திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஓசூரில் குவியும் அமெரிக்க முதலீடுகள்!
தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அங்கு பல்வேறு தொழில் நிறுவன பிரதிநிதிகளைச் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்தார். இதன் பலனாக, பல்வேறு நிறுவனங்கள் தமிழ்நாட்டின் பல இடங்களில் தங்களது தொழிற்சாலைகளை தொடங்க தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்து வருகின்றன.
சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் உலகின் 16 முன்னணி நிறுவனங்களுடன் 7,016 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு, உலகளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களை முதலமைச்சர் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கேட்டர்பில்லர் நிறுவனம் ரூ. 500 கோடி முதலீடு
அந்த வகையில், சிகாகோவில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், பிரபல நிறுவனமான கேட்டர்பில்லர் நிறுவனத்துடன், தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் 500 கோடி ரூபாய் முதலீட்டில் திருவள்ளூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில், அந்நிறுவனத்தின் தற்போதுள்ள கட்டுமான கருவிகள் உற்பத்தி நிலையங்களை விரிவுபடுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
கேட்டர்பில்லர் நிறுவனம், கட்டுமானம் மற்றும் சுரங்க கருவிகள், ஆஃப்-ஹைவே டீசல் மற்றும் இயற்கை எரிவாயு இயந்திரங்கள், தொழில்துறை எரிவாயு விசையாழிகள் மற்றும் டீசல்-எலக்ட்ரிக் இன்ஜின்கள் ஆகியவற்றின் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமாகும். இந்நிறுவனம் பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும்.
இந்நிறுவனம் கட்டுமானத் தொழில்கள், வளத் தொழில்கள், எரிசக்தி மற்றும் போக்குவரத்து, நிதி தயாரிப்பு பொருட்கள் ஆகிய நான்கு வணிகப் பிரிவுகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
Rapid Global Business Solutions, Inc.(RGBSI)
இதனிடையே சிகாகோவில், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ஆர்ஜிபிஎஸ்ஐ (RGBSI) நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 100 கோடி ரூபாய் முதலீட்டில் ஓசூரில் மேம்பட்ட மின்னணு மற்றும் டெலிமாடிக்ஸ் உற்பத்தி நிறுவனத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
RGBSI நிறுவனம், பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு பணியாளர் மேலாண்மை, பொறியியல், தரமான வாழ்க்கைச் சுழற்சி மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்ப தீர்வுகளையும், பல துறைகளுக்கான மேம்பட்ட மின்னணு மற்றும் தொழில்நுட்ப தீர்வுகளையும் வழங்கும் நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் கார்ப்பரேட் தலைமையகம் அமெரிக்க நாட்டின், மிக்சிகனில் உள்ள ட்ராயில் அமைந்துள்ளது.