‘லப்பர் பந்து’: சினிமா விமர்சனம் – அறிமுக இயக்குநரின் அபார சிக்சர்!
கிரிக்கெட் பற்றிய திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் அவ்வப்போது வந்துகொண்டுதான் இருக்கின்றன. என்றாலும், மக்களிடம் கிரிக்கெட்டுக்கு இருக்கும் இயல்பான ஆர்வம், நம் இயக்குநர்களை கிரிக்கெட்டை மையமாக வைத்து மீண்டும் மீண்டும் படங்களை உருவாக்க வைத்துவிடுகிறது.
ஆனால், சென்னை 600028 க்குப் பிறகு, கிரிக்கெட்டை மையமாக வைக்கப்பட்டு எடுக்கப்பட்ட படங்களில், முதல்முறையாக ‘லப்பர் பந்து’ பார்வையாளர்களை வசப்படுத்தி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இப்படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து அறிமுக இயக்குநராக இருந்தபோதிலும், தனது முதல் படத்தையே கிரிக்கெட் விளையாட்டு பின்னணியில் எடுத்திருப்பதை பார்க்கும்போது அந்த விளையாட்டு மீதான அவரது அதீத ஆர்வமும், துணிச்சலும் வெளிப்படுகிறது.
‘அட்டகத்தி’ தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோருக்கு கதையின் பிரதான பாத்திரங்கள். இந்த இருவருக்கும் இடையேயான ஈகோ மோதல் தான் கதை. இருவருக்கும் சமமான வாய்ப்பை இயக்குநர் கொடுத்திருக்கிறார். வாய்ப்பை இருவருமே தவறவிடவில்லை.
தனது ஊரில் உள்ள கிரிக்கெட் குழுவில் ஆட வேண்டும் என்பது நாயகன் அன்புவின் (ஹரீஷ் கல்யாண்) விருப்பம். அவனது சாதியின் காரணமாக விளையாடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதன்பிறகு வேறு கிரிக்கெட் டீமில் சேர்ந்து விளையாடுகிறான். வேறு ஒரு ஊரில் வசிக்கும் கெத்து தினேஷ் பெயர் சொல்லும் கிரிக்கெட் வீரராக வலம் வருகிறார். ஒரு கிரிக்கெட் போட்டியில் அன்பு, கெத்து தினேஷ் இடையே மோதல் ஏற்பட்டு சண்டையில் முடிகிறது. இந்த மோதல் அவர்களின் தனிப்பட்ட வாழ்வில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை சிறப்பான கோணத்தில் முன்வைக்கிறார் இயக்குநர் தமிழரசன்.
படத்தின் பெரும் பலமே அதன் கதாபாத்திர வார்ப்புகள்தான். ஸ்வஸ்விகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, காளி வெங்கட், பால சரவணன், தினேஷின் நண்பராக வரும் ஜென்சன் திவாகர் என அனைவரது கதாபாத்திரங்களும் கதையோட்டத்துக்கு வலு சேர்க்கின்றன. அட்டகத்தி தினேஷுக்கு நீண்டநாட்களுக்குப் பிறகு பேர் சொல்லும்படியான ஒரு கதாபாத்திரம். ஈகோ தலைக்கேறிய நபராகவும், அதே நேரம் மனைவி, மகளிடம் அடங்கிப் போகும் குடும்பத் தலைவனாகவும் கலக்கியிருக்கிறார்.
ஹரிஷ் கல்யாண் முற்றிலும் புதிய கதாபாத்திரம். மேலும் கிராமப்புற பின்னணியில் அவர் நடித்துள்ள முதல் படம் இது. படத்தின் பெரும்பாலான பகுதிகளில் தனது நடிப்பை மிக நுட்பமாக வெளிப்படுத்துகிறார். கோபத்தை கட்டுப்படுத்தி, அளவிடப்பட்ட விதத்தில் வெளிப்படுத்துகிறார். இது களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவர் என்ன செய்தாலும் அட்டகாசமாக அடித்து நொறுக்கும் தினேஷுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது.
தினேஷின் மனைவி வேறு சாதியை சேர்ந்தவராக இருப்பதால், அவரிடம் மாமியாராக வரும் கீதா கைலாசம் காட்டும் கோபத்தையும் பாசத்தையும் சிறப்பான முறையில் இயக்குநர் வெளிப்படுத்தியிருக்கிறார். காளிவெங்கட், பால சரவணன் ஆகியோர் தங்களுக்கான கதாபாத்திரத்தில் சிறப்பான நடித்துள்ளனர். காளிவெங்கட் பேசும் வசனங்களுக்கு தியேட்டரில் அப்ளாஸ் பறக்கிறது.
எந்த இடத்திலும் பிரச்சார நெடியாக இல்லாமல் சாதிக்கு எதிரான அரசியலை ஆணித்தரமாக பேசியுள்ளார் இயக்குநர். விளையாட்டை மையப்படுத்தி தமிழ் சினிமாவில் எத்தனையோ திரைப்படங்கள் வந்துவிட்டாலும் அதனுடன் தொடர்புடைய சாதி உள்பட பிற விவகாரங்களையும் காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு. அந்த வகையில், கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்துள்ளது, ‘லப்பர் பந்து’!.