சென்னையில் இன்று தொடங்குகிறது ஃபார்முலா 4 கார் பந்தயம்: முழு விவரம்!
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை பார்முலா 4 சர்க்யூட் மற்றும் இந்திய ரேஸிங் லீக் கார் பந்தய போட்டி நடத்த உள்ளது. இன்று மற்றும் செப்டம்பர் 1 ஆம் தேதி ஆகிய இரண்டு தினங்கள் நடைபெற உள்ள இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் முழு அளவில் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் முதல் இரவு நேர ஸ்ட்ரீட் பார்முலா 4 சர்க்யூட் பந்தயமாக இந்த போட்டி நடைபெற உள்ளது. இதன் மூலம் தெற்காசியாவிலேயே முதல்முறையாக இரவு நேர ஸ்ட்ரீட் ஃபார்முலா 4 சர்க்யூட் பந்தயத்தை நடத்தக்கூடிய நகரமாக சென்னை திகழ்கிறது. 3.5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட சர்க்யூட் தீவுத்திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர்பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் அண்ணா சாலை ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ளது. இது தெற்கு ஆசியாவிலேயே மிக நீளமான ஸ்ட்ரீட் சர்க்யூட் என்பது குறிப்பிடத்தக்கது. தீவுத்திடலில் தொடங்கி மீண்டும் அங்கேயே சென்றடையும் வகையில் பந்தயம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சாலை சர்க்யூட்டில் 19 வளைவுகள் அமைந்துள்ளது. இது பந்தய டிரைவர்களுக்கு கடும் சவாலாக இருக்கக்கூடும். தெற்கு ஆசியாவில் முதல் முறையாக சென்னையில் இரவு நேர கார் பந்தயம் நடத்தப்படுவதால் இந்தப் போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இன்று பிற்பகல் 2.45 மணியில் இருந்து மாலை 5 மணி வரை பயிற்சி சுற்றுகள் நடைபெறுகின்றன. இதை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். தகுதிச் சுற்றுகள் இரவு 7.10 மணி முதல் 9 மணி வரை நடைபெறும். தகுதி சுற்றின் அடிப்படையிலேயே ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பிரதான பந்தயத்தில் டிரைவர்கள் வரிசைப்படுத்தப்படுவார்கள். இதனால் தகுதி சுற்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
நாளை (செப்டம்பர் 1) பிரதான கார் பந்தயங்கள் 2 போட்டிகளாக நடைபெறுகிறது. பார்முலா 4 கார் இந்தியன் சாம்பியன்ஷிப் பந்தயத்தின் முதல் போட்டி மாலை 5.05 மணிக்கு தொடங்கும். இது 25 நிமிடம் மற்றும் ஒரு ரவுண்டை கொண்டது. இந்த பந்தயம் 5.35 மணிக்கு நிறைவடையும். பார்முலா 4 கார் இந்தியன் சாம்பியன் ஷிப் பந்தயத்தின் 2-வது போட்டி இரவு 9.05 மணிக்கு தொடங்கும். இதுவும் அதே நிமிடங்களை கொண்டது. இந்த பந்தயம் 9. 30 மணிக்கு நிறைவடையும்.
அதேவேளையில் இந்தியன் ரேசிங் லீக் (ஐஆர்எல்) பந்தயத்தின் முதல் போட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.05 மணிக்கும், 2 ஆவது போட்டி இரவு 10.05 மணிக்கும் தொடங்கும். இந்த 2 பந்தயங்களும் தலா 30 நிமிடங்களைக் கொண்டது. இரவு 10.35 மணியுடன் போட்டிகள் முடிவடையும். இது தவிர ஜேகே டயர் ஜூனியர் தேசிய போட்டியும் நடத்தப்படுகிறது.
பந்தயத்தையொட்டி தீவுத் திடலைச் சுற்றியுள்ள சுவாமி சிவானந்தா சாலை, நேப்பியா்பாலம் என போட்டி நடைபெறவுள்ளசாலைப் பகுதிகள் அனைத்திலும் உயரமான மின்னொளிகள், பார்வையாளர்கள் போட்டிகளை பாா்த்து ரசிக்க இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அண்ணா சாலை, சுவாமி சிவானந்தா சாலை, தீவுத் திடல் என 8 இடங்களில் பார்வையாளர்களுக்கென பிரத்யேகமாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் வாகனங்கள் நிறுத்துவதற்காக, சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதான வளாகம், கலைவாணர் அரங்கம், சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த போட்டியின் முதல் சுற்று கடந்த 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சென்னையை அடுத்து இருங்காட்டு கோட்டையில் நடைபெற்றது. சென்னையில் நாளை நடைபெறும் பந்தயம் 2 ஆவது சுற்று போட்டியாகும். 3 ஆவது சுற்று போட்டி கோவையில் செப்டம்பர் 13 முதல் 15 வரை நடைபெறுகிறது. 4 மற்றும் 5 ஆவது சுற்றுகள் அக்டோபர், நவம்பர் மாதங்களில் கோவா மற்றும் கொல்கத்தாவில் நடத்தப்பட உள்ளன.