சித்த மருத்துவத்தின் முக்கியத்துவம்: வலியுறுத்திய அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு!
தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் பெருமையை உலகில் உள்ள முருக பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பழநி பழனியாண்டவர் கல்லூரியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு, கடந்த சனிக்கிழமை தொடங்கி 2 நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது.
மாநாட்டில் 2 நாட்களும் ஆன்மிகச் சொற்பொழிவு, கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள், பல்துறை சார்ந்தவர்களின் உரை , சிந்தனை மேடை, நாட்டியம்,வாய்பாட்டு, பக்தி இசை, கருத்தரங்கு, பல்வேறு வகையிலான இசை நிகழ்ச்சிகள் மற்றும் பரதநாட்டியம், நாடகம் , சிறுமி தியா இசை நிகழ்ச்சி, வீரமணி ராஜீ, சுதா ரகுநாதன் நிகழ்ச்சி, 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்ற கிராமிய இசை நடன நிகழ்ச்சி நடைபெற்றது. வள்ளி கும்மி, படுகர் நடனம், தப்பாட்டம்,கரகாட்டம் , பொய்கால் நடனம், காவடியாட்டம் என திருவிழாவை போல இந்த நிகழ்வு நடைபெற்றது.
முதல் நாளில் சென்னை முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துரை வழங்கினார். 100 அடி கம்பத்தில், ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், மாநாட்டு இலச்சினை பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, மாநாடு ஆய்வு மலர் வெளியிடப்பட்டது. ஆன்மிக அன்பர்கள், ஆதீனங்கள், நீதிபதிகள், வெளிநாட்டைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு பேசினர். இந்த மாநாட்டில் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர்.
மாநாட்டின் நிறைவு விழா நேற்று மாலை 7 மணிக்கு நடைபெற்றது. அப்போதுபோகர் சித்தர் விருது மருத்துவர் கு.சிவராமனுக்கு நக்கீரர் விருது, முனைவர் பெ. சுப்பிரமணியத்துக்கு அருணகிரிநாதர் இயல் விருது, திருப்புகழ் மதிவண்ணனுக்கு அருணகிரிநாதர் இசை விருது என மொத்தம் 16 பேருக்கு விருது வழங்கப்பட்டது.
1,003 பேர் ஆய்வு கட்டுரைகள்
மாநாடு நடைபெற்ற பழனியாண்டவர் கல்லூரியில் 4.40 ஏக்கர் பரப்பளவு மைதானத்தில் 2,000 பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட மாநாட்டு அரங்கம், 500 பேர் வரை அமர்ந்து சாப்பிடும் வகையில் உணவு கூடம், 200 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் விஆர் (விர்ச்சுவல் ரியாலிட்டி) மற்றும் 3டி திரையரங்கம், அறுபடை வீடு கண்காட்சி அரங்கம் ஆகியவை அமைக்கப்பட்டிருந்தன. 39 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 1,003 பேர் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
தமிழர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்
நிறைவு விழாவில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நினைவாக பழநியில் ‘வேல்’ நிறுவுவது, வெளிநாட்டில் வாழும் முருக பக்தர்கள் தமிழகத்திற்கு வருகை தரும் போது திருவிழா மற்றும் சிறப்பு காலங்களில் வழிபாட்டிற்கு உதவும் வகையில் மொபைல் செயலி மூலம் வழிபாட்டு வசதிகள் செய்து தருவது,
சித்த மருத்துவத்தை பாதுகாக்கவும் மேம்படுத்தவும், அதனை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்றிடவும், பழனியில் “தமிழர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்” அமைத்திட அரசுக்கு பரிந்துரை, முருகன் கோயில்களில் ஓதுவார்கள் நியமனம் செய்தல், தேனூர் வரகவி சொக்கலிங்கனார் எழுதிய ‘சேய்த்தொண்டர் புராணம்’ என்ற நூலை, தெளிவுரையுடன் கூடிய பதிப்பாக முதல் முறையாக வெளியிடுவது என்பன உட்பட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.