மெய்யழகன்: சினிமா விமர்சனம் – நெகிழ வைக்கும் நினைவலைகள்..!

மீபகாலமாகவே தமிழ்த் திரையுலகில் வழக்கமான அடிதடி மசாலாக்களாக இல்லாமல், ஃபீல் குட் படங்களின் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் விதமான படைப்புகளின் வருகை அதிகரிப்பது ஆரோக்கியமான, மகிழ்ச்சிக்குரிய மாற்றமாக உள்ளது.

அதில் லேட்டஸ்ட் இன்று வெளியான ‘மெய்யழகன்’. தனது ’96’ படத்தைப் போன்றே வாழ்க்கையின் சுகமான இளமைக்கால நினைவுகளை அசைபோடும் இன்னொரு உணர்வுபூர்வமான படத்தை கொடுத்துள்ளார் இயக்குநர் பிரேம்குமார். அரவிந்த் சாமி – கார்த்தியின் கதாபாத்திரங்களுக்கு இடையேயான உறவு அழகாக மலர்வதும், பரஸ்பர அன்பு பரிமாற்றங்களும் பார்ப்போரை நெகிழ்ச்சி அடைய வைத்துவிடுகிறது.

சொத்து பிரச்சனை காரணமாக பூர்வீக கிராமத்தை விட்டு விட்டு சென்னைக்கு செல்லும் அரவிந்த் சாமி, பல வருடங்கள் கழித்து தனது தங்கையின் திருமணத்துக்காக சொந்த ஊருக்கு செல்ல நேரிடுகிறது. தஞ்சாவூர் நீடாமங்கலம் தான் இந்த படத்தின் கதைக்களம். தஞ்சாவூரையும் சென்னையையும் அவ்வளவு அழகாக கதையின் போக்கிலேயே எடுத்துக் காட்டியிருக்கும் விதம் அருமை. திருமணத்துக்கு வரும் அரவிந்த் சாமியை பார்த்த மாத்திரத்திலேயே ‘அத்தான்…’ என ஒட்டிக் கொண்டு, பாசத்தைக் காட்டத் தொடங்கி விடுகிறார் கார்த்தி. ஆனால், அவர் யாரென்றே அடையாளம் தெரியாத அரவிந்த் சாமி, அவரது அன்பின் காரணமாக தெரிந்தவர் போலவே நடந்து கொள்கிறார்.

இரவு திருமண வரவேற்பை முடித்துவிட்டு கடைசிப் பேருந்து ஏறி சென்னைக்கு வந்துவிடவேண்டும் என்ற நினைப்புடன் வரும் அரவிந்த் சாமி, கடைசிப் பேருந்தையும் தவறவிட்டதால், இரவு தங்க வேண்டிய சூழல். அந்த ஓர் இரவில் இருவருக்கும் இடையேயான உரையாடல்கள், உணர்வுப் பகிர்வுகள், நினைவலைகள் தான் படம்.

சொந்த ஊர், உறவு ஆகியவற்றைப் பிரிந்து சிறிது காலம் வாழ்ந்துவிட்டு, மீண்டும் கூடு திரும்புகிற ஒருவரின் பரிதவிப்பையும், மனவோட்டங்களையும் ஆழமாக காட்சிப்படுத்தி, நம்மையும் நீடாமங்கலம் பேருந்தில் ஒரு பயணியாக கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார் இயக்குநர்.

அரவிந்த் சாமிக்கும் அவரது தங்கைக்குமான காட்சி கலங்க வைக்கிறது. மிக சாதாரணமான உரையாடல்களில் சில ஒன்லைன்களையும், கார்த்தி மூலம் கலகலப்பையும் சேர்த்து மெதுவாக நகரும் காட்சிகளைக் கலகலப்பாக்குகிறார் இயக்குநர். வீடும், நிலமும், பறவைகளும், விலங்குகளும், சைக்கிளும் தனி கதாபாத்திரங்களாகவே படம் முழுக்க தொடர்வது ரசிக்க வைக்கிறது. கூடவே ’96’ பட போஸ்டர், தோனி பெயரை பச்சை குத்தியிருப்பது, பெரியார் புகைப்படம், கருப்பு பேட்ஜ் எனப் போகிற போக்கில் ஆங்காங்கே ரெஃபரென்ஸ்களைத் தூவிக்கொண்டே செல்வது இயக்குநரின் டச்சிங்கான ரசனை.

‘இந்த மான்’ (கரகாட்டக்காரன்) மற்றும் ‘கோடைகால காற்றே’ (பன்னீர் புஷ்பங்கள்) போன்ற கிளாசிக் பாடல்கள் இடம்பெறும் காட்சிகள் கூடுதல் அழகு. கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசையும், கமல்ஹாசனின் குரலில் வரும் “யாரோ இவன் யாரோ” பாடலும் ஆஹா.

மனதில் தேக்கி வைத்த உணர்வுகளை ஆர்பாட்டமில்லாத அழுத்தமான நடிப்பால் கவர்கிறார் அரவிந்த் சாமி. சொந்த ஊரை மீண்டும் பார்க்கும்போது ஏற்படும் பரவசம், அளவிலா அன்புக்கு தகுதியானவரில்லை என்பதை உணரும்போது வெடித்து அழும் இடங்களில் கலங்கடிக்கிறார். வெள்ளந்தியான அன்பைக் கொட்டுபவராக, சின்ன சின்ன உடல்மொழியில் கலகலப்பூட்டி ரசிக்க வைக்கிறார் கார்த்தி.

சில காட்சிகளில் மட்டுமே தலைகாட்டும் ஸ்ரீ திவ்யா கவனிக்க வைக்கிறார். வழக்கமான கிராமத்து ராஜ்கிரணுக்கு இந்த படத்தில் சொக்கலிங்கம் கதாபாத்திரம் புதுசு. குலுங்கி அழும் ஒரே காட்சியில் தடம் பதிக்கிறார் ஜெயப்பிரகாஷ். தேவதர்ஷினி, ஸ்வாதி, சரண் சக்தி, கருணாகரன், இளவரசு ஆகியோர் தங்களுக்கான பாத்திரத்துக்கு கச்சிதமான நடிப்பைக் கொடுத்துள்ளனர்.

ஒரே இரவில் நடக்கும் 96 படக்கதைப் போன்றுதான் மெய்யழகன். என்றாலும் பின்பாதியில் ஏற்படுகிற இலேசான தொய்வு, 96 ஐ கொண்டாடிய ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் தான். யூகிக்கக்கூடிய முடிவைக் கொண்டிருப்பதைத் தவிர, படத்தின் பின் பாதி காட்சிகளை சைக்கிள் கதை போலவே இன்னும் ரசனையாக்கி இருக்கலாம். ஆனாலும் மெய்யழகன் எல்லா வகையிலும் அதன் பட்டத்திற்கு தகுதியானவன் தான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Anonymous case studies :. 陳元溢師傅多年來以卓越的服務能力和廣泛的專業知識為不同人士提供服務,並贏得了廣泛的 客戶讚許 和認可。. Rent a car/bike/boat roam partner.