நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு: மிரட்டப்பட்டாரா அன்னபூர்ணா சீனிவாசன்?
இனிப்பு, காரம் ஆகியவற்றுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோவை அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன் எழுப்பிய கேள்வி இணையத்தில் வைரல் ஆனது.
அவர் அமைச்சரை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டதாக வெளியான படம், விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தவிர, கொங்கு மண்டத்தில் அரசியல் ரீதியாகவும் இந்த சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது. கட்டாயப்படுத்தப்பட்டோ அல்லது மிரட்டியோ சீனிவாசன் மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மேலும் தனிப்பட்ட முறையில் நடந்த சந்திப்பின் வீடியோ காட்சியை பாஜக-வினர் இப்படி இணையத்தில் கசிய விடலாமா என்றும் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கோவைதான் பாஜக-வுக்கு ஓரளவு செல்வாக்குள்ள பகுதியாக விளங்குகிறது. அதனால் தான், கடந்த சட்டமன்ற தேர்தலில் வானதி சீனிவாசன், அதிமுக கூட்டணியில் கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற முடிந்தது. இந்த நிலையில், இந்த விவகாரம் வரும் தேர்தலில் கோவையில் பாஜக-வுக்கு பின்னடைவாக அமைந்துவிடும் எனப் பேச்சு எழுந்துள்ளது. ஏனெனில் கோவையைப் பொறுத்தவரை தேர்தல் முடிவுகளில் அங்குள்ள தொழில்துறையினரின ஆதரவும், அவர்கள் சார்ந்த சமூக வாக்குகளும் முக்கிய பங்காற்றுகிறது.
அதனால் தான், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை லண்டனில் இருந்தாலும், உடனடியாக இந்த விவகாரத்தில் மன்னிப்புக் கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் “மத்திய நிதியமைச்சருக்கும், அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளருக்கும் இடையேயான, தனிப்பட்ட உரையாடலை பொதுவெளியில் பகிர்ந்து கொண்ட பாஜகவினரின் செயலுக்காக, நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இந்த விவகாரம் கோவை தொழில்துறையினர்களிடையே கோபத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும், மேலும் சிக்கல் ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது என இது குறித்து எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. இது குறித்து கோவையில் உள்ள கொடிசியா உள்பட தொழிற்சங்கத்தினரிடம் கேட்டபோது, அவர்கள் பேசத் தயங்குகின்றனர்.
இந்த நிலையில், இதைப் பற்றி அரசியல் கட்சியினர் என்ன சொல்கிறார்கள்..?
கோவை சத்யன் (செய்தி தொடர்பாளர், அதிமுக)
அன்னபூர்ணா உரிமையாளர், ஜி.எஸ்.டி குறைகளை நிவர்த்தி செய்வதற்காக கூட்டத்தில் பேசினார். ஆனால், அவரை நேரில் சந்திக்க வைத்து மன்னிப்பு கேட்க வைத்தது எந்தவகையிலும் ஏற்படையுவது அல்ல. மூன்று பேர் அமர்ந்துள்ள இடத்தில் அவர் எழுந்து நின்று மன்னிப்பு கேட்க வைக்கின்றனர் என்றால், மிரட்டுவதற்காக அவர் வரவழைக்கப்பட்டாரா?
இப்படிப்பட்ட செயலுக்கு 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கோவை மக்கள் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் மக்கள் பாடம் புகட்டுவார்கள். ஜி.எஸ்.டி அலுலகத்தில் பொதுமக்கள் அமர்வதற்குக் கூட சரியான முறையில் நாற்காலிகள் போடப்படவில்லை. அதை சரிசெய்வதற்கான முயற்சியில் மத்திய நிதித்துறை அமைச்சர் இறங்கட்டும்.
அதிகாரம் இருப்பதால் எதிர்ததுக் கேள்வி கேட்டாலோ ஆலோசனை சொன்னாலோ அன்னபூர்ணா போன்ற பாரம்பரியான ஓட்டல் உரிமையாளரையே மன்னிப்பு கேட்க வைக்கின்றனர் என்றால் சாமான்ய மக்களின் நிலை என்ன? இதற்கெல்லாம் காலம் பதில் சொல்லும்.
ஜோதிமணி (கரூர் எம்.பி)
கோவை அன்னபூர்ணா உணவகம், தமிழகத்தின் பிரசித்தி பெற்ற உணவகங்களில் ஒன்று. அதன் நிறுவனர் சீனிவாசன், மத்திய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனீடம் மிகவும் நியாயமான வேண்டுகோள் ஒன்றை முன்வைக்கிறார். அதையும் தன்மையாக முன்வைக்கிறார். ஜி.எஸ்.டி.,யால் நாடே பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த வீடியோ வைரலாகிறது.
வெற்றிகரமாக தொழில் நடத்தி பலருக்கு வேலை வாய்ப்பு அளிக்கின்ற ஒருவர் தனது அனுபவத்தின் மூலம், பகிர்ந்து கொள்கிற ஒரு கருத்தை செவிமடுத்து, அதை சரி செய்ய வேண்டியது ஒரு நிதியமைச்சரின் கடமை. ஆனால் அதை செய்யாமல் அவரை மன்னிப்பு கேட்க வைத்து, அந்த வீடியோவை வெளியிடுவது ஆணவத்தின் உச்சம்.
அவர் என்ன பெரிய குற்றம் செய்துவிட்டார். உண்மையைப் பேசுவது ஒரு குற்றமா? தமிழ்நாட்டில்,கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒரு தொழிலதிபருக்கு நிகழ்ந்த இந்த அவமதிப்பிற்கு வருந்துகிறேன். பா.ஜ.க என்ன செய்யும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சாட்சி. அன்னபூர்ணா நிறுவனரை அவமதித்ததற்காக அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
வானதி சீனிவாசன் (கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ)
அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி சீனிவாசன் நேரம் கேட்டார். அவரை யாரும் மிரட்டவில்லை. அவ்வாறு மிரட்ட வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இதைப் பற்றி சீனிவாசனிடமே நீங்கள் நேரடியாகக் கேட்கலாம்.
சீனிவாசன் (தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத்தின் கெளரவத் தலைவர்)
மத்திய நிதி அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவைக் கொடுத்தேன். ஆங்கிலம், இந்தி ஆகியவற்றில் பேசும் ஒருவர் நிதி அமைச்சராக இருந்திருந்தால் என்னால் இவ்வளவு விளக்கமாக அவரிடம் பேசியிருக்க முடியாது. எங்கள் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கும் என நம்புகிறேன்.