கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீடு… கவனம் ஈர்த்த நிகழ்வுகள்… கவனிக்க வைத்த பாஜக-வினர்!
சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில், தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். ரூ.100 முகமதிப்பு கொண்ட அந்த நாணயத்தில் ‘தமிழ் வெல்லும்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், இந்தியாவின் மூத்த அரசியல் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நினைவு நாணயம் வெளியிட தமிழ்நாடு அரசு திட்டமிட்டு, இது தொடர்பாக மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது.அக்கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு அதற்கு ஒப்புதல் அளித்தது.
பாஜக-வினருக்கு அழைப்பு
இதனைத் தொடர்ந்து இந்த சூழலில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டது. நாணய வெளியீட்டு விழாவுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அழைப்பது என்பதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் முதன்மை தேர்வாக அமைந்தது. இதனை முதலமைச்சரே தனது பேச்சில் குறிப்பிட்டார்.
ராஜ்நாத் சிங் வருவதால் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாது, பாஜக-வைச் சேர்ந்த முக்கிய தலைவர்களையும் அழைக்க மு.க. ஸ்டாலின் முடிவு செய்தார். அதன்படி மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக எம்.எல்ஏ-க்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், கலைவாணர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்ற விழாவில் அவர்களும் விழாவில் பங்கேற்றனர்.
நாணயத்தை வெளியிட்ட ராஜ்நாத் சிங்
விழாவில், கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து இந்த நாணாயத்தின் மாதிரியை காட்சிக்கு திறந்து வைத்தார் ராஜ்நாத் சிங்.
நாணயத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது என்ன?
கலைஞரின் நினைவு நாணையத்தின் ஒரு புறம் சிரித்த முகத்துடன், ‘முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் நூற்றாண்டு 1924 – 2024’ என ஆங்கிலத்திலும் இந்தியிலும் அச்சிடபட்டுள்ளது. மறுபுறத்தில் தேசிய நினைவுச் சின்னத்துடன் ரூ.100 என மதிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ‘இந்தியா’ என ஆங்கிலத்திலும், ‘பாரத்’ என இந்தியிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எழுந்து நிற்க சொன்ன ராஜ்நாத் சிங்
விழாவில் ராஜ்நாத் சிங் பேசும்போது, “உன்னதமான தலைவர் கருணாநிதி” எனப் புகழாரம் சூட்டியதோடு, கருணாநிதிக்கு அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, அரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று, கைதட்டி ‘கருணாநிதி புகழ் ஓங்குக’ என்று குரல் எழுப்பினர்.
நினைவிடத்தில் மரியாதை
விழாவுக்கு வருவதற்கு முன்னர் மெரினா கடற்கரைக்குச் சென்ற அமைச்சர் ராஜநாத் சிங், அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரது நினைவிடங்களுக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.இந்த நிகழ்வின் போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சற்று தூரத்தில் நின்றிருந்தார் அவரை முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறையில் வரச் சொல்லி அழைத்தார். ஆவரும் அழைப்பை ஏற்று அருகில் வந்தார்.இதனை அடுத்து கலைஞர் அருங்காட்சியகத்தை ராஜ்நாத் சிங் பார்வையிட்டார் இதற்காக அவரை பேட்டரி கார் மூலம் அழைத்துச் சென்றனர்.அவர்களுக்குப் பின்னால் இன்னொரு பேட்டரி காரில் மத்திய இணை அமைச்சர் வேல்முருகன் அண்ணாமலை ஆகியோரும் சென்றனர்.
மோடிக்கு நன்றி சொன்ன ஸ்டாலின்
இதனிடையே விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நாணய வெளியீட்டுக்காக ஒத்துழைத்தமைக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “அனைத்துக் கட்சியினருடனும் நட்பு பாராட்டும் ராஜ்நாத் சிங் கருணாநிதி நினைவு நாணயத்தை வெளியிட பொருத்தமானவர். சுதந்திர தினத்தன்று மாநில முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் கருணாநிதி. கருணாநிதி நூற்றாண்டு விழாவை இந்தியாவே கொண்டாடுகிறது. மாநில உரிமைகளுக்காகப் போராடிய கருணாநிதி நெருக்கடி நேரங்களில் நாட்டுக்கு கைகொடுத்தார். தமிழகத்தில் நடப்பது ஒரு கட்சி சார்ந்த அரசல்ல; இங்கே ஓர் இனத்தில் அரசு நடக்கிறது” எனக் கூறினார்.
ராஜ்நாத் சிங் புகழாரம்
தொடர்ந்து பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “கருணாநிதி துணிச்சல் மிக்க தலைவர். தலைசிறந்த நிர்வாகி. 1960 முதல் தற்போது வரை ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக திமுகவை வளர்த்தவர். விளிம்புநிலை மக்களுக்கு தரமான வாழ்க்கை நிலையை கொண்டுவந்தவர். 1989லேயே மகளிருக்கான சுய உதவிக் குழுக்களை கொண்டுவந்தவர். பாலின சமத்துவம் பேணும் வகையில் மகளிர் சுய உதவித் திட்டத்தை அவர் கொண்டு வந்தார். பல்வேறு தேசிய கட்சிகளுடன் நல்லுறவைப் பேணியவர். தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் அரசியல் வரைபடத்தை உருவாக்குவதில் கருணாநிதிக்கு முக்கிய பங்கு இருக்கிறது. கூட்டாட்சி தத்துவத்துக்கு பாடுபட்ட கருணாநிதி நாட்டின் நலனுக்காகவும் குரல் கொடுத்தவர்” எனப் புகழாரம் சூட்டினார்.