தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழகத்துக்கு நிதி மறுப்பு நியாயமா? – முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு, மத்திய அரசு சட்டப்படி தரவேண்டிய கல்வித் தவணை நிதி 367 கோடி ரூபாயைத் தராமல் வேண்டுமென்றே நிலுவையில் வைத்து இழுத்தடிப்பதாக ஏற்கெனவே குற்றச்சாட்டு கூறப்பட்டிருந்தது.
மத்திய அரசு உருவாக்கிய தேசியக் கல்விக் கொள்கையை (NEP) தமிழ்நாட்டில் செயல்படுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒப்புதல் தராததே இதற்கு காரணம் என திமுக குற்றம் சாட்டி இருந்த நிலையில், இது தொடர்பாக அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் மத்திய அரசை வலியுறுத்தி இருந்தனர்.
மேலும், தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் திமுக எம்.பி-க்களும், மத்திய கல்வி அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்டவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தும் இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை.
இதனையடுத்து, ‘சமக்ரா சிக்ஷா’ திட்டத்தின்கீழ் பள்ளி கல்விக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க தேசிய கல்விக் கொள்கை நிபந்தனையாக வைக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டி, நிதியை உடனடியாக ஒதுக்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். ஆனாலும், இதுவரை மத்திய அரசிடமிருந்து எவ்வித பதிலும் வரவில்லை.
இந்த நிலையில், தேசிய கல்வி கொள்கைக்கு அடிபணிய மறுத்ததற்காக சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு நிதி மறுக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக இந்து ஆங்கில பத்திரிகையில் வந்துள்ள கட்டுரை ஒன்றை சுட்டிக்காட்டி, “தேசிய கல்விக் கொள்கைக்கு அடிபணிய மறுத்ததற்காக சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு நிதி மறுப்பது, அதே நேரத்தில் இலக்குகளை நிறைவேற்றாதவர்களுக்குத் தாராளமாக வெகுமதி அளிப்பது – இதுதான் மத்திய பாஜக. அரசு தரமான கல்வி மற்றும் சமத்துவத்தை மேம்படுத்தும் முறையா?
நம் தேசம் மற்றும் மக்களின் முடிவுக்கே இதை விட்டுவிடுகிறேன்!” என அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.