) ஐயாவுக்குத்தான் நன்றி சொல்லணும். நடிப்பு மட்டுமல்ல; பரதநாட்டியம், கதக், மணிப்புரி நடனங்களையும் அவர்தான் கற்றுக் கொடுத்தார்….’

‘உங்கள் நடிப்பை உலகமே அறியும். ஆனால், ராஜ்யசபை எம்.பி.யாக நீங்கள் சபையில் பேசியதாகவே தெரியவில்லையே… ஏன்?’

‘பேசக்கூடாது என்றெல்லாம் இல்லை. ஏதும் தவறாகப் பேசிவிடக் கூடாது… என்பதால்தான் நான் பேசுவதில்லை.….’ என்றார் சிவாஜி.

இப்படியெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஒருவரால் வெளிப்படையாகப் பேச முடியுமா? சிவாஜி பேசினார். அதனால்தான் ஓர் அரசியல்வாதியாக தனிக்கட்சி கண்டு அவரால் வெற்றிபெற முடியாமல் போனது போலும்!

இறுதியாக விடைபெறும்போது, ‘ஐயா…சாப்டுட்டுப் போங்கையா. சிவாஜி வீட்டுக்கு வந்திட்டு சாப்பிடாம போகலாமாய்யா… சாப்டுட்டுப் போங்கய்யா…’என்று மிகவும் அன்போடு வற்புறுத்தினார்.

‘இன்னொரு நாளைக்கு சாப்பிடுவதற்கென்றே உங்கள் வீட்டுக்கு வருகிறேன்…’ என்று அவர் அன்புப் பிடியிலிருந்து விடுபட்டு வருவதற்குள் போதும்போதுமென்றாகிவிட்டது.

நிஜத்தில் நடிக்கத் தெரியாத சிவாஜியால் அரசியலில் தோற்றுப் போனதில் ஆச்சரியமில்லை. இப்படிப்பட்டவரால், சினிமாவில் மட்டும் எப்படி யாராலும் எட்ட முடியாத நடிப்பின் உச்சிக்கே சென்றார் என்பதுதான் இன்றுவரை எனது ஆச்சரியம்!.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

En direct guerre au proche orient : après la mort de 4 soldats israeliens, …. Br450c ef stihl archives startekbv de bron van groene innovatie. Poêle à granulés mcz ego hydromatic 12 m2+ 11,9 kw.