தமிழகத்தின் அதிகம் அறியப்படாத இடங்கள்… சுற்றுலாத் துறையின் புதிய திட்டம்!
கலாசார பாரம்பரியத்தை மேம்படுத்தவும், வருவாயை அதிகரிக்கவும், தமிழ்நாட்டின் பல்வேறு பிரபலமான மற்றும் அதிகம் அறியப்படாத இடங்களுக்கு உயர் தொழில்நுட்ப மெய்நிகர் சுற்றுப்பயணங்களைத் தொடங்க தமிழ்நாடு சுற்றுலாத் துறை முடிவு செய்துள்ளது.
உள்ளூர் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு வியாபாரம் அதிகரித்து, அதன் மூலமான பொருளாதார நன்மைகள் கிடைக்கவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் மற்றும் கலாச்சார பரிமாற்றத்தையும் செயல்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டே இந்த மெய்நிகர் சுற்றுலா திட்டத்தைச் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுற்றுலாத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் இருக்கக்கூடிய மெய்நிகர் தொழில்நுட்பத்தை அணுகக்கூடிய வகையில் இருக்கும் தனிநபர்களே இந்த திட்டத்துக்கான பார்வையாளர்களாக இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தான் தங்களது பயணத் திட்டத்தில் சேர்க்கக்கூடிய பயண இடங்களைப் பற்றி மேலும் அறிய விரும்புகிறார்கள். எனவே இவர்களை இந்த திட்டம் எளிதாக ஈர்க்கும் எனத் தமிழக சுற்றுலாத் துறை நம்புகிறது.
மேலும், முக்கியமான வழிகளில் மெய்நிகர் பயண அனுபவத்தை ஊக்குவிப்பதன் மூலம் கலாச்சார பரிமாற்றங்களை வளர்ப்பதையும், சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு பங்களிப்பதையும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த மெய்நிகர் பயண திட்டத்தில் சங்ககிரி கோட்டை வளாகம், திருப்பரங்குன்றம், சத்ராஸ் டச்சு கோட்டை, பத்மநாபபுரம் அரண்மனை, ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி, கொல்லிமலை, பிச்சாவரம், ஜல்லிக்கட்டு நடத்தப்படும் இடங்கள், தனுஷ்கோடி மற்றும் ஏற்காடு ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த இடங்களின் வரலாற்று மற்றும் கலாச்சார துல்லியம் மற்றும் மெய்நிகர் சுற்றுப்பயணங்களுக்கான ஸ்கிரிப்டை சரிபார்க்க ஒரு நிபுணர் குழுவை சுற்றுலாத் துறை நியமிக்க உள்ளது. மேலும் இந்த மெய்நிகர் பயணங்கள் தொடர்பான 360 டிகிரி வீடியோக்கள் மற்றும் கண்ணுக்குத் தெரியாத மலைகள் கொண்ட புகைப்படங்களுடன் உருவாக்கப்படும். இந்த வீடியோக்கள் அல்ட்ரா உயர் தெளிவுத்திறன் தரத்தில் இருக்கும். மேலும் இந்த மெய்நிகர் சுற்றுலா 3டி ஹாலோகிராபிக் வழிகாட்டுதலும் இருக்கும்.
மெய்நிகர் சுற்றுப்பயணங்களின் மற்ற முக்கிய அம்சம் என்னவெனில், அனைத்து ஸ்மார்ட்போன்களுடனும் இணக்கமாக இருக்கும் தளத்திற்கான வான்வழி பாதை வரைபடமாக இருக்கும். மேலும், செயற்கை நுண்ணறிவு (AI)வசதிகள், சாட்பாட் மற்றும் டேஷ்போர்டு போன்ற வசதிகளும் இருக்கும்.
மெய்நிகர் சுற்றுப்பயணங்களுக்கான தரவு சேகரிப்பில் வரலாறு, புவியியல், வரலாற்று நூல்களின் கதைகள் மற்றும் புவியியல், கலாச்சார மற்றும் கட்டடக்கலைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்த திட்டம் ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.