இராணிப்பேட்டையில் தடம் பதிக்கும் டாடா மோட்டார்ஸ்… 5,000 பேருக்கு வேலை!

மிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், 2030 க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு மாற்றம் பெறுவதற்கும் தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், எஃகு, தகவல் தொழில்நுட்பம், மோட்டார் வாகன உற்பத்தி போன்ற பல்வேறு துறைகளில் உலகளவில் சிறப்புடன் செயல்பட்டு வரும் டாடா குழுமத்தின் ஒரு அங்கமான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய அதிநவீன மோட்டார் வாகன உற்பத்தி ஆலையை இராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் 9,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமைக்க முன் வந்துள்ளது.

இத்திட்டத்தில், 100 சதவிகிதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்தி, டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) சொகுசு வாகனங்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளன. இவ்வாண்டு மார்ச் மாதம் இத்திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

5000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு

இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.

9,000 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படும் இந்த ஆலை மூலம் சுமார் மற்றும் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட ஆறு மாதத்திற்குள், இன்றைய தினம் அடிக்கல் நாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டாடா குழுமத்தின் துணை நிறுவனங்களான டிசிஎஸ், டைடன், டாடா பவர், டாடா எலெக்ட்ரானிக்ஸ் தாஜ் ஹோட்டல்கள் ஆகியவை ஏற்கெனவே தமிழ்நாட்டில் தடம் பதித்துள்ள நிலையில், தற்போது டாடா மோட்டார்ஸ் இராணிப்பேட்டையில் தடம் பதித்துள்ளது. இந்த ஆலை ஆண்டுக்கு 2,50,000 வாகனங்களை உற்பத்தி செய்யும் அளவுக்கு திறனைக் கொண்டிருக்கும். அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் இந்த உற்பத்தி திறன் முழு அளவில் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆலையின் மாதிரி அமைப்பை பார்வையிட்ட முதலமைச்சர்

‘தமிழ்நாடுதான் இந்தியாவின் வாகன உற்பத்தியின் தலைநகரம்’

இதனிடையே நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தமிழ்நாடுதான் இந்தியாவின் வாகன உற்பத்தி தலைநகரமாக திகழ்கிறது. அதுமட்டுமல்ல, E-Vehicle-களின் தலைநகரம்! ஃபோர்டு, ஹூண்டாய், ரெனோ நிஸான் என்று சர்வதேச வாகன நிறுவனங்களும் இங்கே இருக்கிறது. டாடா மாதிரி சர்வதேச மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்ற வாகனங்களை தயாரிக்கின்ற தொழிற்சாலையும் இங்கேதான் இருக்கிறது.

கூடுதல் தகவல், இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற மொத்த மின் வாகனங்களில், 40 விழுக்காடு தமிழ்நாட்டில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. அதுமட்டுமல்ல, எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியிலும் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் நம்பர் ஒன்! நிதி ஆயோக் கொடுத்த ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டிலும் தமிழ்நாடுதான் நம்பர் ஒன் என்று குறிப்பிட்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Anonymous case studies :. Rent a car/bike/boat roam partner.