இனி எங்கிருந்தும், எந்த வங்கியிலிருந்தும் ஓய்வூதியம் பெறலாம்…புதிய மாற்றம்!
வருகிற 2025 ஜனவரி 1 முதல் ஓய்வூதியதாரர்கள் இந்தியாவில் எங்கிருந்தும், எந்த வங்கியிலிருந்தும், எந்தக் கிளையிலிருந்தும் தங்களுக்கான ஓய்வூதியத்தைப் பெறலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இபிஎஃப் எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் மாதந்தோறும் சேரும் பணத்தில் ஒரு பகுதி, தொழிலாளரின் ஓய்வூதியத்துக்கு என பிடித்தம் செய்யப்பட்டு வைக்கப்படுகிறது. ஓய்வூதியம் பெறத் துவங்கும்போது, தொழிலாளரின் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் இருந்து மட்டும் தொகையை எடுக்கும் நடைமுறை தற்போது நடைமுறையில் உள்ளது.
இந்த நிலையில், அந்த முறையை மாற்றி, மையப்படுத்தப்பட்ட ஓய்வூதிய கொடுப்பனவு முறையின் கீழ் (centralised pension payment system – CPPS) இந்தியாவில் எங்கிருந்தும், எந்த வங்கிக் கணக்கிலும் இருந்தும் பணம் பெறும் வசதியை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், தொழிலாளர் ஓய்வூதிய திட்டம், 1995ன் கீழ், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த வசதி அமலுக்கு வரும் என்றும் மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சரும், இபிஎஃப் மத்திய அறங்காவலர் வாரியத் தலைவருமான மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இந்த முடிவைப் பற்றி பேசிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “மையப்படுத்தப்பட்ட ஓய்வூதிய கொடுப்பனவு முறையின் ஒப்புதல், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் நவீனமயமாக்கலில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும். நாட்டின் எந்த இடத்திலும் உள்ள எந்தவொரு வங்கியிலிருந்தும், எந்தவொரு கிளையிலிருந்தும் ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியத்தைப் பெற உதவுவதன் மூலம், இந்த முயற்சி ஓய்வூதியதாரர்கள் எதிர்கொள்ளும் நீண்டகாலச் சவால்களுக்கு தீர்வு காண்பதுடன், தடையற்ற மற்றும் திறமையான பட்டுவாடா வழிமுறையை உறுதி செய்கிறது ” என்று தெரிவித்தார்.
“ஓய்வு பெற்ற பிறகு, வசிப்பிடத்தை மாற்றுவோர், அடிக்கடி வெளியூர் பயணம் செல்வோர், இருந்த இடத்திலேயே, அருகில் உள்ள எந்த வங்கியிலும், எந்த கிளையிலும் மாதாந்திர ஓய்வூதியத்தை பெற முடியும். இ. பி.எப்., கணக்கில் ஓய்வூதியம் பெறுவோருக்கு வழங்கப்படும் பென்ஷன் பேமென்ட் ஆர்டரை, ஓய்வூதியதாரர் வசிப்பிடம் மாறும்போது, ஒரு அலுவலகத்தில் இருந்து மற்றொன்றுக்கு மாற்றும் அவசியமும் இனி இருக்காது. ஓய்வூதியம் பெறும் வங்கிக் கணக்கையோ, வங்கிக் கிளையையோ மாற்ற வேண்டிஇருக்காது. ஓய்வு பெற்றபிறகு தங்கள் சொந்த ஊருக்கு இடம்பெயரும் ஓய்வூதியதாரருக்கு, இது மிகப்பெரிய நிம்மதியையும், மனநிறைவையும் அளிக்கும்.
மையப்படுத்தப்பட்ட ஓய்வூதிய கொடுப்பனவு முறை, இபிஎப்ஓ-வின் 78 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் ஓய்வூதியதாரர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேம்பட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் வங்கி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம், இது ஓய்வூதியதாரர்களுக்கு மிகவும் திறமையான, தடையற்ற மற்றும் பயனர் நட்பு அனுபவத்தை வழங்கும்” என அவர் மேலும் தெரிவித்தார்.