ஆந்திரா மழை வெள்ளம்: சென்னை சென்ட்ரலுக்கு வரும் ரயில்கள் ரத்து விவரம்!
ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக, அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் தண்ணீரில் தத்தளித்து வருகின்றன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கி உள்ளது. கனமழை காரணமாக நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் ஆந்திராவில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் சாலை மற்றும் ரயில்வே தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 54 ரயில்கள் திருப்பி விடப்பட்டன என்றும், நான்கு ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டன என்றும் ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சென்னை சென்ட்ரல் ரயில் ரத்து விவரம்
இந்த நிலையில், இந்த மழை வெள்ளம் காரணமாக சென்னை சென்ட்ரலிலிருந்து ஆந்திரா மார்க்கமாக, அதேபோன்று ஆந்திரா மார்க்கமாக சென்னைக்கு வரும் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ட்ரல்-பூரி, அகமதாபாத்-சென்ட்ரல் நவஜீவன் எக்ஸ்பிரஸ், சென்ட்ரல்-சாலிமர் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மைசூரு-ஹவுரா, ஹவுரா-மைசூரு எக்ஸ்பி ரஸ், ஹைதராபாத்-தாம்பரம், சென்ட்ரல்-சாப்ரா கங்கா காவேரி எக்ஸ்பிரஸ், சாப்ரா-சென்ட்ரல், சென்ட்ரல்-டெல்லி கிராண்ட் டிரங் எக்ஸ்பிரஸ், டெல்லி-சென்ட்ரல் கிராண்ட் டிரங் எக்ஸ்பிரஸ், தாம்பரம்-ஐதராபாத், சென்ட்ரல்-டெல்லி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 12670 சாப்ரா- சென்னை சென்ட்ரல், 12616 புதுடெல்லி- சென்னை சென்ட்ரல், 12669 சென்னை சென்ட்ரல் முதல் சப்ரா மற்றும் 12615 சென்னை-சென்ட்ரல்-புது டெல்லி உட்பட மொத்தம் 21 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மறுபுறம், 22674 மன்னார்குடி-பகத் கி கோத்தி, 12763 திருப்பதி-செகந்திராபாத், 280805 விசாகப்பட்டினம்-புதுடெல்லி, மற்றும் 22352 SMVT பெங்களூரு-பாட்லிபுதூர் உட்பட பத்து ரயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்பு எண்
இதனிடையே சென்னையில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லக்கூடிய பெரும்பாலான ரயில்கள் நேற்று முதல் ரத்து செய்யப்பட்டதால் சென்ட்ரல் நிலையத்தில் பயணிகள் பயணத்தை தொடர முடியாமல் தவிக்கின்றனர். பயணிகளுக்காக உதவி மையங்களும் திறக்கப்பட்டு உள்ளன. ரயில்கள் ரத்து, தாமதம் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள ‘கியூ ஆர் கோடு’ வசதியும் நுழைவு பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், சென்ட்ரல் நிலையத்தில் ரயில்கள் ரத்து பற்றி அறிய 044-25354995, 044-25354151 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர விஜயவாடா, ராஜ முந்திரி, ஒங்கோல், தெனாலி, நெல்லூர், கூடூர், குடிவாடா, குண்டூர், ஐதராபாத், செகந்திரபாத் உள்ளிட்ட 18 ரயில் நிலையங்களை தொடர்பு கொள்ளவும் செல்போன் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.