ஆன்லைன் விளையாட்டு மோகம் : குழந்தைளை மீட்க அரசு புதிய திட்டம்!
தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுகளை கட்டுப்படுத்த தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் புதிய பரிந்துரைகளை செய்துள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளால் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்ததை தொடர்ந்து தமிழக அரசு இந்த ஆணையத்தை அமைத்து செயல்படுத்தி வருகிறது.
ஆன்லைன் விளையாட்டுகளை எப்படி கட்டுப்படுத்தலாம், சிறுவர்களை அதில் இருந்து எப்படி மீட்டெடுக்கலாம் என்பது குறித்த ஆலோசனைகள் தமிழக அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், ” நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்கலாம். ஒரு நாளைக்கு 4 மணி நேரத்திற்கு மேல் விளையாட அனு மதிக்கக் கூடாது. ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 லிருந்து ரூ.20,000 வரை மட்டுமே செலுத்தி விளையாடும் வகையில் திருத்தங்களை செய்யலாம். சுமார் 1 லட்சம் குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் குழந்தைகள் பலர் தங்களது பெற்றோர்களின் செல்போன்களையே ஆன்லைன் விளையாட்டுக்காக பயன்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.
இதனால், ஒவ்வொரு முறை ஆன்லைன் விளையாட்டு செயலிக்குள் நுழையும்போது ஓடிபி கேட்கும் வகையில் அதில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், அப்படிச் செய்தால் குழந்தைகள் தொடர்ந்து அதில் விளையாடுவதை அறிந்து பெற்றோர்களே கட்டுப்படுத்த முடியும் என்றும் பரிந்துரையில் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி குறிப்பிட்ட நேரம் தான் விளையாட முடியும் என்பதை கொண்டு வந்து விட்டால், நிச்சயமாக ஆன்லைன் விளையாட்டுகளில் குழந்தைகள் அதிகமாக நேரத்தை செலவழிப்பது குறையும். சீனா, தென்கொரியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் இருப்பது போன்று விளையாடும் நேரம் மற்றும் பணப் பரிமாற்ற தகவல்களை செல்போன்களுக்கு அனுப்பும் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, விரைவிலேயே தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பான புதிய விதிமுறைகள் அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொழுதுபோக்கு விளையாட்டுக்குப் பொருந்தாது
அதே சமயம், இந்த புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்தாலும், பணம் கட்டாமல் பொழுதுபோக்காக விளையாடப்படும் விளையாட்டுகளுக்கு இது பொருந்தாது என ஆன்லைன் விளையாட்டுத் தடுப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.