இனி கிராமங்களிலும் ‘ஒரு நிமிட பட்டா’ திட்டம்… உடனடியாக பெறலாம்!

தமிழ்நாட்டில் ஒரு சொத்திற்கு பட்டா பெறுவது என்பது குதிரை கொம்பாக இருந்து வந்த நிலையில், இது தொடர்பாக பொதுமக்களிடமிருந்து ஏராளமான புகார்களும் அரசுக்கு வந்தன. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பட்டா எளிதாக பெறும் வகையிலான பணிகளை செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கண்டிப்புடன் உத்தரவிட்டார்.

அதன்படி, தற்போது பொதுமக்கள் எளிதாக பட்டா பெறும் வகையில் 3 நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதில் முதல் நடைமுறை எங்கிருந்தும், எந்த நேரத்திலும் இணையவழி சேவை ஆகும். ஒரு நிலத்திற்கான பட்டா, வரைபடம் ஆகியவற்றை பொதுமக்கள் https://eservices.tn.gov.in/eservicesnew/home.html என்ற இணையதளம் மூலம் எளிதாக பெற்று கொள்ளவது ஆகும். எந்த அலுவலகத்திற்கும் சென்று கால்கடுக்க காத்திருக்க வேண்டியதில்லை. அதே போல் இந்த இணையதளம் மூலமே பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம்.

2 ஆவது நடைமுறை, பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக பொதுமக்கள் அளிக்கும் விண்ணப்பங்கள் மீது வரிசைப்படி தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது. பட்டா மனுக்கள் 2 வகையாக பிரிக்கப்படுகிறது.

அமலுக்கு வந்த ‘ஒரு நிமிட பட்டா’ திட்டம்

3 ஆவது நடைமுறை, ஒரு நிமிடத்தில் பட்டா வழங்கும் திட்டம். அதாவது ஒரு சொத்தை பத்திரப்பதிவுத்துறை மூலம் பத்திரப்பதிவு செய்தவுடன் ஒரு நிமிடத்தில் அவர்களுக்கு பட்டா வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் நகர் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களை பத்திரப்பதிவின் போதே பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.

ஆனால் கிராமங்களில் நத்தம் என வகைப்படுத்தப்பட்ட குடியிருப்புகளுக்கு உடனடியாக பட்டா வழங்கப்படவில்லை. இந்த நிலையில் ஒரு நிமிட பட்டா திட்டத்தை, தமிழக அரசு விரிவாக்கம் செய்து உள்ளது. அதற்காக பத்திரப்பதிவுத்துறை சர்வரில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. அதன் மூலம் இனி, கிராமங்களில் உள்ள வீடுகளை பத்திரப்பதிவு செய்யும் போதே உடனடியாக பட்டா பெயர் மாற்றம் செய்யப்படும் பணி தொடங்கிவிட்டது.

இது குறித்து பேசிய பத்திரப்பதிவுத் துறை அதிகாரி ஒருவர், தமிழக அரசின் உத்தரவு காரணமாக பத்திரப்பதிவு செய்யும் போதே பட்டா மாற்றம் செய்யும் பணிகள் முழு அளவில் நடந்து வருகிறது. உட்பிரிவு செய்ய தேவையில்லாத நிலங்களை பத்திரப்பதிவு செய்யும் போதே உடனடியாக பட்டா மாற்றம் செய்யப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

மேலும், அரசின் வருவாய்த்துறை, கிராமப்புறங்களில் உள்ள நத்தம் குடியிருப்பு பட்டா விவரங்களை பொதுமக்கள் எளிதாக பார்க்கும் வகையில் https://eservices.tn.gov.in/eservicesnew/ home.html என்ற இணையதளத்தை மேம்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் உள்ள 317 தாலுகாக்களில் 17 தாலுகாக்கள் முற்றிலும் நகர்புறத்தில் உள்ளது. இது தவிர மீதமுள்ள 300 தாலுகாவில் முதல்கட்டமாக 220 தாலுகாக்களில் நத்தம் குடியிருப்பு பகுதிகளின் பட்டா விவரங்களை பார்வையிடலாம். இந்த இணையதளம், பத்திரப்பதிவு துறை சர்வரில் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது.

எனவே தற்போது 220 தாலுகாவில் உள்ள நத்தம் குடியிருப்புகளை பத்திரப்பதிவு செய்யும் போதே இனி பட்டா பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. கடந்த சனிக்கிழமை சோதனை அடிப்படையில் கொண்டுவரப்பட்ட நிலையில், நேற்று முதல் பட்டா பெயர் மாற்றம் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

台中健身房推薦 冥想、瑜珈 | [your brand]. Alex rodriguez, jennifer lopez confirm split. 지속 가능한 온라인 강의 운영.